மலர் சித்தியின் வாக்கு

வகுப்பில் கணக்கு பாடம் நடந்து கொண்டிருந்தது. சீனிவாசன் சார், மாணவர்களோடு சேர்ந்து கோரசாக படித்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். 
மலர் சித்தியின் வாக்கு

வகுப்பில் கணக்கு பாடம் நடந்து கொண்டிருந்தது. சீனிவாசன் சார், மாணவர்களோடு சேர்ந்து கோரசாக படித்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். 
"வகுத்தலின் சூத்திரம் என்னாது ? பைஆர்ஸ்கொயர்! இருவத்திரண்டு பை ஏழு. மொத்தத் தொகைய என்னாசெய்யணும் ? இதால பெருக்கி ஈவு எடுக்கணும்! எழுது . . இருவத்திரண்டு பை ஏழு, இண்ட்டு''
மாணவர்கள் சீனிவாசன் சார் வகுப்பென்றால் அத்தனை உற்சாகமாய் இருப்பார்கள். ஒருத்தனும் லீவு போடமாட்டான். சைபர் மார்க் வாங்கும் ரெங்கநாதன் கூட இருவது மார்க்கைத் தொட்டுவிடுவான். 
ராமு சம்மணம் போட்ட நிலையிலிருந்து சரிந்து வலதுகால் பின்புறம் வாலாய் நீண்டு போக தரையில் படர்ந்தவாறு குனிந்து எழுதிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்வரிசையில் குமார், சங்கரும் அதேபோல. மூவருக்கும் கணக்கு வகுப்பு என்றாலே தனி குஷிதான். வாத்தியாரைத் தாண்டி விடுவார்கள். அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை முடித்துவிட்டு அவர் நடத்தப்போகும் பாடத்தில் புகுந்திருப்பார்கள். அந்தப் பாடத்தை யார் முதலில் முடிப்பது என்கிற போட்டிதான் அவர்கள் மூவருக்கும் இப்போது நடப்பது.
"எழுதியாச்சா? அழிச்சிடலாமா?'' சீனிவாசன் சார் முன்வரிசையிலிருந்து கடைசி வரிசை வரை கண்களால் அளந்தார்.  ஆமை ஓடுபோல முதுகு வளைந்து அத்தனை மாணவர்களும் தரையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர். இது ஆறாம் வகுப்பு. எட்டாம்வகுப்பிற்கு மேல்தான் உட்கார பெஞ்ச், எழுத டெஸ்க் எல்லாம் கிடைக்கும். 
"ரைட், அடுத்த பாடத்தப் பாக்கலாமா ? இதிலே சந்தேகம் இருக்கா ? சந்தேகம் இருக்கவன் கைதூக்குங்க!''
முதுகு நிமிர்த்தாமலேயே மூவர் கை உயர்த்தினர். 
"அந்த மூணுபேரும் நோட்டத் தூக்கிக்கிட்டு முன்னாடி வாங்க. மத்தவங்க எழுதி முடிச்சாச்சுன்னா ரெட்டக்கோடு போட்டு முடிச்சு வக்கெணும். தெரியும்ல?''
மூவரும் முன்னால் வர, அவர்களது சந்தேகத்தை உற்றுக் கேட்ட சீனிவாசன் சார், ராமுவை அழைத்தார்.
"நீ முடிச்சிட்டியா ?'' 
"அவெ அடுத்த பயிற்சியவே முடிச்சிட்டான் சார்.யாரோ ஒரு பையன் வயிற்றெரிச்சலில் காட்டிக்கொடுத்தான்.'' சாருக்கும் அது தெரியும்தான்.
ரெண்டு பேரப் பாத்துக்க சொல்லிவிட்டு மூன்றாவதாய் ரெங்கனுக்கு பாடம் எடுத்தார்.
அப்போது வகுப்பின் நுழைவு வாயிலில் நிழலாடியது.  
பியூன் குருசாமித் தாத்தா ஒடிந்துவிழும் தேகத்துடன் நின்று கொண்டிருந்தார்.
"சொல்லுங்க குருசாமி !''
மாணவர்கள் எல்லாரும் ஆவலாய் அவரைப் பார்த்தனர். அவ்வப்போது பள்ளிக்கு லீவு எனும் சேதி கொண்டுவரும் நல்ல மனுசன்.  ஆனால் கையில் எந்த சர்க்குலரும் இல்லாது வெறுமனே நிற்கிறார். 
