ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு...!

இந்த வருடம் பள்ளிப் படிப்பை முடித்து அடுத்த வருடம் நான் கல்லூரியில் சேரும்போது விடுதியில் தங்கிப் படிக்க ஆசைப்படுகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு...!

இந்த வருடம் பள்ளிப் படிப்பை முடித்து அடுத்த வருடம் நான் கல்லூரியில் சேரும்போது விடுதியில் தங்கிப் படிக்க ஆசைப்படுகிறேன். விடுதியில் நான் மற்றவர்களுடன் எப்படிப் பழக வேண்டும்? சுகாதாரத்துடன் வாழ வழி என்ன? நோயின்றி வாழ என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்? 

விக்னேஷ், சேலம்.

ஒட்டுவாரொட்டிகளாக சில நோய்கள் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும்போது ஏற்படக்கூடும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதிலும் முக்கியமாக-ப்ரஸங்காத் - மற்றவர்களுடன் பேசும்போது மிக அருகில் செல்லக் கூடாது. காத்ரஸம்ஸ்பர்ஸாத் - மிக நெருக்கமாக உடலோடு ஒட்டி அமரக் கூடாது. நிஷ்வாஸாத் - பிறருடைய மூச்சுக் காற்றைச் சுவாசிக்கக் கூடாது.


ஸஹபோஜனாத் - மற்றவருடைய சாப்பாட்டுத் தட்டை பயன்படுத்துவதும், ஒரே தட்டில் சாப்பிடுவதையும் செய்யக் கூடாது.

ஸஹஸய்யாஸனாத் - பிறருடைய படுக்கையில் படுக்கக் கூடாது. 
வஸ்தரமால்யானுலேபனாத் -மற்றவருடைய துணிமணிகளை அணிவதையும், மணிமாலைகளை வாங்கி அணிவதும், தொட்டுப் பயன்படுத்திய வாசனாதிப் பொருட்களை உபயோகிப்பதும் கூடாது, ஆகிய குறிப்புகளை நீங்கள் விடுதி வாழ்க்கையின்போது நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. விட்டுப் போன செய்தியாக "உபானஹெü' எனப்படும் செருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, மற்றவர் அணியக்கூடிய காலணிகளை உபயோகிக்க வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். அப்படிப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்று நாம் நினைக்கும்போது, அதற்கான பதிலையும் ஆயுர்வேதம் கூறுகிறது.
குஷ்டம் - உட்பட எண்ணற்ற தோல் உபாதைகளும், ஜ்வரஸ்ச - காய்ச்சலும், சோஷஸ்ச - உடல் இளைப்பும், நேத்ராபிஷ்யந்த ஏவச - கண்நோயும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நல்லெண்ணமும் நன்னடத்தையும் என்றும் கைவிடாது நீங்கள் இருக்க வேண்டும். சூழ்நிலையும் காலமும் மதிப்பிடுபவரின் மனப்பான்மையும் உங்களுடைய நல்லதை நல்லதென ஒத்துக் கொள்ள மறுக்கலாம். உங்களுடைய நன்னடத்தையான செயலைக் கூட விரும்பாத விடுதிவாசிகள், அதே செயலை ஐந்தாண்டுகள் கழித்து, அவர்களைச் சந்திக்கும்போது உங்களுடைய செயலால் அவர் பெற்ற நலனை நினைவுகூர்ந்து பாராட்டுவார். இப்படிக் காலத்தையும் தேசத்தையும் சூழ்நிலையையும் கடந்து நின்று பார்க்கும்போது, உங்களுடைய எண்ணமும் செயலும் நல்லதெனத் தோன்றி, பெரும் மதிப்பை அவர்களிடமிருந்து நீங்கள் பெருவீர்கள்.

பல வகையான மனிதர்களின் சங்கமத்தில் வாழக் கூடிய விடுதி வாழ்க்கையில், பத்துவிதமான பாவச் செயல்களுக்கான வழிகள் சில தீய மனிதர்களின் சேர்க்கையால் ஏற்படக்கூடும். அவை இம்சை, களவு, தகாத உறவு, கோள் சொல்லுதல், கடுமையான பேச்சு, பொய், முன் பின் முரணாகப் பேசுதல், மனதால் பிறரைப் பகைத்தல், பிறர் செல்வத்தைக் களவாடும் எண்ணம், படிக்கும் படிப்பைத் தவறாக அறிதல்.

மேற்குறிப்பிட்ட பத்துவகையான பாவச் செயல்களிலிருந்து விலகி இருங்கள். உடல், சொல், எண்ணம் இவற்றால் ஏற்படும் பாவச் செயல்களின் விளைவுகளால் பின்னாளில் மீளாத் துயரங்கள் ஏற்படக் கூடும். உடல் நலம், செல்வாக்கு, அறிவு, வயது இவற்றுக்கேற்ப செயல்படுபவனுக்கு ஆயுளானது சுகமாகவும் இதமாகவுமிருக்கும் என்று "அஷ்டாங்க ஸங்கிரஹம்' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. 

விடுதியில் நோயின்றி வாழ சியவனப்ராசம் எனும் லேகிய மருந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். ஒத்துக் கொள்ளும் உணவை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாப்பிடவும். பிறரிடம் அன்புடனும் அனுசரணையுடனும் நடந்து கொள்ளவும். விடுதி வாழ்க்கை இன்பமாக இருக்கும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com