ஒரு சிகரெட்... ஒரு செடி!

குடிப் பழக்கம் தனிமனிதனையும், அவனது குடும்பத்தையும் கெடுக்கும். புகை பிடித்தல் புகை பிடிப்பவரின் உடல் நலத்தைக் கெடுப்பது மட்டுமின்றி புகை பிடிப்பவர் வெளியே விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும்
ஒரு சிகரெட்... ஒரு செடி!

குடிப் பழக்கம் தனிமனிதனையும், அவனது குடும்பத்தையும் கெடுக்கும். புகை பிடித்தல் புகை பிடிப்பவரின் உடல் நலத்தைக் கெடுப்பது மட்டுமின்றி புகை பிடிப்பவர் வெளியே விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் உடல் நலக் கேடுகளை ஏற்படுத்தும். புகை பிடித்துவிட்டு தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகள் சுற்றுப்புறச் சூழலை மெல்ல மெல்ல கெடுத்துக் கொண்டிருக்கிறது. புகை பிடித்தலினால் ஏற்படும் புற்று நோயின் தாக்கத்தைக் குறைக்க சிகரெட்களில் பொருத்தப்படும் பஞ்சு மாதிரியான ஃபில்ட்டர் (filter) "அரிப்பான்' - இலும் பல வித வேதிப் பொருள்களின் கலவை உள்ளது. அரிப்பான் வழியாக நுரையீரலுக்குள் இழுக்கப்படும் சிகரெட் புகை, புகை பிடிப்பவருக்கு இன்னும் அபாயகரமாகிறது.
இத்தகைய அபாயங்களைக் குறைக்க வழியேயில்லயா ?
"வழி உண்டு" என்கிறார் சேத்தனா ரோய்.

" பலருக்கும் தெரியாது. புகையிலையை வெண்ணிற தாளில் சுருட்டி சிகரெட் தயாரிக்கிறார்கள். சீக்கிரம் அணையாமல் நின்று நிதானமாக எரிய அந்த வெண்ணிறத் தாளும் உதவுகிறது. அப்படி நின்று எரிய அதில் என்னென்ன ரசாயனப் பொருட்கள் அந்த தாளில் இடம் பெறுகின்றன என்று தெரியுமா.. புடேன், டோலுன், நிகோடின், அசிட்டிக் அமிலம், மெதனால், அசிட்டோன், காட்மியம், அர்செனிக், பென்சீன், அமோனியா, ஹெக்ஸôமின். சுருக்கமாகச் சொன்னால் சிகரெட் சுற்றப்பட்டிருக்கும் தாள் அமிலங்கள் இருக்கும் தாள். சிகரெட் புகை இழுக்கப்படும் போது இந்த அமிலங்களின் மிச்சங்களும் நுரையீரல் வரை போகும். அதனால் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் அபாயம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

சிகரெட் பிடித்து விட்டு உலகம் எங்கும் எறியப்படும் துண்டுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு நாலரை டிரில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வட தென் துருவங்களில் கூட சிகரெட் துண்டுகள் கிடக்கின்றன. சிகரெட்களில் வைக்கப்படும் "ஃபில்ட்டர்' சிதைந்து மக்கி மண்ணோடு மண்ணாக பல மாதங்கள் எடுக்கும். இந்த ஃபில்ட்டரிலும் வேதியல் பொருள்கள் இருப்பதினால் உடலுக்கும் அபாயம். சிகரெட் பிடித்து விட்டு எறியப்படும் "ஃபில்ட்டர்'களால் சுற்றுப்புறம் குறிப்பாக நிலம், குளம், கடல் மாசுபடுத்தப்படுகிறது. "சிகரெட் பிடிக்க வேண்டாம்..' என்று எவ்வளவு சொன்னாலும்... புகை பிடிப்பது என்னவோ குறைவில்லை. நாளுக்கு நாள் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. "சிகரெட் பிடிப்பதை விடவே முடியவில்லை..'' என்று சொல்பவர்களுக்கு, "குறைந்த பட்சம் பாதுகாப்பாக சிகரெட் பிடியுங்கள்..'' என்று சொல்வதுடன் நிற்காமல் பாதுகாப்பு வழிகளையும் நான் என் கணவர் "வேத்'துடன் இணைந்து தயாரித்து வருகிறேன்.

பெங்களூருவில் "கர்மா டிப்ஸ்' என்ற அமைப்பையும் தொடங்கியுள்ளோம். பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கலந்து கூழாக்கி உலர்த்தி அதிலிருந்து சிகரெட்டிற்கான காகிதம் தயாரிக்கிறோம். இந்தக் காகிதம் சிகரெட் எரியும் போது உருவாகும் "தார்' என்ற நச்சுப் பொருளை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். அதே போல் இயற்கை முறையில் "ஃபில்ட்டர்'களைத் தயாரிக்கிறோம். இந்த மாதிரி இயற்கை ஃபில்ட்டர்களை சிகரெட்டில் பொருத்தி புகைக்கலாம். அதனால் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு குறைக்கலாம்.

உடல்நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆனால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்கள், நாங்கள் தயாரிக்கும் இயற்கைத் தாளில் புகையிலையைச் சுற்றி இயற்கை ஃபில்டருடன் புகைக்கலாம். எங்களின் நோக்கம் எல்லாரும் புகை பிடிப்பதை விட வேண்டும் என்பதுதான். புகை பிடிப்பதை விட முடியாதவர்கள் எங்களது தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், புகை பிடிப்பதால் வரும் புற்று நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.

இந்த "ஃபில்ட்டர்'கள் தூக்கி எறியப்படும் போது, அது மண்ணில் விழுந்தால் அதில் ஒரு செடி முளைக்கும். ஆம்.. அந்த "ஃபில்ட்டர்'ருக்குள் நியூசிலாந்து புல், துளசி, கீரைகளின் விதைகளை வைத்துள்ளோம். சிகரெட் துண்டுகளை வீசி எறிவதினால், நிலம் மாசுபடுகிறது. அதற்கு பிராயச்சித்தமாக ஒரு "ஃபில்ட்டர் ஒரு செடி' என்ற சிந்தனையில் "ஃபில்ட்டர்'களை தயாரித்து வருகிறோம். கடைகளில் விற்கப்படும் சிகரெட்களில் பொருத்தும் வகையிலும் ஃபில்ட்டர் தயாரிக்க உள்ளோம்'' என்கிறார் சேத்தனா.

-கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com