மீதமிருக்கும்... நட்பு!

"சார் உங்களுக்கு போன்...''  அலுவலக உதவியாளரின் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
மீதமிருக்கும்... நட்பு!

"சார் உங்களுக்கு போன்...''  அலுவலக உதவியாளரின் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
"போன்ல யாரு?''
 "உங்க  அண்ணன்னு சொன்னாங்க''
"இதோ வர்றேன்''  எழுதிக் கொண்டிருந்த நான் தபாலை அப்படியே வைத்துவிட்டு எழுந்து சென்றேன்.
ரிஸீவரை எடுத்து   "என்னண்ணா?''  என்றேன்.
"என்ன ஆச்சு உன் செல்ஃபோன்?  போட்டேன்...   "சுவிட்ச் ஆஃப்'னு வருது''
"ஒண்ணுமில்லேண்ணா. ரெவ்யூ மீட்டிங் நடந்துச்சு. அதனால செல்ல ஆப் பண்ணினேன். ஆன் பண்ண மறந்துட்டேன். ஏன்ணா போன் பண்ணீங்க...''
 "போன வாரம் வரலியே...   இந்த வாரம் வீட்டுக்கு வருவீயான்னு கேட்கத்தான் போன் பண்ணேன்''
 "வருவேன்ணா. போன வாரம் கொஞ்சம் வேலையிருந்துச்சு. அதனாலதான் வர முடியல. வீட்ல எல்லாரும் சௌக்கியம்தானே?''
 "ம்.. எல்லாரும் நல்லாருக்கோம். அப்போ நாளைக்கு ஈவினிங் புறப்பட்டு வர்றியா?''
"ஆமாம்ண்ணா''
சரி... வச்சிர்றேன்.

சென்னையில் எனக்கு வேலை. என் அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளர். வீடு வேலூரில். வீட்டில் அம்மா, அண்ணன், அண்ணி,   குழந்தைகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கை.
 வேலூரிலிருந்து தினமும் சென்னைக்குப் பயணித்து வேலைக்குப் போவதென்பது சிரமம். காசும் விரயம்...  நேரத்திற்குப் போக முடியாது. அலுவலகத்தின் பக்கத்திலேயே தங்கும் விடுதியொன்றில் மாத வாடகையில் அறை எடுத்துள்ளேன். மெஸ்ஸில் சாப்பாடு. வாரம் ஒரு தடவை வீட்டிற்குச் சென்று வருவேன். சனிக்கிழமை மாலை பணி முடித்து புறப்பட்டு திங்கள்கிழமை காலை மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவேன்.
எனக்குத் திருமணமாகவில்லை என்ற கவலை அண்ணனுக்கும், அம்மாவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதன் வெளிப்பாட்டை பல சமயங்களில் நான் கவனித்திருக்கிறேன்.
"சந்துரு வேலூருக்கும் சென்னைக்கும் அலையறான். சீக்கிரமா அவனுக்கொரு கல்யாணம் பண்ணி முடிக்கணும். வர்ற  தை மாசத்துக்குள்ள விஜயாவுக்கு முடிஞ்சிட்டா, அடுத்தது இவனுக்கு முடிச்சிடலாம். எவ்வளவு நாளைக்குத்தான் மெஸ்ல சாப்பிட்டுட்டு... அதுக்கும் இதுக்கும் ரோடு போட்டுக்கிட்டு... ம்...'' அம்மா இப்படி வருத்தப்பட்டு புலம்புவார்கள்.
தங்கை விஜயாவுக்கு  மூன்று வரன் வந்தது. அதில் ஒரு வரன் நேரிடையாக வந்து பார்த்துப் போயிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல பதிலாக இருந்தால் அடுத்த இரண்டு மாதத்தில் தங்கைக்கு முடித்து விடலாம். அடுத்தது எனக்குத்தான். இப்போதே மதுமதியைப் பற்றி கோடிட்டு காட்டிவிடுவது நல்லதென்று பட்டது!

மதுமதி -
 என்னுடன் பணிபுரியும் பெண். கணினி பிரிவில் அவளுக்கு வேலை. நட்பாகத்தான் பழகினோம்;  பழகிக் கொண்டுமிருக்கிறோம்.
 இருப்பினும் எங்களுக்குள் இருக்கும் இந்த பரஸ்பரம் அன்பும், வேலையில் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் பரஸ்பர உதவிகளும்தான் எங்கள் நட்பையும் தாண்டி, நாங்கள் அந்நியோன்யமான நேசிப்புக்கு உள்ளானோம்.
 ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கிறோம். எனக்குப் பிடித்தது எது, பிடிக்காதது எது?  என் ஆசை இலட்சியம் என்ன என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். என் குடும்பம் பற்றி அவளும் அவள் குடும்பம் பற்றி நானும் நிறையப் பேசியிருக்கிறோம்.
