ஜீவ யாத்திரை

கிருஷ்ணமூர்த்தி ஐயா வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுக் கிளம்புறாரு. சாமானுங்க ஒவ்வொண்ணா பெரிய்ய லாரியில ஏறிக்கிட்டிருக்குது. தெருமுனையிலே ஒரு கார் கூட நிக்குது.
ஜீவ யாத்திரை

கிருஷ்ணமூர்த்தி ஐயா வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுக் கிளம்புறாரு. சாமானுங்க ஒவ்வொண்ணா பெரிய்ய லாரியில ஏறிக்கிட்டிருக்குது. தெருமுனையிலே ஒரு கார் கூட நிக்குது.
மதியத்துக்குள்ளே லாரியிலே சாமானையெல்லாம் ஏத்திட்டு, அவரு தன் பொண்டாட்டி புள்ளைங்களோட அந்தக் காருல போவாரு போல இருக்கு.
"திக்'குனு இருக்குது எனக்கு.
இந்தக் குடும்பம் கௌம்பிட்டா அப்புறம் என் சாப்பாட்டுக்கு என்ன வழி....? ஒரே மலைப்பா இருக்குது.
எஜமான் பொண்டாட்டி லீலாம்மா கடைசி தரமாக என்னோட அலுமினியத் தட்டுல வெச்ச சோத்துல வாய் வெக்காம ரொம்ப நேரமா"க்கும்....க்கும்...'னு மொனகிக்கிட்டே இருந்தேன். அப்பிடியே காலைப் பரப்பி உக்காந்துக்கிட்டு நடக்கிறதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தேன்.
பக்கத்து வீட்டம்மா கூட என்னைப் பாத்து, "" பாவம் ஐயரு குடும்பம் போயிட்டா இந்த ராஜு சோத்துக்கு என்ன பண்ணுமோ தெரியலியே''ன்னு பேசிக்கிட்டிருந்தாங்க.
அப்போ கூட நாம ஒருவாய் சோறு போடுவோம்னு அந்தம்மா நெனைக்காது போல இருக்குது.
லீலாம்மா வெச்ச சோத்துல ரெண்டு மூணு ஈயிங்க வந்து உக்காருது. "இதுங்க வேற'ன்னு சலிச்சுக்கிட்டே எழுந்து போயி சாப்பாட்டுல வாய வெச்சேன். நல்ல ருசியான சாம்பார் சாதம். லீலாம்மா செய்யிற சாப்பாடே ஒரு தனி ருசிதான். இதுக்கு முன்னாடி இந்த வீட்டுல குடி இருந்தவங்க எனக்கு உப்பு சப்பில்லாத வெறும் சோறுதான் வெப்பாங்க. ஆனா இந்த மகராசி லீலாம்மா சாம்பார், ரசம், மோர் எதாவது கலந்துதான் வைப்பாங்க. இந்த மனசு யாருக்கு வரும். இனிமே இந்த மாதிரி சாப்பாடு எனக்கு யாரு போடுவாங்க....
சரி. அப்புறமா நம்ம கவலையைப் பட்டுப்போம்னு நெனைச்சுக்கிட்டு சாப்பாட்டை மிச்சம் வெய்க்காம திருப்தியா சாப்ட்டு முடிச்சேன்.
மாடிப் படி கீழால எனக்குன்னு போட்டிருக்கிற கோணியில போயி படுத்துக்கிட்டு, முதுகுல வந்து மொய்ச்ச ஈயிங்கள என் வாலை வீசி விரட்டிப்புட்டு ஒரு தூக்கம் போடலாம்னு நினைச்சேன். தூக்கம் வந்தால்தானே....?

ரெண்டு வருஷம் முந்தி இங்க குடி வந்தது இந்த எஜமான் குடும்பம்.
எஜமானுக்கும் - லீலாம்மாவுக்கும் ரெண்டும் பொம்பளப் புள்ளைங்க. கொஞ்சம் வளர்ந்த வளர்த்தியான புள்ளைங்க.
காலையில எட்டு மணிக்கு பளபளன்னு டிரெஸ் பண்ணிக்கிட்டு, ரெட்டைஜடை பின்னல் போட்டுக்கிட்டு பள்ளிக்கூட வேன்ல ரெண்டும் ஏறிப் போகும். கரைக்டா ஒரு மணி நேரம் கழிச்சு பேண்ட்டு சட்டையெல்லாம் மாட்டிக்கிட்டு ஸ்கூட்டர்லே எஜமான் ஆபீஸ் கௌம்புவார்.
