பொம்மை கார் முதல் பி.எம்.டபுள்யூ வரை..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ளது கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் உண்ணி கிருஷ்ணனுடைய ஸ்டுடியோ.
பொம்மை கார் முதல் பி.எம்.டபுள்யூ வரை..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ளது கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் உண்ணி கிருஷ்ணனுடைய ஸ்டுடியோ.  அங்கே வருகிறவர்களுக்கு இனியதோர் ஆச்சரியம் காத்திருக்கும். அங்கு குட்டி குட்டி பொம்மை கார்களின் அணிவகுப்பைக் காணலாம். அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உண்ணி கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்றாலும், அதேபோல பொம்மைக் கார்கள் சேகரிப்பைக் காணலாம். காரணம், பொம்மைக் கார் சேகரிப்பது உண்ணி கிருஷ்ணனின் பொழுதுபோக்கு. தன்னுடைய நான்காவது வயது முதல் கார் பொம்மைகளை இவர் சேகரித்து  வருகிறார். பொம்மைக் கார்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதுமே, சிறுவனைப் போன்ற ஆர்வத்துடன் பேச ஆரம்பித்து விடுகிறார் உண்ணி:

"சிறுவயது முதலே பொம்மைக் கார்களை சேகரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. என்னுடைய  நான்காவது பிறந்த நாளின்போது, என் அம்மா எனக்கு  ஒரு  கார் பொம்மை  பரிசளித்தார்.  அன்றைய காலகட்டத்தில் மிகவும்  பிரபலமான மாரிஸ் மைனர் காரின் பொம்மை  அது. பிற்காலத்தில் நிஜமாக கார் வாங்கினபோது அடைந்த  சந்தோஷத்தை விட அதிக சந்தோஷத்தை  அந்த  கார் பொம்மை எனக்குக் கொடுத்தது.

விடுமுறையில் கேரளாவிலிருந்து என் வயதை  ஒத்த  என்னுடைய  கசின்ஸ் சென்னைக்கு வருவார்கள். அப்போது,  எங்களை கடைக்கு அழைத்துக் கொண்டு போய் பொம்மைக் கார்கள் வாங்கிக் கொடுப்பார் எங்கள் அம்மா. நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை உண்டு. அங்கே வெளிநாட்டு பொம்மைகள் விற்பார்கள். அங்கிருந்துதான் அம்மா கார் பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார். என் இளம் வயதில்,  பிறந்தநாளுக்கு மட்டுமில்லாமல்,  பல்வேறு தருணங்களிலும் அம்மாவும்,  மற்ற உறவினர்களும் எனக்கு கார் பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார்கள். ஓரளவுக்கு என்னிடம் கார் பொம்மைகள் சேர்ந்த பிறகு அவற்றை மிகவும் பொசசிவ் ஆக நினைக்க ஆரம்பித்தேன். அவற்றை நான் மட்டுமே வைத்து விளையாடுவேன். வேறு யாருக்கும் விளையாடுவதற்குக் கூட கொடுக்க மாட்டேன். 

நான் ஓர்  இசைக்கலைஞனாக வளர்ந்த பிறகு,  வெளிநாடுகளுக்குச் செல்லும்போது,  ஷாப்பிங் சென்றால்,  மற்ற எந்த ஐட்டங்களையும் விட,  பொம்மைகள் விற்கும் கடைகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவேன்.  அங்கே, பொம்மைக் கார்கள்,  உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களின் மினி மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அவற்றையெல்லாம்  உடனே வாங்கிக்  கொண்டு வந்து விடுவேன். என்னுடைய ஆர்வம் பற்றித் தெரிந்த நண்பர்களும்,  உறவினர்களும் கூட எங்கேயாவது அழகான கார் பொம்மைகளைப் பார்த்தால்,  உடனே  உன் நினைவுதான் வந்தது! என்று சொல்லி,  வாங்கிக்  கொண்டு வந்து கொடுப்பார்கள்.  என்னுடைய ரசிகை ஒருவர்,  பலஆண்டுகளுக்கு முன் ஒருமுறை என் பிறந்த நாளன்று எனக்கு ஒரு கார் பொம்மை பரிசளித்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இப்படியாக என் முயற்சியாலும்,  என்நண்பர்கள்,  உறவினர்களின் அன்பாலும் என்னிடம் நூற்றுக்கும் அதிகமான கார் பொம்மைகள் சேர்ந்து விட்டன.  அவற்றில் பாதியை  ராயப்பேட்டையில் உள்ள என் ஸ்டுடியோவிலும்,  மீதியை என் வீட்டிலும் வைத்திருக்கிறேன்.  அந்த பொம்மைக்  கார்களைப் பார்க்கிற போதெல்லாம்,  நான் என் சிறு வயது நினைவுகளில் மூழ்கிவிடுவேன்.