மதுமதி,  தன் பத்து பன்னிரண்டு வயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்தவள். தாய்  மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்து படித்து வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறாள்.
 மாமாவோ மாமியோ இவளின் காதலுக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களிருவரும் காதல் மணம் செய்து கொண்டவர்கள்தான்.
"நாங்களும் உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்; அல்லது உனக்கு யார் மீதாவது விருப்பமிருந்தாலும் சொல்லிவிடு. அவர்கள் வீட்டில் கலந்து பேசி அவரையே முடித்து வைக்கிறோம்...''  என்று என்றோ அதாவது நாங்களிருவரும் நட்பாகப் பழகிக் கொண்டிருக்கும்போதே மதுமதிக்கு பச்சைக்கொடி காட்டியிருந்தார்கள்.
அதனால் மதுமதி வீட்டைப் பொருத்தமட்டில் 
எவ்வித எதிர்ப்பும் வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இனி என் வீட்டில்தான் சொல்ல வேண்டும். அனுமதி பெற வேண்டும். இது பற்றி வீட்டில் பேச இரண்டு மூன்று தடவை முயற்சித்தும் சில சூழ்நிலை காரணமாய் முடியாமல் போய்விட்டது.
இந்தத் தடவை எப்படியும்  மதுமதியைப் பற்றிச் சொல்லிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவளுடைய போட்டோ ஒன்றையும் அவளிடமிருந்து வாங்கி வந்திருந்தேன்.

நான் வீட்டிற்குச் சென்றபோது அம்மா அறையில் படுத்திருந்தார்கள். சாதாரணமாய் பொழுதுபோன நேரத்தில் அம்மா  படுப்பதில்லை. பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சாமி கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி  பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் நான் ஊரிலிருந்து வருகிற அன்று அம்மா ஆர்வத்தோடு வாசலையும் பார்த்துக்  கொண்டிருப்பார்கள்.
இன்று அப்படியல்லாது அறையுள் படுத்திருந்தது எனக்கு என்னவோ போலிருந்தது.
 "அம்மா உடம்புக்கு என்ன?  ஏன் அறையில் படுத்திருக்காங்க...'' என்றவாறு தோல் பையை வைத்துவிட்டு அம்மாவிடம் சென்றேன்.
"ஒண்ணுமில்லே. லேசா காய்ச்சல்தான். ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருக்கோம். உங்ககிட்ட சொன்னா நீங்க டென்ஷனா வருவீங்கன்னுதான் அண்ணன் சொல்லல...''  என்றார்கள் அண்ணி.
அண்ணியின் இடுப்பிலிருந்த இரண்டு வயது நந்தா என்னிடம் தாவினான். கை நீட்டி தூக்கிக்
கொண்டேன்.
 "அம்மாகிட்ட பேசிக்கிட்டிருங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்'' என்று அண்ணி உள்ளே செல்ல,
"என்னம்மா... இப்ப எப்படியிருக்கு...?''  என்றேன்.
"இப்போ பரவாயில்லப்பா. நீ எப்படியிருக்கே''  என்ற அம்மாவின் குரல் பலவீனமாகக் கேட்டது.
எழுந்து அமர முயற்சி செய்தார்கள். இரண்டு தலையணைகளை சுவரோரம் சாய்த்து வைத்து, மெல்ல கைத்தாங்கலாக அம்மாவை அதில் சாய்வாய் படுக்க வைத்தேன்.
அண்ணி காப்பி எடுத்து வந்து என்னிடம் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டு போனார்கள்.
"விஜயாவுக்கு முடிஞ்சிடும் போல. மாப்பிள்ளை வீட்ல இன்னிக்குத்தான் போன் பண்ணி சரின்னாங்க. இனிம விடுவிடுன்னு வேலையைப் பாக்கவேண்டியதுதான்'' என்றார்கள்.
"சரிம்மா. ஆபீஸ்ல லோனுக்கு சொல்லி வச்சிட்டேன். அப்ளிகேஷன் கொடுத்த ஒரு வாரத்துக்குள்ள கெடைச்சிடும். திங்கள்கிழமை ஆபீஸ் போனதும் லோனுக்கு அப்ளை பண்ணிடறேன். நாளைக்கு காலைல அண்ணன்கூட மெயின்ரோட்ல இருக்குதே பாக்கியலட்சுமி கல்யாண மண்டபம் அதைப் பேசி முடிச்சிடுறோம். அதுதான் சௌரியமா இருக்கும், பக்கத்துல தங்க லாட்ஜும் வசதியா இருக்கு''
 "சரி... அதையே பாரு.  அப்படியே அண்ணன்கிட்ட கலந்து பேசி ஜோசியரைப் பாத்து தேதி குறிச்சிக்கிட்டு மண்டபம் முடிங்க...''
