இன்னா செய்தாரை...!

மாலை சூரியன் தன் வனப்பில் வானம் முழுமையையும் ஆரஞ்சு வண்ணமயமாக்கியிருந்தான்.
இன்னா செய்தாரை...!

மாலை சூரியன் தன் வனப்பில் வானம் முழுமையையும் ஆரஞ்சு வண்ணமயமாக்கியிருந்தான். ஆனால் வள்ளி  அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. ஆற்றாமையில் அவள் மனம் குமைந்தது.
“என்ன பிழைப்பிது, பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாயிருக்குது இந்த ஆம்பளைங்களுக்கு. உடம்பே கூசுது... சை''  என்ற வள்ளி மனத்தில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சி படமாக ஓடியது.
 வள்ளி அந்த ஊரின் மிகப் பெரிய பனியன் கம்பெனியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறாள். அன்று மாலையும் வழக்கம்போல் வேலை முடித்து ஸ்டாஃப்ஸ் அனைவரும் சென்றதும் மூன்றாவது மாடியைக் கூட்டும் பணியில் இருந்தாள் வள்ளி. அப்போது மேனேஜர் மூர்த்தி அதே ப்ளோரில் உள்ள அவன் அறையிலிருந்து  “வள்ளி முதல்ல என் ரூமைக் கூட்டிடு, நான் ரூமைப் பூட்டப் போறேன்.  அப்படியே டாய்லெட்டையும் கிளீன் செஞ்சிடு'' என்று வள்ளியைக் கூப்பிட்டான்.
வள்ளி மூர்த்தி ரூமை கூட்டத் தொடங்கும் முன்,  “சார் நீங்க வெளியே போய்க்குங்க குப்பையடிக்கும்'' என்றாள்.  “அதெல்லாம் ஒண்ணும் அடிக்காது நீ கூட்டு''  என்ற மூர்த்தி ஒரு ஃபைலை பார்ப்பதுபோல் அங்கேயே இருந்தான். வள்ளி அறையிலிருந்த கப்போர்டை தட்டிக் கூட்டிக் கொண்டிருக்கும் போது மூர்த்தி மேல் ராக்கிலிருக்கும் ஒரு ஃபைலை எடுப்பதுபோல் வந்து அப்படியே வள்ளியை பின்புறமாகக் கட்டித் தழுவிக் கொண்டான். எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது.
வள்ளி ஓர் ஆங்காரத்துடன் அவனை உதிர்த்தவள், "தூத்தேறி மானங்கெட்ட ஜென்மம்'' என்றவள் விளக்குமாற்றைக் கீழே எறிந்தாள். மூர்த்தியும் சிறிதும் சளைக்காமல் “என்ன வாய் நீளுது நான் யார் தெரியுமில்ல'' என்றான்.
“நீ  யாராயிருந்த எனக்கென்னய்யா? இந்த பிழைப்புக்கு எங்கையாவது பிச்சையெடுத்துப் புழைக்கலாம் போய்யா சர்தான்''  என்றவள் வேகவேகமாக படிகளை கடந்து கீழே இறங்கினாள். கீழே வந்த வள்ளி மற்ற ஊழியர்கள் வருவதற்குள் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள். அவள் மனம் உலைக் கனலாகக் கொதித்தது.
வீட்டில் அவள் கணவன் முருகனிடம் எதுவும் சொல்ல முடியாது. அவன் நல்லவன்தான். ஆனால் கோபக்காரன். வள்ளி அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அளவான பேச்சுத்தான் வைத்துக் கொள்வான். அவளிடம் இதுவரை யாரும் இப்படி முறை தவறி நடந்ததில்லை.
மூர்த்தி கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். 
“பாத்ரூம் கழுவற நாயி, என்ன பேச்சுப் பேசிட்டா என்ன திமிரு, இவளையெல்லாம் வேலையை விட்டே தூக்கிடணும்'' என நினைத்தான்.
அன்று இரவு வள்ளி வீட்டில் "உம்' என்றிருந்தாள். தன் மகனைத் தூங்க வைத்தவள் தனக்கும் பாய் விரித்தாள். கணவன்  “ஏம்புள்ள உம்முன்னு இருக்க''  என்றதற்கும்  “ஒண்ணுமில்ல... எனக்குத் தூக்கம் வருது''  எனத் திரும்பிப் படுத்தாள் கண்களில் நீருடன்.
மனம் குழப்பமாயிருந்தாலும் மறுநாள் வள்ளி வேலைக்குக் கிளம்பி விட்டாள். என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என திடமாயிருந்தாள். வள்ளி கம்பெனியில் யாரிடமும் இதைப்பற்றி பேசவில்லை. பேசுவதற்கு அவளுக்கு அவமானமாக இருந்தது. முதலாளியிடம் இந்த கேவலத்தைப் புகார் செய்வதற்கும் பிடிக்கவில்லை. ஓர் ஆணிடம் இன்னோர் ஆணின் குணக்கேட்டைப் பற்றிச் சொன்னால் ஏற்படும் பலன் தான் என்ன? அவர்களும் ஆண்களுக்குத்தான் சாதகமாக இருப்பார்கள். பெண்களின் சாபக்கேடே இதுதான். பெண்களுக்கு ஏற்படும் அவமானத்தை வெளியில் சொன்னால் அது பெண்களையே பாதிக்கும். வள்ளியின் மனதில் இதுபோல் என்னென்னமோ ஓடியது. மூர்த்தியும் அன்று வள்ளியின் முகம் கூடப் பார்க்கவில்லை.