"ராம்னு ஒரு பையன் இருக்கானாமே சார்''.
அந்தகணம் மிகவும் முக்கியமாக இருந்தது. கிட்டத்தட்ட அத்தனைபேரின் கவனமும் ராமின் மீது விழுந்தது. எச்செம் அறையிலிருந்து அழைக்கப்படும் அழைப்பு எப்போதுமே மாணவர்களுக்கு வலிமிகுந்தது. சீனிவாசன் சாரைத் தவிர அத்தனைபேருக்கும் உடம்பு உதறியது.
"இருக்கான்''
"அந்தப் பயன எச்செம் சார்,  ரூமுக்கு வரச் சொன்னாரு''
சீனிசாருக்கே சிறு குழப்பம். என்னா விஷயம் ?
காரணம் என்னவென்பது குருசாமிக்கு தெரியாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே, ஆனாலும் ஏதோ ஓர்  அக்கறை சீனிவாசன் சாரை அப்படிக் கேட்க வைத்தது.
"எச்செம் சார் கூட்டி வரச் சொன்னாரு'' ஆத்தா வைய்யும் சந்தைக்குப் போகணும் காசுகுடு என்பதுபோல இருந்தது அந்தக் காட்சி.
"ரூம்ல யார் இருக்கா குருசாமி ?'' 
துப்பறியும் வேலையை ஆரம்பித்தார் சீனிவாசன் சார்.  ராமும் கொஞ்சம் பதட்டத்தில் இருந்தான். உள்ளுறுப்புகள் நடுக்கத்திற்கு தயாராவது தெரிந்தது.  உடம்பை விரைப்பாக்கிக் கொண்டான்.
"யாருமில்ல சார், இவனோட அக்கா மட்டும்  இருக்குது சார்''.

குருசாமி தாத்தாவின் அந்தச் சொற்கள் வெளி வந்த விநாடியில் ராம் காற்றைப் போல மாறினான். அவனது பார்வை எச்செம்மின் அறையை ஊடுருவியது. இங்கிருந்து  அறையின் முகப்பு மட்டுமே தெரியும்.  இன்னும் கூர்ந்து கவனித்தால் அறையில் வலதுகோடி புலப்படும்.  அட்டண்டர் சார் தன்னுடைய அத்தனை நோட்டுக்களுடன் குவியலாய் உட்கார்ந்திருக்கிறார். 
அக்கா அநேகமாய் எச்செம்மின் மேஜைக்கு முன்னால் கைகட்டி நின்றிருக்கும். அல்லது சுவரை ஒட்டி ஓரமாய் பதுங்கிப் பம்மி இருக்கும். சும்மாவே அது பயந்தாங்குளி, எச்செம் அழைத்தார் என்றால்...
அப்பா அக்காவை திட்டும்போதெல்லாம் இதைத்தான் சொல்வார். "பெரிய பிள்ள மொதல்ல நீ தைரியமா இருக்கணும்மா. அப்பத்தே ரெண்டுவார்த்த  வாய் தெறந்து பேசமுடியும். உன்னியப் பாத்து நாளைக்கி உன் தம்பியும் இந்த மாதிரி பிரிக்கிணியா வந்திறக்குடாதுல்ல.''
எத்தனை சொன்னாலும் அக்கா மாறவில்லை. தெருவில் நாய் ஓடினாலும், ஏன் ஒரு பூனை பளிச் சென கடந்து போனாலே அலறிவிடுகிறது. 
"எட்டாப்பு படிக்கிற பிள்ள...  இப்பிடியா தொட்டதுக் கெல்லாம் அலறுறது?'' என பக்கத்துவீட்டு மலர் சித்தியும் கேலி செய்து சிரிக்கும்.
"லே ராமு, அக்கா ஒன்னிய பாக்கணும்னு நெனைக்காத. வயசில மூப்பா இருந்தாலும் ஆத்தாளப் போல அழுகிணியா இருக்கா, நீதே பொறுப்பு. அக்கான்னு பாக்காம அண்ணன்னு நெனச்சு இந்த பயந்தாங்குளிய பாத்துக்கணும். ங்கொம்மா சாவறப்ப எங்கிட்டச் சொன்னா. அத இப்ப ஒங்கிட்டச் சொல்றேன். சரியா?''
