ஸ்ரீமான் சங்கீத சபை காரியதரிசி!

"கவிஞன், கவிஞனாகப் பிறக்கிறான்' என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி ஒரு சங்கீத சபைக் காரியதரிசியும், சங்கீத சபைக் காரியதரிசியாகவேப் பிறக்கிறான் என்று சொல்லுவேன்.
ஸ்ரீமான் சங்கீத சபை காரியதரிசி!

"கவிஞன், கவிஞனாகப் பிறக்கிறான்' என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி ஒரு சங்கீத சபைக் காரியதரிசியும், சங்கீத சபைக் காரியதரிசியாகவேப் பிறக்கிறான் என்று சொல்லுவேன். ஏனென்றால், அந்தப் பதவிக்கு வேண்டிய தனிப்பட்ட சாமர்த்தியங்கள் படிப்பதனாலோ, சொல்லிக் கொடுப்பதனாலோ வந்துவிடாது. அந்தக் காரியதரிசி தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும்போது "குவா குவா' என்று கத்தாமல், தன் சின்னஞ்சிறு கண்களை அகலத்திறந்து கொண்டு எத்தனைபேர் அங்கே வந்திருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்குமென்று நினைக்கிறேன். பிற்காலத்தில் கச்சேரிக்கு என்ன வசூலாகுமென்று கணக்குப் போடத்தான்!
 சங்கீத சபைக் காரியதரிசிகள் ஒரு விதமானக் கலைப்பித்துப் பிடித்தவர்கள். தாங்கள் ரஸிப்பதில் அல்ல; மற்றவர்களை ரஸிக்கச் செய்வதில். பிறவிக் காரியதரிசிக்குத் திடீரென்று ஒருநாள் தமது ஊரில் உள்ளவர்கள் செவிக்கு விருந்து இல்லாமல் தவிக்கின்றார்களே என்று எண்ணிக் கண்ணீர் விடுவார். மறுநாள் நான்கு நண்பர்களிடம் இதைப் பற்றிச் சொல்லுவார். உடனே ஒரு சங்கீத சபை தோன்றும்.
 இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தக் காரியதரிசி சபையின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவதில்லை; உதவித்தலைவர் பதவிக்கும் ஆசைப்படுவதில்லை. அவற்றிற்குப் பெரிய மனிதர்களாகப் பார்த்துப் பொறுக்கிப் போடுவார். இப்படிப்பட்ட பெரிய மனிதர்கள் பண விஷயத்திலேயன்றி உடலமைப்பிலும் பெரியவர்களாகவே இருப்பது வழக்கம்! ஒரு காரியதரிசி, கேவலம் காரியதரிசியாகவே இருந்து உழைத்து, உழைத்து, உழைத்து வருவார். புதிதாக இப்படித் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சபைக்கு அதன் காரணகர்த்தாவே காரியதரிசியாக வந்து விடலாம். ஆனால் ஏற்கெனவே நடைபெற்று வரும் ஒரு சபையில் ஒருவர் புதிதாக அந்தப் பதவிக்கு வருவது மிகவும் சிரமமான காரியம். அதில் வெற்றி பெறுவதற்கு அவர் சாம, தான பேத உபாயங்களுடன் சில சமயம் "ஜெனரல்பாடி மீட்டிங்'கில் கலாட்டா உபாயத்தையும் பின்பற்ற வேண்டி வரும்.
 சங்கீத சபைக் காரியதரிசிகளில் பலர் எனக்கு நண்பர்கள், சிலர் சாதாரணமாக அறிமுகமானவர்கள். முக்கியமாக காசு வசூலாகும் கச்சேரிகள் இல்லாத தினங்களில் அவர்களுடன் அதிகம் பழகுவேன். அதுதான் அவர்களுக்கும் மிகவும் பிடித்தமான விஷயம். "எங்கே ஸôர்! நம்ப சபைப் பக்கம் வருகிறதேயில்லையே?'' என்று கேட்டு வைப்பார்கள். ஆனால் நான் அதை அப்படியே நம்பி விடுவதில்லை.