எஜமான் கௌம்பும்போது தன் கொழுகொழு கன்னத்துல லேசா ஒரு குழி விழ, இடது கைக்கு வலிக்காத மாதிரி விரலை மட்டும் தளுக்கா ஒருதரம் அசைச்சு அந்தம்மா டாட்டா காட்டுற அழகே அழகு.
இன்னொண்ணும் சொல்லணும். காலையில எழுந்ததுல இருந்து ஓடியாடி அடுப்படியில வேலை செஞ்சு, பொண்ணுங்களையும் புருஷனையும் கிளப்பி அனுப்பின பிற்பாடு கூட அந்தம்மா முகத்துல ஒரு சுருக்கமோ பிசுபிசுப்போ இருக்காது. மல்லீப்பூ மாதிரி ஒரு மினுமினுப்பு அந்தம்மா முகத்துல. எஜமானும் நல்ல வெளுப்புதான். நல்ல ஜோடிப் பொருத்தம்.
எஜமான் கௌம்புனதும், ""டேய் ராஜு''ன்னு கூப்பிட்டு மாடிப்படி அடியில வெச்சிருக்கிற என்னோட தட்டுல எனக்கு சோறு வைக்கும் லீலாம்மா. காலையில ஏழு மணிக்கே ஒருதரம் தட்டுல பால் ஊத்தும் அந்த மகராசி.
முதுகுல ஒருமாதிரி சொறி பிடிச்சு, முன்னங்கால் நொண்டிக்கிட்டு இருந்த எனக்கு, இந்தம்மா போட்ட சாப்பாட்டுல சொறியெல்லாம் போயி ஒரு மினுமினுப்பே வந்துருச்சு. நொண்டி நொண்டி நடந்துக்கிட்டிருந்தவன் சுமாரா நேர்நடை நடக்க ஆரம்பிச்சுட்டேன்.
""இந்தக் குடும்பம் வந்த வேளை நொண்டிக்கு வாழ்வுதான்....!'' அப்பிடின்னு தெருவே பேச ஆரம்பிச்சிடுச்சு.
நான் இப்போ நேரா நடந்தா மட்டும் போதுமா....? நொண்டிங்கிற பேரு என்னைவிட்டுப் போகலியே.
எப்பிடி நொண்டி ஆனேன்னு கேட்கிறீங்களா....
தெருப்பசங்க கல்லடிக்குத் தப்பின தெருநாய் ஏதுங்க? நானும் ஒரு தெருநாய்தானுங்க.
ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிடணும். இவங்களுக்கு முன்னாடி இந்த வீட்டுலே இருந்தவங்க யாரும் இப்படி எனக்கு சோறு போட்டதில்லே.
எஜமான் வீட்டுல எனக்குத் தொடர்ந்து சாப்பாடு போட்டதுலே அவங்க வீட்டு வாசல்லியே செட்டிலாயிட்டேன். தெருப் பக்கமே போறதில்லே.

எஜமான் பேரு கிருஷ்ணமூர்த்தி, வீட்டுக்காரம்மா பேரு லீலாம்மா இதெல்லாம் ஒரு நாய்க்கு எப்பிடித் தெரியும்னு யோசிக்கிறீங்க போல இருக்குது.
ஏங்க, ராஜூன்னு கூப்டா நான் வாலை ஆட்டிக்கிட்டுத் திரும்பிப் பார்க்கலையா....இன்னும் ஜிம்மி, ரோசி, ரங்குஸ்கி, டாமி இதெல்லாம் நம்ம பேருதான்னு என்னைப் போல எல்லா நாய்ங்களுமே புரிஞ்சிக்கிடறதில்லையா....
அது போலத்தாங்க, மனுஷங்களை மத்த மனுஷங்க கூப்பிடுற பேருங்களையும் நாங்க டக்குனு புரிஞ்சிப்போம்.
எனக்கு மாசக்கணக்கா சோறுபோடற மகராசன் பேரையும், அவரு பொண்டாட்டி பேரையும் யாராவது கூப்பிட்டா சுலபமா ஞாபகம் வெச்சிக்குவோம். இதையெல்லாம் நம்பாதவங்க நாயாப் பொறந்து நாய் பாஷை கத்துக்கிட்டாதான் உண்டு.
இதுல இன்னொரு விஷயம் சொல்லணுங்க. எங்கள மாதிரி நாயிங்களுக்கு டாமின்னு பேரு வைக்கிறதை உடனடியா நிறுத்தணுங்க. ஒரே போருங்க' அந்தப்பேரு.