அப்பாவும் ராமிடம் இதையே சொன்னார்:
"நீ ஆம்பளப்பய, நம்ம அக்காவ நாமதான் எந்த எடத்துலயும் விட்டுக் குடுக்காமப் பேசணும். அது நமக்குச் செய்யும்னு ஒருகாலத்திலயும் எதிர்பாக்கக்
கூடாது சாமி. அது நம்ம கடம, புரியிதா ?''
அப்பா தன்னுடைய அக்காவான ராமின் அத்தையைப் பாதுகாத்ததை அவ்வப்போது சொல்வார். 
ஆனால் எல்லோரும் சொல்லுவதைப்போல அக்கா அத்தனை மோசமில்லை. தனக்கு வரும்போது கொஞ்சம் பயந்தாலும் ராமுக்கு ஏதாவது தீங்கென்றால் கொதித்துத்தான் போய்விடுகிறாள். அதேபோல அவனுக்குத் தேவைப்படுகிற எல்லாவற்றையும்   ஒரு தாயைக் காட்டிலும் கூடுதலான அக்கறை கொண்டே செய்கிறாள். 
தெருவில் அவர்களைப் பெருமையாய்ப் பேசாத வீடே இல்லை. 
"அக்காளும் தம்பியும்னா இப்பிடில்ல இருக்கணும். நாமளும் பெத்து வச்சிருக்கமே... விளக்கெண்ணைக்கிச் செலவா?
    
விவரம் என்னன்னு தெரியல ?''
குருசாமியிடம் சீனிவாசன் சார் துருவித்துருவி விசாரித்தார். அவருக்கும் தெரியும், அக்காள் தம்பியின் பாசம். தாயில்லாக் குழந்தைகள் என்கிற பச்சாதாபம் சீனிவாசன் சாரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒட்டிக் கிடந்தது. 
"தெரில சார். ஆனா அந்தப் பொண்ணு வந்ததிலருந்து விக்கிவிக்கி அழுதுட்டிருக்கு''
அவ்வளவுதான். கட்டறுந்த காளையாக ராம் மாறிவிட்டான். வகுப்பின் முன்புறமிருந்தவன், இப்போது வாசல் பக்கம் வந்து நின்றான். சாரின் அனுமதிக்கு காத்திருந்தான். அவனது துடிப்பு கண்ட சீனிவாசன் சார், " போ, ஆனா மெதுவா அவசரப்படாமப் போகணும். போ, பின்னால வாரேன்.''
ஆனால் நொடிக் கணக்கையும் மிஞ்சி இருந்தது ராமின் ஓட்டம். 
அவன் எண்ணியதுபோலவே எச்செம்மின் மேசைக்கு அருகே சுவரை ஒட்டி சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள் அக்கா.
கண்களில் கண்ணீர் வடிந்த தடம் கன்னத்தில் ஓடியிருந்தது.  கண்கள் இன்னமும் சிவந்திருந்தது.  முகம் பெருத்து வீங்கினதுபோலத்  தெரிந்தது. உடம்பில் ஒரு சிறு நடுக்கம் ஓடிக்கொண்டிருப்பதான அசங்கல். 
இதெல்லாம் ராமிற்கு ஆச்சர்யமில்லை. தான் வந்து எச்செம் அறை வாசலில் நின்றது கண்டும் அக்கா மாறாத உணர்ச்சியுடன் அப்படியே அசையாமல் நின்றதுதான் சகிக்க முடியவில்லை.  தன்னைப் பார்க்கவில்லையா, அதெப்படி கண்ணுக்கு முன்னால் நிற்பவனை காணாமல் இருக்க முடியும்? ஆனால் அப்படித்தான் அக்கா நின்று கொண்டிருக்கிறது. 
"தம்பி' என எவ்விடத்தில் கண்டாலும் எப்போதும் ஆசையாய் ஒற்றை வார்த்தையில் தன்னுடைய இருப்பைத் தெரியப்படுத்துகிற அக்கா, சிலையாய் நிற்பதன் அர்த்தம் ராமிற்கு விளங்கவில்லை.     
எச்செம் மேசைக்கு முன்புறம் அக்காவின் டீச்சர் நின்று,  எச்செம் சாரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். 
ராம் எச்செம் அறையின் உள்ளே நுழைந்ததும், எல்லோரும் அமைதி காத்தனர்.
"இந்தப் பிள்ள ஒனக்கு அக்காவா ?'' காது குடைந்தபடி அட்டெண்டர் சார் ராமை விசாரித்தார். 
