திரைக் கதிர்

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வரும் படம் "கடைசி பெஞ்ச் கார்த்தி'.
திரைக் கதிர்

• இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வரும் படம் "கடைசி பெஞ்ச் கார்த்தி'. பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாபில் மியூசிக்கல் ஆல்பங்களின் பிரபல மாடலான ருஹானி ஷர்மா, அங்கனாராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குநர் காசி, மூணார் டேவிட், வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி பார்கவன். இவர் தமிழில் "வெல்டன்', "ஒரு காதல் செய்வீர்', "திரு ரங்கா' ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

• சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்குச் சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது. நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரிலேயே அது இயங்கி வந்தது. 1984-ஆம் ஆண்டு இந்த திரையரங்கத்தை திறந்து வைத்தவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். 2008-ஆம் ஆண்டு அந்த திரையரங்கம் மூடப்பட்டு திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திரையரங்கத்தை மையமாகக் கொண்டு தற்போது "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படித்தான்' படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார். பானுப்பிரியா, காளி வெங்கட், லொள்ளு சபா சாமிநாதன், சித்தரா, லதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்துடன் இணைந்து என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இசாக் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதற்கு முன்பு அகடம் என்ற படத்தின் மூலம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

• "இருமுகன்' படத்தைத் தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் "சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரம் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டு "வாலு' படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்கிறார். விக்ரமின் 53-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மூவிங் பிரேம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. விக்ரம் ஜோடியாக நடிப்பதற்கு காஜல் அகர்வால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. மூவருமே வெவ்வேறு படங்களில் நடித்து வருவதால், அவர்களிடம் கால்ஷீட் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தற்போது தமன்னா தேர்வாகியுள்ளார். சூரி, ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக மாயாபாண்டி பணியாற்றுகிறார். சண்டை பயிற்சி இயக்குநராக ரவிவர்மன் பணியாற்றுகிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

• பாலிவுட்டில் படங்களை இயக்கத் தொடங்கிய பின்னர், தமிழ் சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை பிரபுதேவா. இதனிடையே கடந்த ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய "தேவி' படத்தில் நடித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடிப்பதற்காக கதைகளைக் கேட்டு வந்தார். குறிப்பாக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் கதைகளை தேர்வு செய்து வந்தார். இதையடுத்து தற்போது "முண்டாசுப்பட்டி', "இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். படத்துக்கு "எங் மங் சங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இயக்குநர் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

• ஆஸ்கர் மற்றும் கிராமிய விருதுகளின் மூலம் உலக இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், அதன் பின் இசைப் பயணங்களில் தனி ஆர்வம் காட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனது இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தார். அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப் பயண நிகழ்ச்சியின் தொகுப்பு, உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்த இசைத் திரைப்படத்துக்கு ஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் இந்த இசைத் திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி பிரத்யேகமாக திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி உருவாகியுள்ள இந்த இசைத் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
}ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com