திரைக் கதிர்

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம்  "பிரம்மாண்ட நாயகன்'. புராண காலத்தில் தெலுங்கு
திரைக் கதிர்

* பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம்  "பிரம்மாண்ட நாயகன்'. புராண காலத்தில் தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ராமா என்ற வேங்கடேச பெருமாளின் பக்தனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாகவும் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமா கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கிறார். ஆண்டாளாக அனுஷ்கா வேடம் ஏற்றுள்ளார்.  பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய்குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் இக்கதையின் பிரதான வேடங்களை ஏற்கிறார்கள். புராண காலத்து சம்பவங்களை கொண்டு கற்பனை கலந்த விதத்தில் இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி கற்பனைகளுக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 60 படங்களுக்கு மேல் இயக்கி தெலுங்கு திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ள கே.ராகவேந்திர ராவ் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.  மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற செளரப் ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார். கீரவாணியின் இசையில் இப்படத்துக்காக 12 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம்,  வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம்,  பாலாஜி என்று பெயர் வரக்காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளிப்பதாக காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. 

• "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகை ஓவியா வெளிப்படுத்திய உணர்வுகள், பலரையும் நெகிழ்த்தி விட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு, "ஓவியாவின் உண்மையான முகம் எனக்கு பிடித்திருக்கிறது'' என சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து சிம்பு ஓவியாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பினார் சிம்பு. "இது முற்றிலும் போலியான செய்தி. ஓவியா குறித்து நான் எந்த செய்தியையும் பதிவு செய்யவில்லை. அவரை காயப்படுத்தும் இந்த செய்தி, என்னையும் காயப்படுத்தியுள்ளது. இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன். மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். என்னிடம் மோதும் போக்கை யாராக இருந்தாலும் கை விட வேண்டும். நான் என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே'' என்று காட்டமாக தெரிவித்துள்ளார் சிம்பு. 

• நட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "களரி'.  கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.  வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன்,  ரியாஸ் தோஹா உள்ளிட்ட பலர் கதையின் முக்கிய வேடங்களை ஏற்கிறார்கள். கதை,  திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கிரண் சந்த். களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்க்களம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கொச்சி மாநகரத்தில் "வாத்துருத்தி' என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறை இடைவெளியால் உருவாகும் பிரச்னைகள் இதன் பிரதான அம்சமாக இருக்கும். வாத்துருத்தி பகுதியில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், காதல், காமெடி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.  பிரபாகர் படத்தொகுப்பு செய்கிறார். வி.வி.பிரசன்னா இசையமைக்கிறார். 

• "எனது வேலையைப் பொறுத்தவரையில் இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மிகவும் பாதுகாப்பான நடிகன். நாளை எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?, கிடைக்காதா?  என்பது பற்றி நான் யோசிப்பதில்லை. எனக்கு வரவேண்டியது வரும்.  அதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இறைவன் எனக்குத் தர மாட்டார். ஆறடி ஆழத்தில் புதைக்கப்படும்போது என்னுடன் நான் எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. திரைத்துறையில் போட்டி அவசியமில்லை என நினைக்கிறேன்.  போட்டிக்கு ஒரு காரணம் தேவை. நமது படம் ஜெயித்தால் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்.  ஆனால்,  எனக்கு நானே போட்டியாளன்தான்.  அப்போதுதான் முந்தைய படத்தை விட சிறப்பாக நடிக்க முடியும். என்னால் முடிந்த சிறந்த நடிப்பை, ஒவ்வொருமுறையும் என்னைப் பார்க்க வரும் ரசிகருக்கு நான் தர விரும்புகிறேன்'' என நெகிழ்ந்துள்ளார் தனுஷ்.  "படம் பெரிய அளவில் வசூலிக்காதது என்னை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். "ஷாமிதாப்' படத்தில் நடித்தது எனக்குப் பெருமையே, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன். ஒரு நடிகனாக எல்லா முடிவையும் சரியாக எடுக்க முடிந்தால் வசூலிலும் வெற்றி பெறலாம். ஆனால், சில சமயங்களில் சரியாக இருக்கும், சில சமயங்களில் இருக்காது. ஷமிதாப் ஒரு உயர்ந்த திரைப்படம். அதை நினைத்து நான் பெருமையடைகிறேன்''  என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ். 

• பெண்கள் மட்டுமே நடித்த படங்கள் வெளிவந்துள்ள நிலையில், முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்துள்ள முதல் இந்திய திரைப்படம் என்ற சிறப்போடு உருவாகி வரும் படம்   "ஆடவர்'. தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்,  கிரண் என்ற 10 வயது சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை முன் வைத்தே மற்ற கதாபாத்திரங்கள் பயணிக்கும் விதமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா வாழ் தமிழர் தமிழ் அடியான் மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமானுஷ்யங்களை பின்னணியாகவும் சமூக பிரச்னைகளை முன் வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.  தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் இணைந்து  பாடிய பாடல்கள் இணைய தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. கானா உலகநாதன் பாடியுள்ள "அழகா தெரியுது சென்னை மச்சான்...' என்ற பாடல் தனித்துவம் அடைந்து இணைய தளங்களில் உலா வருகிறது.  இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் பரத்வாஜ், பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குநர் பேரரசு, சண்டைப்பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். 
- ஜி. அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com