ஆஸ்கர் விழாவில் அதிசயச்  சிறுவன்!

அண்மையில் நடந்து முடிந்த  89 - வது   ஆஸ்கர்  விருது விழாவில்  கலந்து கொண்ட  ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் அந்த பொடி நடிகனுடன் படம் பிடித்துக் கொள்ள  போட்டி போட்டனர். 
ஆஸ்கர் விழாவில் அதிசயச்  சிறுவன்!

அண்மையில் நடந்து முடிந்த  89 - வது   ஆஸ்கர்  விருது விழாவில்  கலந்து கொண்ட  ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் அந்த பொடி நடிகனுடன் படம் பிடித்துக் கொள்ள  போட்டி போட்டனர். 

ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கெம்மல், அந்தப் பொடி நடிகனைத்  தூக்கி அனைவருக்கும் காண்பிக்க... அரங்கமே ஆர்ப்பரித்தது. கைதட்டலில் அதிர்ந்தது.   இனிப்புகள் அடங்கிய பைகளை வீசி எறிந்து தங்கள் சந்தோஷங்களைப் பதிவு செய்தனர்.  

"லயன் கிங்' பிரபல ஹாலிவுட் அனிமேஷன் படத்தில் சிங்க ராஜா முபாசா, ராணி சராபிக்கு, சிம்பா பிறந்தவுடன் காட்டு விலங்குகளுக்கு அறிமுகம் செய்து வைத்த காட்சியை   நாம்  நடித்துக் காட்டலாமா?'' என்று ஜிம்மி, அந்தப் பொடி நடிகரிடம் கேட்க... " ஓ .. செய்து காட்டலாமே..'' என்று பொடி நடிகன் தலை அசைக்க, நடித்து அசத்தினார்கள். 

ஆஸ்கர் விழாவில் கொண்டாடப்பட்ட  அந்தப் பொடி  நடிகன்  ஓர்  இந்தியச் சிறுவன்.   பெயர் சன்னி  பவார்.

ஆஸ்கர்  விழாவுக்கு  வந்திருந்த  நடிகர்கள், சன்னியை  மடியில் வைத்து,  தூக்கிப்   போட்டுப் பிடித்து, அன்பு மழை பொழிந்துவிட்டனர்.   

மும்பை சேரியில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவனால் ஆஸ்கர் வரை சென்று அனைவரின் கவனத்தையும் தனது நடிப்பினால் ஈர்க்க முடியும் என்பதைச் சன்னியால் நிரூபிக்க முடிந்திருக்கிறது.

 "லயன்' என்னும்  ஒரே ஓர்  ஆங்கிலப் படத்தில்  நடித்ததன் மூலம் சேரியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஆஸ்கர்  விழா வரை  சன்னி பயணிக்கும் படியாகிவிட்டது. 

மும்பை  விமான தளத்திற்கு அருகில் இருக்கும் கலீனா  சேரி பகுதியில் வசிக்கும்  வசு -  திலீப் என்பவர்களது மகன் தான்  சன்னி பவார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சன்னிக்கு  எட்டு வயதாகிறது. படிப்பதோ  மூன்றாம் வகுப்பில்.  ஹாலிவுட் படமான  "லயன்'  படத்தில் நடிக்க  இந்திய குழந்தை நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்க  தேர்வு நடக்கிறது என்பதை அறிந்து... "அப்பா என்னைக்  கூட்டி கொண்டு  போ'' என்று சன்னி அடம் பிடிக்க  அப்பா  திலீப்  கூட்டிப் போயிருக்கிறார். 

மொத்தம் இரண்டாயிரம்  சிறுவர்களை படக்குழுவினர் தெரிவு செய்தனர். அப்பா திலீப்பிற்கும் சரி.. மகன்  சன்னிக்கும்  சரி... இரண்டாயிரம் பேர்களில்  தேர்ந்தெடுக்கப்படுவது  சந்தேகம்தான்  என்று  அந்த சம்பவத்தை  மறந்து போனார்கள். சில நாட்களில் அழைப்பு வந்ததும்... சன்னி படிக்கும் பள்ளியும், அவன் வசிக்கும் சேரியும்  மகிழ்ச்சியில்  ஆனந்த நடனம் ஆடியது.   

