நோபல் பரிசு பெற்ற கஸுவோ இஷிகுரோ!

" தரிமெய்ன்ஸ் ஆஃப் த டே', "நெவர் லெட் மி கோ' நாவல்களை எழுதியமைக்காக இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் விருதினைப் பெற்றிருப்பவர் பிரிட்டிஷ் எழுத்தாளரான கஸுவோ இஷிகுரோ .
நோபல் பரிசு பெற்ற கஸுவோ இஷிகுரோ!

" தரிமெய்ன்ஸ் ஆஃப் த டே', "நெவர் லெட் மி கோ' நாவல்களை எழுதியமைக்காக இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் விருதினைப் பெற்றிருப்பவர் பிரிட்டிஷ் எழுத்தாளரான கஸுவோ இஷிகுரோ . விருது கிடைத்த செய்தியைக் கேட்டதும் அவர் மனநிலையினை அவரே விவரிக்கிறார்-

"நான் சமையலறையில் இருந்து நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கும் போது தொலை பேசி கிணுகிணுத்தது. நண்பர் ஒருவர் எனக்கு 2017 -ஆம் ஆண்டிற்கான நோபல் விருது கிடைத்திருப்பதாகச் சொன்னார். அது வெறும் புரளி அல்லது பொய்யான தகவல் என்றே நினைத்தேன். நோபல் விருது பொறுப்பாளர்களிடமிருந்து தகவல் ஏதும் எனக்கு வராததால், நான் அப்படி நினைத்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் பிபிசி என்னை தொலைபேசியில் அழைத்து நோபல் விருது எனக்குக் கிடைத்திருப்பது பற்றி உறுதி செய்தது. முதலில் வந்த தகவலை புரளி என்று கருதினேன். இப்போது பிபிசி உறுதிப்படுத்துவதால் நம்புகிறேன் என்றேன். இந்த உரையாடல் முடிந்த சில மணித்துளிகளில் நோபல் விருது பொறுப்பாளர்களிடமிருந்தும் தகவல் வந்தது. இலக்கியத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பதை என்னை அளவுக்கு அதிகமாக புகழ்ந்துவிட்டதாக கருதுகிறேன். என்றாலும், எனக்கு இது ஒரு சிறப்பான கெளரவம்தான். நான், நோபல் விருதினைப் பெற்றிருக்கும் பெரும் எழுத்தாளர்களின் பட்டியலில் கடைசியில் நிற்கிறேன். அதனால் இந்த விருதினைப் பெறும் கெளரவம் எனக்குக் கிடைத்திருக்கிறது..''
"கஸுவோ இஷிகுரோ' பெயரைக் கேட்டால் ஜப்பான் நாட்டவராகத் தெரிகிறதே.. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் என்கிறார்களே.. என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படுவதுண்டு.
அங்கே ஜப்பான் நாட்டில் இலக்கிய ஆர்வலர்கள், இன்னொரு ஜப்பானிய எழுத்தாளரான "ஹருகி முறகாமி' என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த செய்தியைக் கொண்டாட டோக்கியோ நகரில் ஒரு புத்தர் கோயிலில் குழுமியிருந்தனர். நோபல் விருது கஸுவோ இஷிகுரோ வுக்கு என்று அறிவிப்பு வெளியானதும், ஏமாற்றம் அடைந்த இலக்கிய ஆர்வலர்கள். " ஜப்பானில் பிறந்த கஸுவோ இஷிகுரோ வுக்குத்தானே கிடைத்திருக்கிறது.... ஜப்பானிய மகனுக்கு விருது கிடைத்திருப்பதைக் கொண்டாடுவோம்..' என்று கொண்டாடியிருக்கின்றனர்.
ஆம்..! கஸுவோ இஷிகுரோ ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்தவர். கஸுவோ இஷிகுரோ 1954 -இல் நாகசாகியில் பிறந்த போது அதிருஷ்ட வசமாக அணு கதிர் வீச்சு பாதிப்பின்றி பிறந்தார். அவருடைய ஆறாவது வயதில், அவருடைய தந்தைக்கு இங்கிலாந்தில் கடல் தொடர்பான வேலை கிடைக்க... இங்கிலாந்தில் குடியேறி பிறகு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள்.
கல்லூரியில் கஸுவோ சமர்ப்பித்த ஆய்வேடு (thesis) தான் அவரது முதல் நாவலாக " எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' (A Pale View of Hills) என்ற பெயரில் 1982 -ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவல் " யார் இந்த கஸுவோ இஷிகுரோ .. ஜப்பான் நாட்டவர் ஆங்கிலத்தில் இந்தப் போடு போட்டிருக்கிறார்..' என்று பலரும் வியந்த அந்த நாவலில் ஜப்பான் வேர்களைத் துறந்து இங்கிலாந்தில் குடியேறிய ஒரு ஜப்பானிய பெண்ணின் மனநிலையை உருக்கமாகச் சித்திரித்திருந்தார்.
முதல் நாவலில் புகழ் பெற்றதும், கஸுவோ இஷிகுரோ, அடுக்கடுக்காக நாவல்களை எழுதித் தள்ளவில்லை. நின்று நிதானித்து எழுதி.. முப்பத்தைந்து ஆண்டு கால இடைவெளியில் ஏழு நாவல்கள், ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார்.
கஸுவோவின் "The Remains of the Day', 1989-இல் புக்கர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரைப்படம் ஆகவும் உருவானது.
ஒரு முறை மனைவியிடம் சொல்லிவிட்டு, கஸுவோ தொடர்ந்து நான்கு வாரங்கள் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்தரை வரை எழுதியிருக்கிறார். மதிய உணவுக்காக ஒரு மணி நேரம், இரவு உணவுக்காக இரண்டு மணி நேரம் என்று அந்த நேரத்தில் மட்டும் பேனாவைத் தொடவில்லை. ஞாயிறு அன்று அறிவிக்கப்பட்ட ஓய்வு. திங்கள் முதல் சனி வரை முழு நேர எழுத்து. மனதில் உருவாகும் கற்பனை அலைகளை காகிதத்தில் வார்த்தார். போன் அழைப்புகளை முற்றிலும் தவிர்த்தார்.
"நீங்கள் பெரிய நாவலாசிரியர்'' என்று கஸுவோவிடம் சொன்னால், அவர் முகம் மலர மாட்டார். மாறாக கஸுவோவுக்கு கோபம் வரும். " நாவல் எழுதுபவரில் என்ன .. பெரிய நாவலாசிரியர்... சிறிய நாவலாசிரியர்... அனைவரும் ஒன்றுதான்'' என்பார்.
"எழுபதுகளில் " The Conversation' என்ற திகில் படத்தைப் பார்த்தேன். வசீகரிக்கப்பட்டேன். அந்தப் படத்தில் கண்காணிப்பவராக ஹெக்மேன் அற்புதமாக நடித்திருப்பார். அந்த பாத்திரத்தை அடிப்படையாக வைத்து "The Remains of the Day' கதையில் "பட்லர்' பாத்திரத்தை உருவாக்கினேன்'' என்கிறார் கஸுவோ.
-பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com