இரண்டு நாட்கள் இப்படியே வெறுமையாக ஓடியது. அன்று சனிக்கிழமை சம்பளம் பெறும் நாள். ஒவ்வொருவராக முதலாளி அறையினுள் சென்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தனர். மூர்த்தியும் அங்குதான் இருந்தான். வள்ளி உள்ளே நுழைந்து சம்பளத்தைப் பெற்றுக் கொண்டதும் மூர்த்தி அவளைப் பார்த்து  “வள்ளி கொஞ்சம் நில்லு'' என்றவன் முதலாளியிடம்  “நான் சொன்னேன் இல்ல முதலாளி அது இவங்கதான்''  என்றான். பின் அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம்  “ஏம்ப்பா முத்து... வள்ளியோட கூடையை எடுத்துட்டு வா''  என்றான். வள்ளிக்கு சுறுக்கென்றிருந்தது. செக்யூரிட்டி கொண்டு வந்த வள்ளியின் கூடையில் குழந்தைகள் அணியும் சின்ன ஜட்டி ஒரு அட்டியும் அவள் சாப்பாடு தூக்குச்சட்டியில் யார்ன் கோன்கள் இரண்டு, மார்க்கர் பென்கள், பாபின்கள் இருந்தன. மூர்த்தி முதலாளியைப் பார்த்து  “இது பல நாட்களாக நடக்குது போலங்க'' என்றான் வன்மத்துடன்.
வள்ளிக்கு மூர்த்தியின் எண்ணம் விளங்கியது. அவள் முதலாளியைப் பார்த்து  “ஐயா இந்தத் திருட்டை நான் செய்யல. இதை யார் என் கூடையில் வைச்சாங்கன்னும் எனக்குத் தெரியாது. நீங்க நாந்தான் செய்திருப்பேன்னு நினைச்சீங்கன்னா என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை செய்ங்க'' என்றாள் கொஞ்சமும் கலங்காமல். முதலாளி வள்ளியை கடுமையாகப் பார்த்து  “கொஞ்சம் வெளியே இரும்மா சொல்றேன்'' என்றார்.
சற்று நேரத்தில் வெளியில் வந்த மூர்த்தி  “இந்தா வள்ளி உன் கணக்கை முடிச்சுக் கொடுக்கச் சொன்னார் முதலாளி. நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்'' என்றான் முகத்தில் சிரிப்புடன். வள்ளிக்கு மனம் வலித்தது,  “என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம கணக்க முடிச்சுக்கறாங்களாம். எல்லாம்  வலுத்தவனுக்குத்தான் வாழ்க்கை. ஏழை சொல் அம்பலமேறுமா''  என நினைத்தவள்.  “ஆங்! இந்த மடம் இல்லைன்னா சந்த மடம். பிழைக்கவா வழியில்ல இந்த ஊரில்'' என்றும் நினைத்தாள். அன்று இரவு முருகனிடம்  “நாளையிலிருந்து நான் கம்பெனிக்கு போகலைங்க''  என்றாள் வள்ளி  “ஏன் எதுனாச்சும் பிரச்னையா?''  இது முருகன்.
“பிரச்னையெல்லாம் இல்லங்க. இப்பெல்லாம் அங்க கொஞ்சம் வேலை அதிகமாக இருக்குதுங்க. அதனால இனிமே பக்கத்து வீட்டு லட்சுமி அக்கா போற பள்ளிக்கூடத்து வேலைக்குப் போலான்னு இருக்கேங்க''  என்றாள்.  “இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஏதாவது ஒரு வேலைக்கு போ புள்ள. நான் மேஸ்திரி ஆயிட்டேன்னா நீ வேலைக்கே போக வேணாம்''  என்றான் முருகன். வள்ளிக்கு முருகன் மேற்கொண்டு கம்பெனி வேலை பற்றி எதுவும் கேட்காதது நிம்மதி அளித்தது.