அக்காவையே பார்த்துக் கொண்டிருந்த ராம், ஒருசில விநாடி தாமதத்தின் பின், "ஆமா சார்'' என்றான். 
"எதுல வந்தே !'' அக்காவின் டீச்சர் கேட்டார்.
அந்தக் கேள்வி  ராமிற்குப் புரியவில்லை. விளக்கத்திற்கு டீச்சரைப் பார்க்காமல் அக்காவையே பார்த்தான். எப்போதும் கூடுதல் விளக்கத்தை அக்காதான் இவனுக்குச் சொல்லி விளங்க வைக்கும்.
அக்கா குனிந்த தலையை நிமிர்த்தாமலிருந்தது. 
வகுப்பில் எதும் பிரச்னையா ? வீட்டுப் பாடம் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டதா ? அப்படியெல்லாம் ஒருநாளும் இருந்ததில்லை. ராம் செய்ய வேண்டிய பாடத்தையே ஒன்றுக்கு நாலுதரம் கேட்டு ஞாபகப்படுத்தி செய்யச் சொல்லுமே ! வேறெதுவும் பீஸ் பாக்கி வச்சு விட்டதா ? அப்படியான பிள்ளைகளைத்தான், டீச்சர்மார்கள் எச்செம்மிடம் கொண்டுவந்து நிறுத்துவார்கள். அப்பா வந்தால்தான் காசு, அவர் சாயங்காலம் வருவார். எச்செம் சாரிடம் சொல்லி தவணை கேட்கலாம். சீனிவாசன் சார் வந்தால் பரிந்து பேசுவார். இதெல்லாம் தவிர யாருடனாவது சண்டை போட்டு விட்டதா ? அக்கா அப்படியெல்லாம் செய்யாது, அப்படியே செய்திருந்தாலும் சண்டை போட்ட  பிள்ளையும் வந்து நின்றிருக்க வேண்டுமே ! நொடிப்பொழுதில் ராமின் மனசில் இத்தனையும் ஓடியது.
"இல்லடா, ஒங்க அக்காவும் நிய்யும் ஸ்கூலுக்கு நடந்து வருவீகளா, பஸ்ஸô, ஆட்டோவான்னு கேக்கறாங்க''  அட்டெண்டர் விளக்கமளித்தார். 
எச்செம் ராமை கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சைக்கிளல்ல வருவம் சார்''
"ரெண்டு பேருமா ?' எச்செம் கேட்டார்
"ஆமாங் சார்'' 
"தனித்தனியாவா?''
எச்செம் சாரின் இரண்டாவது கேள்வி ராமிற்குப் புரியவில்லை.
"ஒரே சைக்கிள்ல ஒண்ணா வருவீங்களா, ரெண்டுபேரும் தனித்தனி  சைக்கிளான்னு கேக்கறார்''அட்டெண்டரது இந்த விளக்கத்தில் அலுப்பு தென்பட்டது.
"ஒரு சைக்கிள்லதான் சார், அக்கா பின்னாடி ஒக்காந்துக்கரும் நான் ஓட்டி வருவேன்''
 டீச்சரும் எச்செம்மும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
"சரி,  ஒங்கக்காவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போ'' அட்டெண்டர் சார் சொன்னார்.
ராம் ஏனென்று கேட்காமலேயே தலையசைத்தான். 
இப்போதுதான் அக்காவின் கை பிடிக்க நெருங்கினான். 
"வீட்ல யார்ரா இருக்காங்க?'' அக்காவை நெருங்கின சமயம் டீச்சர் அவனை நிறுத்திக் கேட்டார். 
"யாருமில்ல டீச்சர்.''
அலுவலகம் முழுக்க ஒரு வெம்மை படர்ந்ததாய் அனைவரும் புழுங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்வைகளால் தேற்றிக் கொண்டார்கள். 
"அம்மா''  எச்செம் வாய் திறந்தபோது, "அம்மா இல்ல சார்'' எனச்சொல்லி சட்டென அவரை அமர்த்திய டீச்சர், "அப்பா இருக்கமாட்டாரா ?'' எனக் கேட்டார்.
"வேலைக்கிப் போயிருப்பார் டீச்சர், ராத்திரிதே வருவார்.''
"பக்கத்து வீட்ல பொம்பளைங்க யாரும் இருக்க மாட்டாங்களா ?''
