ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரைக் கட்டுப்படுத்த...!

சிறுநீர்ப்பையின் அடியில், சிறுநீரை வெளியேற்றும் குழாயைச் சுற்றியுள்ள புரஸ்தோளக் கிரந்தியின் வீக்கத்தினால், வயோதிகத்தில்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரைக் கட்டுப்படுத்த...!

என் வயது 82. எனக்கு சில மாதங்களாக சிறுநீர் கட்டுப்பாட்டில் இல்லை. தானாக வெளியேறுகிறது. இதனால் உடைகள் நனைந்து விடுகின்றன. அதுவும் இரவில் அடிக்கடி அதிக அளவில் போகிறது. மேலும் உடல் முழுவதும் பொடிப்பொடியாக உதிர்கிறது. நமைச்சல் உள்ளது. சொறிந்தால் ரத்தம் வருகிறது. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?
கே.வி. நாகராஜ சர்மா, சென்னை.

சிறுநீர்ப்பையின் அடியில், சிறுநீரை வெளியேற்றும் குழாயைச் சுற்றியுள்ள புரஸ்தோளக் கிரந்தியின் வீக்கத்தினால், வயோதிகத்தில் இரவில் அடிக்கடி சிறுநீர் வெளியேறலாம். இந்தக் கிரந்தியானது பலவித தசை நார்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றினுடைய இயக்கம், அபானவாயு எனும் வாயுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. நரம்புகளைச் சார்ந்த செயல்திறன் - வயோதிகத்தில் வாயுவினுடைய இயற்கை குணங்களாகிய வறட்சியும், குளிர்ச்சியும் கூடுவதால், அங்குள்ள நரம்பு மண்டலமும், தசைநார்களும் தம்முடைய நெய்ப்பை இழந்து இறுகுவதாலும், குளிர்ச்சியான குணத்தால் சிறுநீர் கட்டுப்பாட்டை அடிவயிற்றுப் பகுதி இழப்பதாலும் திறனற்றுப் போவதால் தங்களுக்கு சிறுநீர் அதிக அளவில் இரவில் போவதாய்த் தோன்றுகிறது.
சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய பல கழிவுகளும், சரிவர வெளியேறாமல் மறுபடியும் சிறுநீரகங்களின் வழியாக உறிஞ்சப்பட்டு, உடல் உட்பகுதிகளில் சுழலும் தறுவாயில், தோலில் பொடிப் பொடியாக, நமைச்சலுடன் இரத்தமும் வரத் தொடங்கும். புதிய அணுக்களின் உற்பத்தியைத் தோலும் வயோதிகத்தில் இழப்பதால் , தோல் வெண்மையுறுவதும், சுருங்குவதும், நீர்ச்சத்து குறைவினால் வடு வெடிப்பதும் அதிகம் காணப்படுகிறது.
இது போன்ற உடல் உபாதைகளைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதில் உணவும் - செயலும் - மருந்தும், ஒருங்கே சீராகச் சேர்வதால் உபாதைகளைப் பெருமளவில் தவிர்க்கலாம் என்றும், பல ஆயுர்வேத நூல்களில் காணப்படுகின்றன. உணவில் வாயுவின் சீற்றதை அதிகப்படுத்தும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை, மிதமான அளவில் உட்கொள்வதால், நரம்புகளின் கிரியா ஊக்கிகள் நன்கு செயல்படவும், உடல் உறுப்புகளின் உட்புற நெய்ப்பும் குறையாதவாறு கவனித்துக் கொள்ளலாம். தலை முதல் உள்ளங்கால் வரை வெது வெதுப்பாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும், தோலினுடைய வறட்சியானது ஏற்படாதவாறு பாதுகாப்பை அளிக்கும். நிறைய ஓய்வும், மனநிம்மதியும், மகிழ்ச்சியும்} செயல்வடிவமாக அமைந்தால் - வாயுவினுடைய இயற்கைச் சீற்றதை உடலில் தவிர்க்கலாம். அவ்வப்போது, ஏற்படும் உடல் உபாதைகளுக்கான மருந்துகளைச் சரிவர சாப்பிட்டு, பிரச்னைகளைத் தவிர்ப்பதன் மூலமாக, வயோதிகத்தில் உடல் சிரமங்களைப் பெருமளவில் தவிர்க்கலாம்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீர்ப் போக்கை இரவில் கட்டுபடுத்த ஆயுர்வேத நெய் மருந்தாகிய சுகுமாரம் க்ருதம் எனும் மருந்தை சுமார் பத்து மில்லி லிட்டர் நீராவியில் உருக்கி, காலை மதியம் இரவு, உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக, சுமார் மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். மருந்தைச் சாப்பிட்ட பிறகு , சிறிது சூடான தண்ணீரை அருந்தினால், உட்சென்ற நெய் மருந்து, நன்றாக குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, விரைவாகச் செயல்படும்.
உடல் அரிப்பையும், பொடிப்பொடியாக உதிர்வதைத் தடுக்கவும், ரத்தக் கசிவைக் குணப்படுத்தவும், நால்பாமராதி தைலத்தையோ, தூர்வாதி கேர தைலத்தையோ உடலெங்கும் தேய்த்து, சுமார் நாற்பதைந்து நிமிடங்கள் ஊறிய பிறகு, வேப்பம்பட்டை, சரக்கொன்றை பட்டை, புங்கம்பட்டை, அரசம்பட்டை, ஏழிலைப்பாலைப்பட்டை, கருங்காலிக்கட்டை போன்றவை கிடைத்தமட்டில், தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு, குளிப்பதற்காகப் பயன்படுத்தலாம். உடலிலுள்ள எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற சீயக்காய் தூளுடன், வெந்தயம், செம்பருத்திப்பூ, பூலாங்கிழங்கு, காய்ந்த எலுமிச்சம்பழத் தோல், பச்சைப்பயறு ஆகியவற்றைக் பொடித்துக் கலந்து, அரிசி வடித்த கஞ்சியினோடோ, தயிர்த் தண்ணீரோடோ சேர்த்துக் குழைத்துப் பயன்படுத்தலாம்.
பச்சரிசி, தோலுடன் கூடிய முழு ஊளுந்து, கறுப்பு எள்ளு ஆகியவற்றை 4:2:1 என்ற கணக்கில் எடுத்து ரவை அளவாகப் பொடித்து கஞ்சி காய்ச்சி, அதில் சிறிது பசும்பாலும், சர்க்கரையும் கலந்து காலை உணவாகச் சாப்பிட, உட்புற நெய்ப்பானது நன்கு பாதுகாக்கப்பட்டு, உறுப்புகளின் சுருங்கி விரியும் தன்மையானது குன்றாது நிலைக்கும். இதற்கு “க்ரூசரா” என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. வயோதிகத்தில் காலையில் சாப்பிட ஏற்ற கஞ்சியாகும். அமுக்கராசூரணம் எனும் அஸ்வகந்தா சூரணத்தை சுமார் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரவில் சிறிது சூடான பாலுடன் சாப்பிட, நரம்பு மண்டலம் நன்கு வலுப்படும். சர்க்கரை உபாதையில் குறிப்பிடப்படும் பத்து மில்லி லிட்டர் நெல்லிக்காய் சாறுடன், மூன்று கிராம் மஞ்சள் தூள் கலந்து, டீ ஸ்பூன் தேனும் குழைத்து, காலை உணவிற்கு அரை மணி முன் சாப்பிட அதிக அளவில் வெளியேறும் சிறுநீரை நன்கு கட்டுப்படுத்தலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com