 காரியதரிசியைப் பற்றி பலர் பொறாமைப்படுவார்கள். ஏனென்று பிறகு சொல்கிறேன். ஆனால் நான் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.
 சாதாரணமாகக் காரியதரிசிகள் சுகவாசிகள் அல்ல. அவர்கள் அநேகமாக ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அல்லது உத்தியோகத்திலிருப்பார்கள். ஒரு தினத்திலுள்ள இருபத்திநான்கு மணி நேரத்தில் சர்க்கார் சட்டப்படி 7 மணி நேரம் காரியாலயங்களில் உழைத்த பிறகு பாக்கியுள்ள 17 மணி நேரமும் சபையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்; அதைப்பற்றியே பேசுவார்கள். அதைப் பற்றியே இரவில் கனவு காண்பார்கள்.
 எப்படி சபைக்கு அதிக அங்கத்தினர்களைச் சேர்ப்பது, எந்தக் கச்சேரியை எந்தத் தேதியில் வைத்தால் வசூலாகு மென்று திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ரஸிகர்களுக்குச் சம்பளம் வரக்கூடிய ஒவ்வொரு மாதம் முதல்வாரத்தைப் பற்றி நினைத்தாலே அவர்களுக்கு என்னவோ செய்யும்! அவர்கள் கலையை ரஸிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆர்வந்தான். அதற்காக அவர்கள் கூடியவரை நம்மை உயர்ந்த வகுப்பு டிக்கட்டு வாங்கச் செய்ய விரும்புகிறார்கள். அவ்வளவுதான்!
 ஒரு சபை இருக்கும் ஊர் அல்லது பேட்டையில் வேறு ஒரு சபை இருந்து விட்டாலோ இந்தப் போட்டி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 முதலில் யார், யார் கச்சேரியை எவ்வெப்பொழுது நடத்த வேண்டுமென்று இவர்கள் திட்டம் போட்டால் மட்டும் போதுமா? ஏனெனில் சபைக்கு இவர்கள் ஒன்று நினைக்க வித்வான்களும், நடனமணிகளும், நாடகக்காரர்களும் வேறு ஒன்று நினைத்துக் கொண்டிருப்பார்களே!
 கலைஞர்களுடன் பேசி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுவது ஒரு தனிக் கலை. எந்தெந்தக் கலைஞரை யார் மூலமாகப் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் பேசிப் பழக வேண்டும் என்று காரியதரிசிக்கு அத்துபடியான விஷயம். சில வித்வான்களின் கச்சேரிகளுக்குச் சிஷ்யர்கள் மூலம் ஏற்பாடு செய்யும்படியாக இருக்கும். நடன மணிகளுக்கு அவர்கள் அம்மா, மாமா, காரியதரிசி இவர்களைச் சரிப்படுத்த வேண்டும். நாடகக் கம்பெனிக்காரர்களுக்கு மானேஜர்கள், அண்ணாக்கள் இருப்பார்கள். கலைஞர்களும், காரியதரிசிகளும் நேருக்கு நேர் பேசி முடிவு செய்வதில் சில சிரமங்கள் உண்டு. அவர்களுடன் பேரஞ் செய்வது தர்மசங்கடமாக இருக்குமாகையால் இந்த "நடு' பாத்திரங்கள் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது.
 கலைஞர்களை நிகழ்ச்சியை ஒப்புக்கொள்ளச் செய்து அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதோடு காரியதரிசியின் பொறுப்பு நின்றுவிடவில்லை. அது ஒரு கல்யாணத்திற்குப் பந்தக்கால் நடுவதற்கு ஒப்பாகும். பிறகுதான் அவரது கவலை ஆரம்பமாகும்.
