ஒன்ஸ் மோர்

இப்போது திருமலை நாயக்கர் மகால் வாசலில் நிற்கிறோம்.  "கய்டு' பழனிச்சாமி என்பவர் நாம் வெளியூர்க்காரர் என்பதை எப்படியோ ஊகித்துக்கொண்டு நம்மை நெருங்கி வருகிறார்.
ஒன்ஸ் மோர்

இப்போது திருமலை நாயக்கர் மகால் வாசலில் நிற்கிறோம்.  "கய்டு' பழனிச்சாமி என்பவர் நாம் வெளியூர்க்காரர் என்பதை எப்படியோ ஊகித்துக்கொண்டு நம்மை நெருங்கி வருகிறார்.
"உள்ற வாங்க''  அன்போடு அழைக்கிறார். 
" என்ன பாக்குறீக? உயரம் அம்பத்தெட்டு அடி; சுத்தளவு பதினாறு அடி... மூன்று பேர் சேர்ந்து கைகோத்து அணைச்சாத்தான் தூணை வளைச்சுப் பிடிக்க முடியும். கட்டடத்தைப் பார்த்தீகளா?
 கடுக்காச் சாறு,  கரும்புச் சாறு... அரபி நாட்டுச் சுண்ணாம்பு... பதனி... இவ்வளவும் சேர்த்து சாந்து கூட்டிக் கட்டப்பட்டதாச்சே! தூணுக்கு மட்டும்தான் சுண்ணாம்பு அடிப்பாக, கூரையிலே சுண்ணாம்பு பிடிக்காது...''
 "இது  கட்டி எத்தனை வருஷம் ஆகியிருக்கும்?'' 
"முன்னூறு வருஷத்துக்கு மேலே ஆகுது... அஸ்திவாரம் போட்டுக் கட்டடத்தை முடிக்க முப்பத்தாறு வருஷம் ஆச்சு... கடம்ப வனமாயிருந்த இந்த இடத்தை அழிச்சு வண்டியூர் தெப்பக்குளத்திலேர்ந்து மண் எடுத்து வந்து கட்டினாக. அப்பத்தான் முக்குறுணிப் பிள்ளையார் கிடைச்சாரு. அவரைக் கோயில்லே பாத்திருப்பீகளே... மண் வெட்டின இடம் பள்ளமாப் போனதும் அதைத் தெப்பக்குளமா மாத்திட்டாரு மகாராஜா...''
"எந்த மகாராஜா?''
"திருமலை நாயக்கர்தான், இந்த மண்டகத்திலேதான் (மண்டபத்தின் திரிபு) திருமலை நாயக்கர் தஞ்சாவூர் ராஜா மகளைக் கலியாணம் செஞ்சுக்கிட்டது... இப்போ இங்கே ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட் நடக்குது. இதே இடத்திலேதான் கம்பர் மகன் அம்பிகாபதி அமராவதியைக் காதலிச்சதும்..''
 "என்னய்யா "டூப்' விடுறீங்க?  நீங்க பாத்தீங்களா?''
 " என் கண்ணாலே பாத்தேங்கறேன்...''
"பொய் சொல்லாதீங்க...''
"என்னங்க! இவ்வளவெல்லாம் நிஜத்தைச் சொல்லிட்டு இந்தச் சின்ன விசயத்துக்குத்தானா பொய் சொல்லப் போறேன்! சத்தியமாப் பாத்தேனுங்க. தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியா வந்து அமராவதி சந்தானலச்சுமியைக் காதல் செய்யறாப்பிலே இங்கேதாங்க ஷுட்டிங் நடந்தது.  வாங்க... கள்ளர் புகுந்த இடத்தைக் காட்றேன்..'' அவருடன் போகிறோம்.
  "மேலே பாருங்க..''   அண்ணாந்து பாக்கிறோம்.
  "தரையைப் பாருங்க..'' தரையைப் பாக்கிறோம்.
 "இந்த இடத்துலதான் கள்ளருங்க கன்னம் வெச்சுக் குதிச்சது.. ராஜாவாகப்பட்டவர் "யாராவது எங்கள் மாலுக்குள்ளே கன்னம் வச்சு உள்ளே நுழைஞ்சு இங்குள்ள ஒரு முக்கியமான பொருளை எடுத்துக்கிட்டுப் போயி காண்பிச்சா அவுகளுக்கு இனாமாக மான்யம் தரேன்னு தண்டோராப் போட்டாரு. அதைக் கேட்டுட்டு அழகர்மலைக் கள்ளர்ங்க பதினெட்டு பேரு ராவோடு ராவா வந்து இந்தக் கூரையிலே கன்னம் வச்சு, உடும்பை உள்ற விட்டு அதுல கயிறு கட்டி இறங்கினாங்க. அந்த நேரம் உள்ளே அந்தப்புரத்துலே ராணிமார்கள் தூங்கிட்டு இருந்தாக. அவுங்க அணிந்திருந்த வைர வைடூரியங்களை எடுத்துட்டுப் போயிட்டாக. ராஜா பேராச்சரியம் கொண்டு அவுகளுக்கு வீர கண்டிகை போட்டு நிலம் கொடுத்தாரு. இப்பவும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவங்க இருக்காக மருதையிலே...''
 "அந்தர் ஜாகர் ராணி கே டயமண்ட் லே கயா...'' இன்னொரு "கய்டு' வடக்கத்திக்காரர்களுக்கு இதே கதையை இந்தியில் சக்கை போடாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
"கய்டு' பழனிச்சாமி மேலும் சொல்லுவார்!
 "இதைப் பார்த்தீகளா? இதுதான் இந்த மாலுக்கே சண்ட்ரான பிளேஸ். (ùஸண்டரின் திரிபு) இங்கிருந்து குகை போகுது. இங்கிருந்து மாலுக்கும் கோயிலுக்கும் கலெக்ஷன் (கனெக்ஷனின் திரிபு) இருக்கு. இந்த மாலில்தான் கண்டி ராஜா மகள், தஞ்சாவூர் ராஜா மகள் இரண்டு பேரையும் திருமலை நாயக்கர் கலியாணம் செய்துகிட்டு சந்தோசமா வாழ்ந்தாரு. அந்தச் சிற்பத்தை அங்கே பாருங்க. அவ்வளோதான்... புள்ளக் குட்டிக்காரன்... ஒன்பது குழந்தைங்க இருக்குது. பள்ளிக்கூடத்திலே படிக்கிறாங்க.. பாத்துக் குடுங்க...''
"யாருக்கு? திருமலை நாயக்கருக்கா ஒன்பது குழந்தைங்க?'' 
 "இல்லீங்க முதலாளி எனக்குத்தான்''
 பழனிச்சாமியிடம் காசைக் கொடுத்து விட்டுத் திருமலை நாயக்கர் மகாலிலிருந்து வெளியே வருகிறோம்.
"சாவி' எழுதிய  
"இங்கே போயிருக்கிறீர்களா?' என்ற நூலிலிருந்து.
தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com