பேல்பூரி

உடல் எடையைக்  குறைக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் பாதாம் கொட்டை, வேர்க்கடலை, வாதுமை கொட்டை போன்றவற்றை நாள்தோறும் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பேல்பூரி

கண்டது
• (திருச்சி   செல்வநகர் மெயின்ரோட்டில் உள்ள காரின் பின்புறத்தில்)
மாமன் மச்சான் ரோடுவேஸ்
சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

• (அம்பாசமுத்திரத்தில் உள்ள ஓர் உணவகத்தில்)
டீ, காபி போன்ற சூடான திரவங்களைப் பெற
நமது  பாட்டனார் பயன்படுத்திய தூக்கு
சட்டிகளைப் பயன்படுத்துவோம். 
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

• (சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
காயா ஓடை
கோ.கருப்புச்சாமி, குமாரக்குறிச்சி.

• (நாகர்கோவில் அருகே உள்ள வல்லன் குமாரன் விளை என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
உப்பும், புளியும் உணவகம்
கே.எல்.காந்தரூபி, மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது
(தெங்கம்புதூரில் உள்ள ஒரு தேநீர் கடையில் பெரியவரும், இளைஞரும்)
"ஏன்டா குமரேசா... உங்க தாத்தா இறந்ததுக்கு நீ அழவே இல்லியாமே?''
"யோவ்... பெருசு... என்னைச் சபையில் அசிங்கப்படுத்தணும்னு நினைச்சிட்டியா? நான் அழணும் அவ்வளவுதானே?
நீ எப்ப போறேன்னு சொல்லு. அப்ப வந்து பட்டாசு கொளுத்தி அழுறேன்''
மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான் விளை.

• (சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர்)
"அழகிய சுந்தர பாண்டியன்கிற உன்னோட பெயரை வீட்டிலே எப்படிக் கூப்பிடுவாங்க?''
"எட்ட இருந்தா உரக்கக் கூப்பிடுவாங்க... கிட்டத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க''
நெ.இராமன், சென்னை-74.

எஸ்எம்எஸ்
கடிகாரத்துக்கு நேரத்தைக் காட்ட மட்டுமே 
தெரியும்.
அதை 
நல்ல நேரமாகவும், 
கெட்ட நேரமாகவும் மாற்ற
மனிதனால் மட்டுமே முடியும்.
எஸ்.சிவஞானம்,  வள்ளிப்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!
நாற்பது இடங்களில் பெண் பார்த்து,
நாற்பத்து ஒன்றாவது பெண் அமைந்ததில்
ஆணுக்குப் பெருமை.
அறுபது மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தும்,
இன்னும் திருமணமாகவில்லையே என
பெண்ணுக்கு வேதனை.
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.

அப்படீங்களா!
உடல் எடையைக்  குறைக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் பாதாம் கொட்டை, வேர்க்கடலை, வாதுமை கொட்டை போன்றவற்றை நாள்தோறும் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  பத்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 3 லட்சத்து 73 ஆயிரம் பேரின் உணவுமுறைகளை  ஆய்வு செய்திருக்கிறார்கள் அவர்கள். 
பொதுவாக பாதாம் கொட்டை போன்ற பொருள்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடியவை என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அவற்றில் நல்ல கொழுப்பு, புரதச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன. வயதானவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய  இவற்றை உண்ணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 
என்.ஜே., 
சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com