 நிகழ்ச்சிக்கு முதல்நாளே கலைஞர்கள் ஊரிலிருப்பார்களா? என்று விசாரிக்க வேண்டும். கச்சேரி தினமன்று அவர்கள் தங்கள் வீட்டில்தான் இருக்கிறார்களா? அவர்கள் தேக ஸ்திதி, தொண்டை, பக்கவாத்தியக்காரர்கள் எல்லாரும் செளக்கியமாக இருக்கிறார்களா? என்று நேரில் போய் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 மாலை கச்சேரி நடக்கவிருக்கும் நேரத்திற்கு பத்து நிமிஷத்திற்கு முன்னால் காரியதரிசி வாசற் பக்கம் அடிக்கடி வந்து போவார். கடைக்கண்ணால் டிக்கட் விற்கும் இடத்தைக் கவனிப்பார். வாசலில் மோட்டார் வண்டி நிற்கும் சப்தம் கேட்டால் யாராவது பெரிய மனிதர்கள், உத்தியோகஸ்தர்கள், சபை போஷகர்கள், கச்சேரி செய்பவர்கள் வருகிறார்களா என்று வந்து பார்ப்பார். வித்வான் வருவதற்கு சில நிமிஷ நேரம் தாமதமாகிவிட்டால் தவித்துப் போவார். இங்கும் அங்கும் போய்க்கொண்டிருப்பார். ஒருவேளை அந்த வித்வான் வராமல் போய்விட்டால் பதிலுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்.
 கடைசியில் அந்த வித்வான் வந்துவிடுவார். அவர் தாமதமாக வந்ததற்காக ஒரு நொண்டிச் சாக்குகூடச் சொல்ல மாட்டார். அப்படிச் சொல்வது கெüரவக் குறைவு என்பது அவர் எண்ணம். ஆனால் அது மனிதத்தன்மையல்ல என்று அவர் உணர்வதில்லை. காரியதரிசியின் உதட்டில் கோபம், சந்தோஷம் இரண்டும் கலந்த புன்னகை அரும்பும். ஆனால், வாயைத் திறந்து சிரிக்க மாட்டார். அவர் கைகள் இரண்டும் தாமாக உயர்ந்து கும்பிடுபோடும். வித்வான் மேடைக்கு ஏறியதும் காரியதரிசி ஒரு சிறு மூச்சு விடுவார். அவர் தமது மனைவி பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுகூட இப்படிக் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஒவ்வொரு பாட்டுக் கச்சேரியின் போதும், நாடகத்தின்போதும் அவர் இந்த மனக் கிளர்ச்சிக்கு உட்பட்டாக வேண்டும். பிறகு, அவர் உள்ளே வரும் பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்
பவர்கள், உத்தியோகஸ்தர்கள் முதலியவர்களைச் சிரிப்பதுபோல் பாவனை செய்து வரவேற்பார். ஆனால், அவர் நினைவெல்லாம் டிக்கட் விற்குமிடத்திலேயே இருக்கும். மிக அவசரமாக யாரையோ பார்ப்பதற்காகச் செல்வதுபோல சென்று வசூலைப் பற்றி விசாரித்து விட்டுப் போவார்.
 ஏராளமான ரஸிகர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட பிரபலமான சங்கீத சபைகளின் காரியதரிசிகளின் நிலைமை கச்சேரி தினங்களன்று மிகவும் தர்ம சங்கடமானது. அதுவும் ஒரு நல்ல வசூலாகக்கூடிய நிகழ்ச்சியன்று அவர் மிகவும் சிரமப்படுவார். அன்றைய தினம் பார்த்து எதிர்பாராத பெரிய மனிதர்கள், நண்பர்கள் எல்லாரும் வந்து சேருவார்கள். தாங்கள் வரப்போவதைப் பற்றி முன்கூட்டியே தெரியப்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களைச் சரியான இடத்தில் உட்கார வைப்பது பெரிய பிரச்னையாகிவிடும். ஆனால், அநுபவமான காரியதரிசி ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டு விடுவார். சிலசமயம் மேடையிலேறி கலைஞர்களைக் கவனித்துக் கொண்டிருப்பதுபோல் நடிப்பார். சிலசமயம் பெரிய கும்பிடு போட்டுவிட்டு மிக வேகமாக ஹாலில் ஒரு வாசற்படிக்குள் புகுந்து இன்னொரு வாசற்படிக்குப் போவார்.