பேசிக்கொண்டிருக்கும்போதே அக்காவின் கையைத்தொட்டுவிட்டான் ராம்.  அக்காவின் கை சுரீரென சுடுவதுபோல வெப்பமாய் இருந்தது.
"பக்கத்துல மலர் சித்தி இருக்காங்க டீச்சர். சொந்தக்காரவங்கதே.' 
"அவங்க வீட்ல இருப்பாங்களா ? வேலைக்கிப் போயிருவாங்களா ?''  இப்போது எச்செம் கேட்டார். 
இதுவரை இத்தனை பேச்சு எச்செம்மிடம் ராம் பேசியதே கிடையாது. ஆபீசுக்குள் வந்தால் சார் கேட்டதாய் எதையாச்சும் அட்டண்டர் சாரிடம் வாங்கிப் போவான். அல்லது கையெழுத்து வேணுமென்றால் கைகட்டி நின்று ஒரு வார்த்தை பேசாமல் ஊமையாய் வந்து போவான்.  
"அவுங்க வேலைக்கெல்லாம் போ மாட்டாங்க சார்'' என்றவன், "ஏன் க்கா !'' என அருகில் நிற்கும் அக்காவையும் துணைக்கு இழுத்தான். 
அப்போதும் அக்கா பதில் பேசவில்லை.
அந்த நேரம் சீனிவாசன் சார் எச்செம் அறைக்குள் நுழைந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.  அட்டெண்டர் சார் அவரிடம் சமிக்ஞையில் எதோ சொன்னதும் டீச்சரைப் பார்த்தார். அவரும் தலையாட்டி ஏதோ உணர்த்தினார். 
"இவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்கு அனுப்பிச்சு வைக்கணும் சார். அவங்க பக்கத்து வீட்ல சித்தி ஒருத்தங்க இருக்காங்களாம்''என்றார் டீச்சர். 
"எப்படி போவீங்க?'' 
"சைக்கிள்ல சார்''
தலையாட்டி மறுத்த சீனிவாசன் சார் அட்டெண்டரிடம், "ஒரு ஆட்டோ வரச் சொல்லுங்க''எனச் சொல்லி அவரிடம் பணம் கொடுத்தார்.
"டே ராமு,  ஒன்னோட பையை எடுத்துகிட்டு, அக்காளோட பேக்காயையும் தூக்கிக்க'' என்றவர் என்ன சொல்வதென டீச்சரிடம் கேட்டார். 
"நானே கூடப் போய் விட்டு வந்திர்ரேன் சார்.  ஆட்டோதான, அதிலயே ரிட்டன் வந்திர்ரேன்'' என்றவர் எச்செம் சாரிடம் அனுமதி கேட்டார்.

ஆட்டோவிலும் அக்கா அவனோடு பேசவே இல்லை. ஊமை போல கண்ணில் அவ்வப்போது கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.  அதுதான் அவனுக்குத் தாங்க முடியாத பாரமாய் இருந்தது. அப்பா வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது ? நீதான் பொறுப்பு எனச் சொன்ன மலர்ச் சித்தி வையுமே ! சீனிவாசன் சாரிடம் கூட விசாரித்திருக்கலாம். அவர் அத்தனையும் விலாவரியாய் எடுத்துச் சொல்வார். ஆனால் அவரிடம் பேசமுடியாமல் போய் விட்டது. டீச்சரிடம் கேட்க முடியாது. பழக்கம் இல்லை. அக்கா வாய்திறந்தால் யாரும் தேவையில்லை. வீட்டுக்கு வந்தாவது வாய்திறக்குமா ?எல்லோருக்கும் முன்னால் தன்னிடம் விசயத்தைச் சொன்னால் தேவலை. அக்காவைப் பார்த்தான். அது ராமை கண்டுகொள்ளவே இல்லை. ஏதோ ஒரு தனி உலகில் இருப்பதுபோல எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் டீச்சரின் கேள்விக்கும் அவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடந்தது. 
வீட்டில் மலர் சித்தி இருந்தது. 
ஆட்டோ வந்து நின்றதுமே தெருசனங்கள் கூடிவிட்டனர்.  டீச்சர் மலர் சித்தியிடம் அக்காவை ஒப்படைத்ததும் சித்தி அக்காளைக் கட்டிக் கொண்டது. டீச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டது. 
