குத்துச் சண்டையில் குத்து ஒவ்வொன்றும் பேச வேண்டும்!

குத்துச் சண்டையில் ஆசியா பஸிஃபிக் சாம்பியனாகியிருக்கும்  விஜேந்தர் சிங், குத்துச் சண்டையில் இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை.
குத்துச் சண்டையில் குத்து ஒவ்வொன்றும் பேச வேண்டும்!

குத்துச் சண்டையில் ஆசியா பஸிஃபிக் சாம்பியனாகியிருக்கும்  விஜேந்தர் சிங், குத்துச் சண்டையில் இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை. முப்பத்தொரு வயதாகும் விஜேந்தர் தொழில்முறை குத்துச் சண்டை வீரராக மாறியதும்,  தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளிடம் அதிகரித்து   கூட்டி வருகிறார்.     

சென்ற  2016 ஜூலையில், குத்துச் சண்டை வீரர் கெரி ஹோப் என்பவரை  வீழ்த்தி விஜேந்தர் வெற்றி பெற்றதுடன்  நிற்காமல், கிடைத்த  சாம்பியன் பட்டத்தை மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு சமர்ப்பணம் செய்தார்.

சென்ற  வாரம் (Dec 2016) டில்லியில் நடந்த ஆசியா பசிஃபிக் தொழில்முறை சூப்பர் குத்துச் சண்டைப் போட்டியில்,    விஜேந்தர் சிங்  தான்சானியா நாட்டு வீரர் பிரான்சிஸ் செகாவை  பார்வையாளர்களை மலைக்க... சிலிர்க்க வைத்து தனது  எட்டாவது வெற்றியை வெறும் பத்து  நிமிடங்களில் பதிவு செய்து அசத்தியிருக்கிறார். அதிரடியாக இறங்கிய விஜேந்தரின் குத்துகள் எதிராளியை நிலை குலையச் செய்தன. 

போட்டி முடிவானதிலிருந்தே  செகா எக்கச்சக்கமாக  அலட்டிக் கொண்டார். "நான் யார்?  என் பேக்கிரவுண்ட் என்ன? என்று  தெரியாமல் விஜேந்தர் என்னோடு மோதுகிறார்.. நான்  உலக சாம்பியன் பட்டம் வென்றவன். எனக்கு விஜேந்தர்  ஒரு குழந்தை மாதிரி.

விஜேந்தர் இருக்க வேண்டிய இடத்தில் அவரை  இருத்துவேன். குத்துச் சண்டை யுக்திகளை கரைத்துக் குடித்திருக்கும்  என்னோடு ஒரு கத்துக்குட்டியை  மோத விட்டதற்காக இந்தியர்கள் வருத்தப்படப்   போகிறார்கள். விஜேந்தர்  களத்தில் ரத்தம் சிந்தி  தோல்வி அடையப் போவது  நிச்சயம். விஜேந்தர் தோல்வி எப்போதோ உறுதியாகிவிட்டது.'' 

போட்டிகளின் முன் போட்டியாளார்கள் இப்படி பந்தாவாகப்  பேசுவது  சகஜம்தான்.  தொழில் முறை குத்துச் சண்டை வீரராக பதினேழு ஆண்டுகளாகக் குத்துச் சண்டை உலகை ஆண்டு வருபவர்  ஃபிரான்ஸிஸ் செகா. அவர் பங்கேற்ற நாற்பத்து மூன்று போட்டிகளில்  முப்பத்திரண்டு வெற்றிகள் செகாவிற்குச் சொந்தம்.  முப்பத்திரண்டு வெற்றிகளில் பதினேழு போட்டிகளில்  நாக் அவுட் முறையில் வெற்றி கனிகளைக் கொய்தவர்.  இந்த சாதனைகள்தாம்   செகாவை அப்படி பேசச் செய்தது. ஆனால் செகா  விஜேந்தரைக் கொஞ்சம் அதிகமாகவே உசுப்பிவிட்டார். 

செகாவின் வெற்றிப் பட்டியல் இந்திய குத்துச் சண்டை ரசிகர்களை மிரட்டினாலும்,  விஜேந்தரைக் கொஞ்சமும்  கிலேசம் கொள்ளச் செய்யவில்லை. " நான் எதிராளியின் சாதனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. செகா இந்தத் துறையில்  சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.  அவருக்குப் பல ஆண்டு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால், நான் அவருக்குக் குறைந்தவன் அல்ல. என்னிடமும் ஒலிம்பிக்ஸ் பதக்கம் இருக்கிறது.  இருவருக்கிடையில் நடக்கும்  போட்டிதான்  வெற்றியாளரைத் தீர்மானிக்கிறது. பழைய சாதனைகள்  அல்ல.  நான் திறமையாக குத்துச் சண்டை செய்தால் நிச்சயம் நான் ஜெயிப்பேன். என் ஆக்ரோஷத்தை, அதிரடி குத்துகளை,  குத்துச்சண்டை நடக்கும் மேடையில் மட்டுமே காட்டுவேன்'' என்றார் விஜேந்தர். 

சொன்னது மாதிரியே செகாவிற்குத் தண்ணீர்  காட்டியதில்தான்  விஜேந்தரின் அபாரத் திறமை நிரூபணமாகியுள்ளது.  போட்டி தொடங்கி பத்து நிமிடங்களில் செகாவைத்  தோற்கடித்துவிட்டார் விஜேந்தர்.

வெற்றி பெற்ற பின் முத்தாய்ப்பாக விஜேந்தர் சொன்னது,  பஞ்ச்  வசனமாக அமைந்தது விட்டது. 

"செகா அதிகம் பேசவே விரும்பினார், ஆனால் நான் எனது குத்து (Punch) ஒவ்வொன்றும் பேச வேண்டுமென்று விரும்பினேன்.  விரும்பியது நடந்தது. செகா வேறு என்னை முதல் ரவுண்டிலேயே சாய்த்துவிடப்  போவதாக மிரட்டியிருந்தார். ஆனால்  களத்தில் இறங்கிய கொஞ்ச  நேரத்தில் செகாவிடம் விஷயமில்லை, சும்மா   ஆவேசமாகப்   பேசுவார் என்பதைத் தெரிந்து கொண்டேன். பிறகென்ன   பத்து நிமிடத்தில்  ஒரு  நாக் அவுட்டில்  செகாவை  வீழ்த்தி கணக்கை முடித்தேன்.

போட்டிகள் நெருங்கும் போதுதான், இந்தியாவில்  விழிப்புணர்வு  வருகிறது. பயிற்சிகள் தரப்படுகின்றன. போட்டிகள் முடிந்ததும்  பயிற்சிகளை மறந்துவிடுவார்கள். இந்தப் போக்கு மாறினால், எல்லா  விளையாட்டுகளிலும் இந்திய அணிகளால் முத்திரை பதிக்க முடியும்'' என்கிறார் விஜேந்தர் சிங்.
-பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com