  அங்கே, இங்கே இருக்கும் செகோஸ்லோவாக்யா தேசத்தில் செய்த ஒன்றைரைச் சாண் சதுர பரப்புள்ள மடிப்பு நாற்காலியைக் கொண்டு வந்து போடுவார். பல வரிசைகளில் நடுவில் இருக்கும் இடைவெளிகளில் சிலவற்றைத் திணிக்க முயற்சிப்பார்.
 மேலும் சமாளிக்க முடியாது என்று கண்டால் நாசூக்காக, வாசற்பக்கம்போய் நின்று வருகிற பெரிய மனிதர்களை வழக்கத்தைவிடப் பத்து மடங்கு பலமாக வரவேற்பார். "ஸாரைக் கொண்டு உட்கார்த்தி வை'' என்று ஒருவரிடம் சொல்லுவார். கமிட்டி அங்கத்தினர் அந்த "ஸôரை' ஜம்மென்று, நேராக அழைத்துப் போய் அங்கிருக்கும் ஆளிடம் எங்கேயாவது அழைத்துப்போய் உட்கார்த்தி வைக்கச் சொல்லுவார். சிலசமயம், அவரை நேராக முதல் வரிசைக்கு அழைத்துக் கொண்டுபோய் அதை ஒரு பிரதட்சிணம் வந்த பிறகு கடைசி வரிசைக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார்த்தி வைப்பார்.
 மிக மிக நன்றாக வசூலாகும் என்று அவர்கள் கருதும் இதுமாதிரி எக்கச்சக்கமான நிலைமைக்கு இடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அன்று சபைக்குப் போனால், அது நமக்கு வழக்கமாகப் போகும் அதே சபைதானா என்ற சந்தேகம் தோன்றும். ஏனென்றால் வாசலிலிருந்து உள்ளே போகும் வழியில் இருப்பவர்களெல்லாம், புத்தம் புதிய ஆட்களாக இருப்பார்கள். சபை சம்பந்தப்பட்ட காரியதரிசியும் மற்ற நிர்வாகிகளும் அன்று கண்ணில் பட மாட்டார்கள்.
 இதெல்லாம் அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை; வேறு வழியில்லை.
 சபைக் காரியதரிசிகளைப் பற்றி அத்தியாயம் அத்தியாயமாக எழுதலாம். சில மேடைப் பிரசங்கிகள் சொல்வதுபோல் நான் இன்னும் இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
 சில கலைஞர்களைத் திருப்தி செய்வதற்குள் காரியதரிசிக்குப் போதும் போதுமென்று ஆகிவிடும். கச்சேரி செய்வதற்காக ஒப்புக்கொண்டு விளம்பரஞ் செய்த பிறகு வீட்டிலிருந்து போக வர இரண்டே இரண்டு பெரிய டாக்ஸிகளுக்கு ஏற்பாடு செய்து பணம் கொடுக்க வேண்டுமென்பார்கள். சில வித்வான்கள் கச்சேரி செய்த பிறகு இரவு ஒன்பதரை மணிக்கு அவர்களுக்குச் சுடச்சுட இட்லியோ, வெல்லச் சீடையோ கூட வைத்திருக்க வேண்டுமென்று கூடக் கூறுவார்கள்.
 காரியதரிசி சபையை வெற்றிகரமாக நடத்தினால் மட்டும் போதாது. அவர் அதைச் சேர்ந்த மற்றவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்குப் பாத்திரமாகிக் கொண்டே இருக்க வேண்டும். எப்படிப்பட்ட மனிதராயிருந்தாலுஞ் சரி, கணக்கு என்று பார்த்தால் ஏதாவது தப்புக் கண்டுபிடிக்கலாம். அல்லது குறை சொல்லலாம். ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பும் காரியதரிசி அந்தக் காரியத்தை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பாரேயன்றி அதனால் ஏற்படும் சிரமத்தையும், செலவுகளையும் பொருட்படுத்த மாட்டார். ஆனால் அவரை விரும்பாத நிர்வாகிகள், அங்கத்தினர்கள் சிலர் பொதுக் கூட்டங்களில் ஏதாவது கேள்விகள் கேட்டு வம்பு செய்வார்கள்.