டீச்சர் போனதும் அக்காளை வீட்டுக்கு ஓரமாய் உட்கார்த்தி வைத்த சித்தி,  ஓர்  இரும்பை கையில் கொடுத்தார். 
"கைல வச்சுக்க''
"அடேயப்பா, பள்ளியொடத்துக்குப் போன சிறுக்கி பவுசு மாப்பள கேட்டு வந்திட்டாளாக்கும். நல்ல நேரத்தப் பாருங்கம்மா தலைக்கி ஊத்தி பிள்ளைய வீட்டுக்குள்ள சேருங்க'' என்றது பவுனு அம்மாச்சி.
சித்தி இவனை அழைத்து அப்பாவைத் தேடி அழைத்து வரச் சொன்னது. 
ராமிற்கு இன்னும் பதட்டம் அதிகமானது. யாரும் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். சித்தியிடம் கேட்டதற்கும் பதிலில்லை. 
"நான் சொல்றதச் செய்யி. பெரிய மனுசன் மாதரி பேசாத. ஓடு அப்பாவக் கூட்டியா'' 

மறுபடி ஸ்கூலுக்கு வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவைத் தேடி வேலைத்தளத்திற்குச் சென்றான். 
"நீ தான்டா பொறுப்பு''  எனச் சொன்ன சித்தி எதுவும் சொல்லாதது அவர்மேல் வெறுப்பை உண்டுபண்ணியது. 
அப்பாவைப் பார்த்ததும் இவனுக்கு அழுகை வந்தது. என்னவென சொல்லத் தெரியாமலே அழலானான். அப்பாவிற்கு விளங்கவில்லை. வேலைத்
தளத்திலிருந்து தனியே அழைத்து வந்து என்னவென கேட்டார். என்ன சொல்வது?  சித்தி அழைத்து வரச்சொன்னதைச் சொன்னான். காரணம் சொல்லத் தெரியாமல் பள்ளியில் நடந்ததிலிருந்து அக்காவை ஆட்டோவில் ஏற்றிகொண்டு வீடு சேர்த்தது வரை ஒப்பித்தான். 
அதுவரை அவசரம் காட்டிய அப்பா அப்படியே ஒருகணம் நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிட்டார். 
அசப்பில் அக்கா மாதிரியே பிரமை பிடித்ததுபோல இருந்தார். 
அப்பா நாலைந்து உசுப்பலுக்குப் பின், சுதாரித்தவர், அவனது சைக்கிளில் ஏறி வீடு வந்தார்.
"ஓம்மக ஒனக்கு கல்யாணச் செலவு கொண்டு வந்துருக்காப்பா . ..  ஒத்தவீடு இனி சம்சாரி வீடாகப் போகுதுடா சாமி'' சாமியாடி அப்பத்தா அப்பாவைக் கட்டிக்கொண்டு வெத்தலைக்கு காசு கேட்டது.
வீட்டுக்குள் அக்கா பெரிய மனுசிபோல அலங்கரித்து சேலை உடுத்தி உட்கார வைக்கப்பட்டு இருந்தது. அப்பாவைப் பார்த்ததும் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதது. 
அப்பாவும் அழுதார். சித்தியும் அழுதது. அம்மாச்சி, அப்பத்தா எல்லோரது கண்களிலும் நீர் நிறைந்து தளும்பியது. 
"யே... வீட்டுக்கு ஒத்தப் பொம்பளை இல்லேன்னா இப்பிடித்தான் ஆளாளுக்கு கண்ணுல தண்ணி செமக்கணும். விட்றா... விட்றா...  சிங்கம் போல பயல் பெத்து வச்சிருக்க.  நீ எதுக்குடா அழணும். அவெம் பாப்பாண்டா ஆயிரம் அக்காவ'' என்ற சாமியாடி அப்பத்தா, "ஏங்கண்ணு அக்காவுக்கு பொறுப்பா நா இருப்பேன் அய்யான்னு அப்பாவுக்கு ஆறுதல் சொல்லுயா''  என ராமிடம் சொன்னார்.
அப்பாவோடு அக்காவையும் சேர்த்துக் கட்டிக்கொண்ட ராம். அப்பத்தா சொன்ன வார்த்தையையே திருப்பிச் சொன்னான். 
அக்கா அவனை முதன் முறையாய் இறுக்கிக் கட்டிக் கொண்டது.
ம . காமுத்துரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com