எங்கள் வீட்டுக்கு வரும் சில குழந்தைகள்,  கார் பொம்மைகளின் சேகரிப்பைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு இல்லாமல், எனக்கு ஒரு கார் குடுங்க! என்று கேட்ட சமயங்களும் உண்டு.  இது மாதிரியான சமயங்களில் சாக்லேட்  மாதிரி எதையாவது கொடுத்து,  திசை திருப்பி நிலைமையை வெற்றிகரமாக சமாளித்திருக்கிறேன். ஒரே ஒரு தடவை,  ஒரு நண்பரின் மகன் எனக்கு ஒரு பொம்மை கார் வேண்டும்! என ரொம்பப் பிடிவாதம் பிடித்தான். அவனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், வேறு வழி இல்லாமல், மனசை திடப்படுத்திக் கொண்டு, என்னுடைய ஒரு  கார் பொம்மைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தேன். என்  குழந்தைகளின் சிறுவயதில் கூட, கார் பொம்மைகளை அவர்களுக்கு விளையாடக் கொடுத்தது கிடையாது.

வீட்டுக்கு வருகிறவர்களில் சிலர் கார் பொம்மைகளை கையில் எடுத்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது ஒருசில நேரங்களில் அவை கீழே விழுந்து சக்கரம் போன்ற சில பாகங்கள் உடைந்து போனதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படும்.

என்னுடைய கார் பொம்மைகள் கலெக்ஷனில் ஒரே ஒரு பொம்மை ரயிலும் இருந்தது. அதை பேட்டரி மூலமாக இயக்க முடியும்.  அதன் எஞ்சின் பகுதியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு,  ரயிலை இயக்கினால்,  இஞ்சின் புகை கக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கிறபோது,  பெரியவர்கள் கூட ஒரு குழந்தை போல ரசிப்பார்கள்.  ஆனால் அந்த ரயில் இப்போது ரிப்பேர் ஆகிவிட்டது.

சின்ன வயதிலிருந்தே என் கார் சேகரிப்பைப் பார்த்து வளர்ந்ததன் காரணமாகவோ என்னவோ என்மகனுக்கும் கார்கள் என்றால் ஓர்  ஆர்வம். ஆகவே,  அவன் ஸ்கூல் படிப்பை முடித்ததும் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான்.  மேற்கொண்டு படிக்க கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நாடான ஜெர்மனி போக ஆர்வமாக இருக்கிறான்.

பதினெட்டு வயதில்தான் நம்நாட்டில் ஒருவருக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுப்பார்கள் என்றாலும், நான் அதற்கு முன்பாகவே கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டேன். லைசென்ஸ் இல்லை என்பதால், வெளியில் காரை எடுத்துக் கொண்டு போக வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, யாராவது காரில் புறப்பட்டால், அதற்கு முன்பாக காரை வீட்டிலிருந்து வெளியே ஓட்டி, எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பேன். அதேபோல,  வீட்டுக்கு வந்தால், வெளியிலிருந்து, உள்ளே எடுத்துக் கொண்டு போய் நிறுத்துவேன். பதினெட்டு வயதில் சுலபமாக எட்டு போட்டுக் காட்டி, லைசென்ஸ் வாங்கி விட்டேன்.

2000 -ஆம் ஆண்டு, முதன் முதலில் நான் சொந்தமாக வாங்கியது ஒரு மாருதி சென் கார். அதன் பின், இன்றுவரை சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்று காரை மாற்றிக் கொண்டே இருக்கிறேன். லேன்சர், டொயோட்டா-கரோலா, ஹோண்டா-அக்கார்டு, என்று மாறி இப்போது என்னிடம் உள்ளது  மூன்றாவது பி.எம்.டபுள்யூ கார்.

சென்னை மாநகர நெரிசலில் கார் ஓட்டுவது என்பது அவசியம் கருதித் தானே ஒழிய, எனக்குப் பிடித்தது நீண்ட தூர கார் பயணம்தான்.  சென்னையிலிருந்து கேரளாவில் வயநாடு, கர்நாடகாவில் கூர்க் என்று ஜாலியாக பல நீண்ட தூர கார் பயணங்கள் செய்திருக்கிறேன். இசையைப் போலவே,  நான் கார்களையும்,  நீண்ட தூர கார் பயணங்களையும் ரசிக்கிறேன்.

-எஸ். சந்திர மெளலி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com