அம்மா முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. மேலும் சிறிது நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தேன்.
மதுமதியைப் பற்றி முதலில் அம்மாவிடம் சொல்வதைவிட அண்ணன் அண்ணியிடம் சொல்லி அவர்களின் சம்மதம் பெற்று அவர்களின் சப்போர்ட்டும் கூடுதலாக கிடைக்குமேயானால் அம்மாவிடம் பேச பேருதவியாக இருக்குமென நினைத்தேன்.
அதன்படி இருவரிடம் என் விருப்பத்தை சொன்னேன். மதுமதியின் போட்டோவையும் காண்பித்தேன்.
அவர்கள் முகம் சுளிக்கவில்லை. அய்யோ அப்படியா என்று பயந்து நடுங்கவில்லை. கோபப்படவில்லை. மாறாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்,  "எங்களைப் பத்தி ஒண்ணுமில்லே சந்துரு. அம்மாவுக்கு இது பிடிக்குமான்னு தெரியலை. முக்கியமா அவங்களோட அனுமதியும் ஆசீர்வாதமும் வேணும். அப்பா போன பிறகு நம்ம ரெண்டு பேரையும் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியிருக்காங்க. அவங்க மனசு கோணும்படி நடக்கக் கூடாதில்லியா...''
"உண்மைதான்ணா. அம்மாவுக்கு விருப்பமில்லேன்னா மீறி நடக்க மாட்டேன்ணா''  அண்ணனுக்கு என் பேச்சு பிடித்திருந்தது. கணினி வகுப்புக்குப் போயிருந்த தங்கை வந்தவுடன் அவளிடமும் என் காதல் பற்றி சொன்னேன். மதுமதியின் போட்டோவையும் காண்பித்தேன்.
"அண்ணி நல்லாருக்காங்கண்ணா. அம்மா ஒத்துக்கிட்டா உண்மையிலேயே நீங்க அதிர்ஷ்டசாலிதான். நானும்தான்''  என்று தங்கையும் சம்மதம் தந்தாள்.
 திங்கள்கிழமை காலையில் சீக்கிரமாக சென்னை புறப்பட்டுவிடுவேன். புறப்படும் அவசரத்தில் மதுமதியைப் பற்றி அம்மாவிடம் விளக்கமாகச் சொல்ல முடியாமல் போகலாம். அதனால் முதல் நாளிரவே பேசிவிடுவதென அம்மாவிடம் சென்றேன்.
 "நாளைக்காலைல வேலைக்குப் போகணுமில்லே...'' என்றார்  அம்மா.
 "ஆமாம்மா...''
"கல்யாண வேலைல்லாம் இருக்கு. எத்தினி நாளைக்கு லீவு போடணும்னு அண்ணனைக் கேட்டுக்கோ''
"சரிம்மா'' என்ற நான் கொஞ்சம் தயங்கி, சட்டைப் பையிலிருந்து மதுமதியின் போட்டோவை எடுத்துக் காண்பித்தேன். 
"யாரிது? பார்க்க லட்சணா இருக்குதே'' என்றார்.
" எங்க ஆபிஸ்ல ஒர்க பண்றாங்க. மதுமதின்னு பேரு''  என்று சொல்லி முடிப்பதற்குள்,
"இவளுக்கு என்ன இப்போ? கண்டவ போட்டோவெல்லாம் நீ ஏன் வச்சிருக்கே?    இதை ஏன் என்கிட்டே காட்டறே?''
இப்படி அதிரடியாய் கேள்வி கேட்கும் அம்மாவிடம் எதையென்று சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? ஏதோ நான் இதைத்தான் சொல்ல வருகிறேன் என்று முன்பே யூகித்ததுபோல் , ஆரம்பத்திலேயே எதிர்ப்புக்குரல் கொடுத்தால் என் காதலை எப்படிச் சொல்வது எனத் தயங்கினேன். எதுவும் சொல்லாமல் விட்டுவிடலாமென்றால் போட்டாவை வேறு காண்பித்து விட்டேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு அண்ணனிடமும் சொன்ன பிறகு இனி  பின் வாங்குவதால் எந்த லாபமுமில்லை. சொல்லிவிடுவதுதான் உத்தமம். 
" இந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கும்மா''
"பிடிச்சிருக்குன்னா...''
"கல்யாணம்  பண்ணிக்க விரும்புறேன். அவங்க வீட்லேயும்''
" காதலா?''
"எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கும்மா... அந்த நட்பே கல்யாணமா முடிஞ்சா நல்லாருக்கும்னு நெனைக்கிறோம். ஆனா எதுவும் உங்க சம்மதமில்லாம நடக்காது. நீங்க முடியாதுன்னுட்டா, உங்களை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். எப்பவும் போல நண்பர்களாகப் பழகுவோம். எங்களுக்குள்ள கண் மூடித்தனமான காதலில்லை. நல்ல புரிதலும் விட்டுக் கொடுத்தலும் இருக்கு''
பொறுமையாக எங்களைப் பற்றி சொன்னேன். அம்மா பதிலே பேசவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஐந்து நிமிடம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். பேசவில்லை.
தொடர்ந்து நான்,  " உடனே சொல்லணும்னு அவசரமில்லேம்மா. முன்னாலேயே உங்கிட்ட சொல்லிடலாம்னு சொன்னேன். அவ்வளவுதான்! தங்கை கல்யாணம் முடியட்டும் அப்புறமா உங்க முடிவைச் சொன்னாலே போதும்''
நான் எழுந்து கொண்டேன். மறுநாள் காலை நான் புறப்படும் வரையில் இதுபற்றி அம்மா பேசவில்லை.
தங்கை விஜயா திருமணம் முடிந்தது. அவளை எந்தக் குறையுமின்றி புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். 
நாட்கள் நகர்ந்தன. 

ஒருநாள் மதியம் அலுவலகத்தில் வேலையாய் இருந்தபோது அண்ணனிடமிருந்து போன் வந்தது. அம்மாவுக்கு ரொம்பவும்  உடம்புக்கு முடியலை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோமென்று. 
உடனே சென்றேன். அம்மா ஐ.சி.யூ.வில் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மருத்துவரும் நம்பிக்கையாய் சொல்ல வில்லை. "வயதானவர். மேலும்  இதற்கு முன் ஒரு தடவை ஹார்ட் அட்டாக் வந்தவர்.
இப்போது சற்றுக் கடுமையாக அட்டாக் ஏற்பட்டிருக்கிறது. சிரமம்தான். எனினும் எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம்' என்றார்கள். 
ஊஹூம் பலனில்லை. மூன்று நாளுக்குப் பிறகு இறந்து போனார்கள்.  ஆபிஸýக்குத் தகவல் தெரிந்து சிலர் வந்து போனார்கள். மதுமதியும் வந்து போனாள். பின்பு பதினாறாம் நாள்  காரியத்திற்கும் வந்தாள். அப்போதுதான் அண்ணனுக்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அப்போது அண்ணன், "இன்னும் ஆறுமாதம் போகட்டும். இல்லேன்ô அம்மா திதி முடியட்டும். உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்'' என்றார்.
"வேண்டாம்ண்ணா.... அம்மாவுக்கு இதுல சுத்தமா விருப்பமில்லை. இப்போ அம்மாதான் இல்லையேன்னு கல்யாணம் செஞ்சிக்கிறது சரியாப் படலை. அம்மாவைத் தள்ளி வச்சிட்டு திருட்டுத்தனமா செய்துக்கிறது மாதிரி இருக்கும்'' என்றேன். 
மதுமதியும் அதையே சொன்னாள்.
"ஆமாங்க. கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமலேயே இறந்துட்டாங்க. அன்னிக்குப் போட்டோவைக் காட்டி இவர் சொன்னப்ப, பார்க்கலாம்... யோசிப்போம்ன்னு கூட சொல்லல. பேசமா மெüனியாகவே இருந்துட்டாங்க. இதிலேர்ந்து அவங்களுக்கு சுத்தமா விருப்பமில்லேன்னு தெரியுது.
நான் அம்மா, அப்பா கூட வாழ கொடுத்து வைக்கலை. அண்ணன் தம்பி அக்கா தங்கைன்னு  பாசத்தோட பழகுற உறவுகளோட வாழ எனக்குப் பாக்கியமில்லை.  உங்க தம்பியை கல்யாணம் பண்ணிட்டு  உங்கள மாதிரி சொந்த பந்தங்களோட வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டேன்.  ப்ச்... அது முடியவில்லை.
பட்... எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. விட்டுக் கொடுக்கும் அன்பிருக்கு.  நண்பர்களாகவே இருப்போம். மீறி திருமணம் செய்துகிட்டா அம்மாவின் ஆத்மா சாந்தி அடையாது. அம்மாவை நெனைக்கும்போது போதும் அம்மா போட்டோவைப் பார்க்கும்போதும் குற்றம் செய்துட்டதா எங்க மனசு உறுத்தும். அப்படிப்பட்ட நிம்மதியற்ற வாழ்க்கை  வாழ வேணாம்.  நாங்க நண்பர்களாகவே இருக்கோம்'' என்று சொன்ன மதுமதி எல்லாரிடமும்   விடைபெற்று நடந்தாள்.                 
 காஞ்சி. மீனாசுந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com