சன்னி மூன்று மாத விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. இந்தியாவிலும்  ஆஸ்திரேலியாவிலும் படப்பிடிப்பு. சன்னியுடன் துணைக்கு அப்பா  இருக்க வேண்டும் என்பதால்,  மாதம் பத்தாயிரம் சம்பளத்தில் செய்து வந்த வேலையை  திலீப் விட்டு விட வேண்டி வந்தது.  "இரண்டாயிரம் பேரில்  என் மகன்  செலக்ட்டாகி  இருக்கிறான் .. சும்மாவா..  வேற வேலையை  அப்புறம் தேடிக் கொள்ளலாம்''  என்று  வீட்டில் சொல்லி, மகனுக்கு  மானேஜராகி விட்டார்.  அண்ணாந்து  மட்டும் பார்த்துக்  கொண்டிருந்த  விமானத்தில், மகன்  சன்னியால்,   பல முறை  சன்னியுடன்  திலீப் பயணம் செய்துவிட்டார்.  ஆஸ்கர் விழாவிலும் மகனுடன் கலந்து கொண்டிருக்கிறார்.    

சன்னியின் தங்கை  திவிஷா,  தம்பி  ஜிக்னேஷ்ர்  அரசு பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "லயன்' படத்தில்  சன்னியுடன்  தேவ் படேல்,  நிகோல் கிட்மன்  நடித்திருக்கிறார்கள். 

"லயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படேல் நடித்திருக்கிறார்.  தேவ் படேலின்  குழந்தை பருவ வேடத்தில் நடித்திருப்பதுதான் சன்னி.  சரூ ரெயர்லி  என்பது  "லயன்' படத்தில்  வரும் சிறுவனின் பெயர். 

சிறுவன்  ஒருவன்   தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து படும் கஷ்டத்தையும், பின்னர் அவனை ஒரு ஆஸ்திரேலிய குடும்பம்  தத்தெடுத்து வளர்ப்பதும்,  அந்த சிறுவன்  வளர்ந்து பெரியவன்  ஆனதும்  கூகுள் எர்த்  உதவியுடன் தன் பெற்றோர்களை இந்தியாவில் தேடிக் கண்டு பிடிப்பதும்தான்  "லயன்'  படத்தின் கதை. 

சன்னிக்கு ஹிந்தி மட்டுமே பேசத் தெரியும்.  போகப் போக ஆங்கிலம்  சன்னிக்குப் புரிய ஆரம்பித்தது.   தொடக்கத்தில்,  சைகை மூலம் இயக்குநர்  
கார்த் கேவிஸ், சன்னியிடம்   விளக்கி  நடிக்க வைத்திருக்கிறார். 

"நான் தேர்வு செய்த  சிறுவர்களில்  யார்  என்  மனதைத் தொட்டு,  என்னுடன்  நெருக்கமாகிறார்கள்  என்று காத்திருந்தேன்.  பல நாட்கள் நீண்ட  தேடலில், ஒரு நாள் சன்னி என்னைச் சந்தித்த போது,  இவன் தான் நான்  தேடிக் கொண்டிருந்த சரூ என்று உடனே என் மனதில் பட்டது... சட்டென்று சன்னியை  தேர்வு செய்தேன்'' என்றார். 

உடன் நடித்த தேவ் படேல்,  "சன்னி  எங்கள் படத்தின் குட்டித் தேவன். அவன் இதற்கு முன் விமானத்தில் ஏறியதில்லை.  ஹாலிவுட் படம் ஒன்றைக் கூட பார்த்ததில்லை.  ஆனால்  ஒரு  பிரமாண்டமான ஹாலிவுட்  படத்தில் அவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறான்.  அவனது  வெகுளித்தனமான  நடிப்பு   மிக அழகாக, அற்புதமாக  வெளி வந்திருக்கிறது.  நடிப்பதை  சன்னி  உற்சாகத்தோடு செய்தான். அதனால் சிகரங்களைத் தொட்டிருக்கிறான்'' என்கிறார். 

"எனக்கு  நடிப்பில்  நாட்டம்  இருந்தாலும்  ஐபிஎஸ்  அதிகாரியாக வேண்டும்  என்பதுதான் எனது கனவு... ஹ்ரித்திக் ரோஷனின் க்ருஷ் படம் என்றால் உயிர். அவரைப் போல ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று  சொல்வது   ஆஸ்கர் விருது விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற, மாஸ்டர் ஸ்டார்  சன்னி. 

லயன் படத்தில் நடித்ததால், சன்னிக்கு  அடுத்த ஹாலிவுட்  படத்தில் நடிக்க  வாய்ப்பும்  வந்திருக்கிறது.  "இன் லவ்  சோனியா'  படத்தில்  சன்னி நடிக்க ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளான். 

சரி... "சன்னி நடிப்பதற்கு  சம்பளமாக எவ்வளவு தந்தார்கள்?''  என்று  திலீப்பிடம் கேட்டால்  புன்னகை  மட்டும்தான்  பதிலாக  வருகிறது. 

-பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com