 காரியதரிசி ஸைக்கிளில் செல்லாமல், ஆட்டோ ரிக்ஷாவில் சென்றதற்காக குறை சொல்வார்கள். வெளியில் சுற்றும்போது பட்டாணிக்கடலை வாங்கித் தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ளாமல் ஹோட்டலிற்கு சென்று டிபன் சாப்பிட்டார் என்பார்கள்.
 எத்தனையோ அசட்டுக் காரியதரிசிகள் சபை எப்படியாவது நடக்க வேண்டுமென்ற ஆசையில் தாங்களே கையை விட்டுச் செலவழித்து ஓட்டாண்டிகளானது எனக்குத் தெரியும்.
 காரியதரிசி ஒரு மந்திரியையோ அல்லது ஒரு பெரிய மனிதரையோ தலைமை வகிக்கச் சொல்லும்போது சில சமயம் மேடை மீது ஏறிப் பேசுவதுண்டு. காரியதரிசி ஏதாவது பெருமை அடைவதென்றால் அது இந்த ஒரு சம்பவம்தான் ஆகும். அப்போதுகூட அந்தக் காரியதரிசி தமது பிரசங்க முடிவில் "இந்த சந்தர்ப்பத்தில் சபை அங்கத்தினர்கள் தங்கள் சந்தா பாக்கியைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று கெஞ்சிப் பேசுவார். அவருக்கு சபை நன்றாக நடப்பதில்தான் கண், மனம் எல்லாம்.
 சங்கீத சபைக் காரியதரிசிகள் உண்மையில் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு சபை விஷயம் என்றால் வீடு, மனைவி, குழந்தை இருப்பதெல்லாம் அடியோடு மறந்து போய் விடும். சர்வமும் சபை, சபை சபைதான். அவர்களுடைய மனைவிமார்கள், குழந்தைகள் எல்லாருக்கும் எனது 
அனுதாபங்கள்!
 நாட்டில் கலை பரவி வருவதற்கு யார் யாரோ காரணமென்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்தப் பெருமை சங்கீத சபைக் காரியதரிசிகளையே சேர்ந்தது.
 பல சபைகளில் அநேகமாக ஒரு நபரே தொடர்ந்து காரியதரிசியாக இருந்து வருவதுண்டு. அதனால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. ஆனால் நன்மைதான் அதிகம்.
 தப்பித் தவறி ஒரு சபையின் காரியதரிசியாக இருப்பவர் அந்தப் பதவியினின்றும் விலக நேரிட்டால் அதற்காக அவர் அந்தச் சபையை அழித்துவிட முயற்சிப்
பதில்லை. தாம் வெளியேறி புதிதாக இன்னொரு சபையைத் துவக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வைக்க முயற்சிப்பார். இந்த ரீதியில்தான் இன்று சபைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
 சங்கீதக் கச்சேரிகள், நடனங்கள், நாடகங்கள் இவற்றைப் பற்றி விமர்சகர்கள் எழுதுகிறார்கள். ஆனால் உண்மையான விமர்சனம் ஒவ்வொரு சங்கீத சபையின் கமிட்டி மீட்டிங்கில் அதன் அங்கத்தினர்கள்  "யாரை வைப்பது'  என்று நிர்ணயிக்கும்போது வெளியிடும் அபிப்பிராயங்கள்தான். அவற்றை ரிகார்ட் செய்து வெளியிட்டால் பல சங்கீத வித்வான்களும், நடனமணிகளும், நாடகக்காரர்களும் தங்கள் உண்மையான யோக்யதையை அறிந்து கொள்ளுவார்கள்.
(1958-"கலாநிகேதன்' நான்காம் ஆண்டு விழா மலரிலிருந்து) 
நன்றி : கலாநிகேதன் "பாலு'
துமிலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com