வள்ளி அந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களாகிவிட்டன. சம்பளம் குறைவாக இருந்தாலும்  குழந்தைகளுடன் இருப்பது வள்ளிக்கு புது அனுபவமாக இருந்தது. அன்று பள்ளிக்கு விடுமுறை நாள். வள்ளி தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடையில் காய்கறி வாங்கிவிட்டு திரும்பியவள் எதிரிலுள்ள தியேட்டரின் முன் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்தாள். அங்கே என்ன நடந்தது எனப் பார்க்க வள்ளியும் ஓடினாள். அங்கு ஒரு பெண் அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து  விட்டிருந்தாள். அப்பெண்ணின் முகம்,  கை,  கால் என சாக்கடையின் சேறு அப்பியிருந்தது. அந்தப் பெண்ணால் எழுந்து நிற்கக் கூட முடியாமல் சேறு வழுக்கியது. பார்த்தவர்கள் அனைவரும் “ஏய் தூக்குங்கப்பா தூக்குங்க'' என்றார்களே தவிர,  யாரும் அந்தப் பெண்ணை சாக்கடையிலிருந்து மேலே ஏற்றுவதற்கு தயாராகவில்லை.
அதைப் பார்த்த வள்ளி உடனடியாக தன் கையிலிருந்த கூடையைக் கீழே வைத்தாள். அந்தப் பெண்ணின் அருகில் சென்று  “தன் கையை நீட்டி என் கையை பிடிச்சுட்டு மெதுவா ஏறி வாங்க''  என்றவள் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த ஒரு நொடிப் பொழுது மின்னலென ஓர் எண்ணம், இவங்க மேனேஜர் மூர்த்தியோட சம்சாரமில்லை என ஓடியது. ஆனால் அங்கு மனிதாபிமானமே முன் நின்றது. அந்தப் பெண்ணை சாக்கடையிலிருந்தது மேலே வர அருவருப்படையாமல் உதவி செய்தாள் வள்ளி. பின்  “என் வீடு பக்கம் தாங்க வந்து புடவையை அலசிக் கட்டிக்கங்க'' என்றாள். அந்தப் பெண்ணின் முகம் முழுவதும் அவமானத்தினால் அழுகையும் வள்ளியின் பால் நன்றியுமாக கண்கள் பனித்தன.

அன்று இரவு வேலை முடித்து வந்த மூர்த்தியிடம் அவன் மனைவி, “ஏங்க  உங்களுக்கு வள்ளிங்கறவங்களத் தெரியுமா?  உங்க கம்பெனியில் தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்களாமே, அவங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நான் தியேட்டரிலிருந்து வீடே வந்து சேர்ந்திருக்க முடியாது'' என்றவள் அன்று மதியம் நடந்தவற்றைக் கூறினாள். மூர்த்தி மிகுந்த பதட்டத்துடன்  “வள்ளி வேறேதும் சொன்னாளா''  என்றான் கலக்கத்துடன். “ஆமாங்க உங்க கம்பெனியில மூணு ப்ளோர் ஏறி வேலை செஞ்சு கால் வலி வந்துட்டதால நின்னுட்டாங்களாம், இப்போது ஏதோ ஸ்கூல வேலை செய்றாங்களாம். சம்பளம் கம்மியாயிருந்தாலும் எந்தத் தொந்தரவும் இல்லாம நிம்மதியாக வேலை செய்ய முடியுதுன்னு சொன்னாங்க''  என்றாள் மூர்த்தியின் மனைவி.
குற்ற உணர்ச்சியில் மனைவிக்கு பதிலேதும் கூற முடியாமல் விக்கித்து நின்றான் மூர்த்தி.

வி. பவானி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com