திரைக் கதிர்

உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகி வரும் படம் "சதுர அடி 3500.' ரகுமான், இனியா, நிகில் மோகன், ராம்கோபால் வர்மாவின் "ஐஸ்கிரீம்' படத்தில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப்
திரைக் கதிர்

* உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகி வரும் படம் "சதுர அடி 3500.' ரகுமான், இனியா, நிகில் மோகன், ராம்கோபால் வர்மாவின் "ஐஸ்கிரீம்' படத்தில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சுவாதி தீக்ஷித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஸ்டீபன். சென்னை மாநகரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. த்ரில்லர் பாணி கதைகள் பெரும் அளவில் வெளிவந்து  கொண்டிருக்கும் இவ்வேளையில், அதே பாணியில் இப்படம் உருவாகி வருகிறது. வழக்கமான அமானுஷ்ய சக்திகளின் கதை என்றில்லாமல், மனிதர்களை மட்டுமே மையமாக கொண்டு நடந்த சம்பவம் இது. ஆவி புகுந்த இனியாவின் ஆக்ரோஷமான நடிப்பில் சுவாதி தீக்ஷித் மிரளும் காட்சிகள் திகிலாக படமாகியிருக்கின்றன. மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளுக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கிறார். ஆனந்தகுட்டன், ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

* நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட சீனியர் நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து விட்டனர். "மாயா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "அறம்', "டோரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படங்கள் முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே மையமாகக் கொண்டு நகரும் கதைகளாக உருவாகி வருகின்றன. அனுஷ்காவும் "அருந்ததி', "பாகுபலி' உள்ளிட்ட படங்கள் போன்று தன்னை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது த்ரிஷாவும் இணைகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, தன்னை முன்னிறுத்துகிற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார். தற்போது அதன் முதன் முயற்சியாக உருவாகும் படத்துக்கு "1818' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைன்ட் டிராமா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், ரமேஷ் திலக், மீரா கோஷல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ரிதுன்சாகர் எழுதி இயக்குகிறார்.  

* வெள்ளி விழா, பொன் விழா என்ற காலகட்டம் போய் ஒரு வாரத்துக்கே மல்லுக் கட்டுகிறது தமிழ் சினிமா. இந்நிலையில் 100-ஆவது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறது "தர்மதுரை' படக்குழு. "ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர். தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் 100-ஆவது நாளை இப்படம் நிறைவு செய்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று படக்குழுவினருக்கு கேடயம் வழங்கினார். 

* "பைரவா' படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார் விஜய். ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினரைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நகைச்சுவை பகுதிக்கு வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால், சமந்தா என இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய அட்லி தரப்பு ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் சமந்தா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் "கத்தி', "தெறி' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சமந்தா. தெலுங்கு படமொன்றில் தற்போது நடித்து வரும் சமந்தா, அடுத்து விஜய் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். விஜய்யின் 61-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். புதுமுகம் விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக ரூபன் பணிபுரியவுள்ளார். பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல்கட்ட  படப்பிடிப்பு தொடங்குகிறது. 

* விஜய்யின் "பைரவா' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், போட்டியாக பலரும் தங்களது வெளியீட்டு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். பார்த்திபனின் "கோடிட்ட இடங்களை நிரப்புக', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "புருஸ்லீ', ஜெய் நடிக்கும் "எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட படங்களும் பொங்கலைக் குறி வைத்து காத்திருக்கின்றன. இந்த பட்டியலில் குறிப்பிடும்படியான ஹாலிவுட் படமும் இடம்பெறுகிறது. ரஜினியுடன் "கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோன்,  முதன்முறையாக நடிக்கும் ஹாலிவுட் படம் "டிரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆப் ஸôன்டர் கேஜ்' வின் டீசல் ஹீரோவாக நடிக்கும் இப்படம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. பாலின பிரச்னைகளைக் களமாக கொண்ட இப்படம், தமிழகத்திலும் வெகுவான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட்டில் வெளியாவதற்கு முன்பே இந்தியாவில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் இப்படத்துக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது.  
-ஜி. அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com