அது இருக்கட்டும். நான் பொறந்து பத்து வருஷத்துக்கு மேல இருக்கும். வசவசன்னு ஆறு குட்டி போட்டது எங்க ஆத்தா. அதுல நானும் ஒண்ணு. நான் பொறந்தப்போ ஒரே மழையாம். ஒரு வெக்கப்போருக்குள்ளே வெச்சு எங்களைக் காப்பாத்துச்சாம் எங்க அம்மா.
அம்மா ஒரு காருல அடிபட்டு உசுர விட்டுது. அதுலேருந்து நானும் ஏங்கூடப் பொறந்ததுங்களும் எங்களைத் தாண்டி எந்தக் காரு போனாலும் தொரத்த ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள்ல அது போரடிச்சதால விட்டுட்டோம். ஆளுக்கு ஒரு தெருவுல செட்டில் ஆகிட்டோம்.
நாய்ங்களுக்கே ஒரு எல்லை உண்டு இல்லீங்களா. அவங்கவங்க செட்டில் ஆன ஏரியா எல்லைக்குள்ளே இருந்துக்கிறதுதான் பாதுகாப்பு. ஏரியா தாண்டுனா உசுருக்கு உத்திரவாதம் இல்லே. அந்தந்த ஏரியா நாய்ங்க குதறித் துரத்திடும். அதுங்க கொஞ்சம் அசந்தாலும் இருக்கவே இருக்கானுங்க விளையாட்டுப் பசங்க.
அவனுங்க கல்லை எடுத்தால் எங்க காலுக்குத்தான் குறி வெக்கிறான்களா, இல்லை எங்க குறிவெச்சுக் கல்லை வீசினாலும் அது எங்க காலைத்தான் பதம் பார்க்குமா தெரியல. அஞ்சு வருசம் முன்னால என் வலது பின்னங்கால் மேல கல்லு பட்ட வலி இப்பவும் ஞாபகம் இருக்குதுங்க. வலி கொறைய ரொம்பநாள் ஆச்சு. நொண்டி நொண்டி நடக்க ஆரம்பிச்சேன். இனி சோறும் ஜோடியும் கிடைச்சாலும் சரி, இல்லைன்னாலும் சரின்னு இந்த அஞ்சுவீட்டு லைன்ல கடைசி வீட்டு வாசல்ல வந்து விளுந்தவன்தான். இத விட்டு நகரவேயில்ல.
நான் இங்க வந்து விளுந்தப்போ இந்த வீட்டுல இருந்தவங்க கஞ்சப் பிசுநாறிங்க. அவங்க போடுற நாலு பருக்கை சோத்துக்கு நான் நாலு மணி நேரம் வாலாட்டணும்னு எதிர்பார்ப்பாங்க.
நல்ல வேளை. ஒரே மாசத்துல அதுங்க காலி பண்ணிடிச்சுங்க. இன்னும் ரெண்டு குடும்பங்க வந்து தலா ஒரு ஒரு வருஷம் இந்த வீட்டுல இருந்துட்டு காலி பண்ணிட்டுப் போனாங்க, அவங்க கொஞ்சம் பரவாயில்ல. ஒருவேளை பொறையும் இன்னொரு வேளை சாதமும் போட்டாங்க.
அவங்களும் காலி செஞ்சு போனப்புறம் வந்து குடியேறினது வேற யாரும் இல்ல... எங்க எஜமான் தங்கக்கம்பியும் அவுரு குடும்பமும்தான். அவங்க சாப்பாடு மட்டுமா போட்டாங்க... அதுக்காக ஒரு புதுத் தட்டுமில்ல எனக்குக் கொடுத்தாங்க. இதுவரைக்கும் எனக்கு சாப்பாடு போட்டவங்க கொஞ்சம் கூட சுத்தமே இல்லாத தரையிலேயும் மண்ணுலேயும்தானே போட்டிருக்காங்க.
எஜமான் பொண்ணுங்க சின்ன வயசா சுட்டியா இருந்துதுங்க. அதுங்க பங்குக்கு நினைச்சப்போ எனக்கு பிஸ்கட்டு போடும்க.
அவங்க குடி வந்து கொஞ்ச நாளுக்கெல்லாம் இந்த தீபாவளிப் பண்டிகை வந்துது.
""ஏய், நம்ம ராஜுக்கு நான் ஜாமூன் போடப் போறேன்.... நானும் ஜாமூன் போடப்போறேன்....'' அப்பிடின்னு போட்டி போட்டுக்கிட்டு அக்காளும் தங்கையும் என் தட்டுல ஏதோ இனிப்புப் பண்டம் வைக்குதுங்க. அடா அடா என்னா ருசி. பொறை, வர்க்கிய விட ருசிய்யா இப்பிடி ஒரு தின்பண்டம் இருக்கிறதே இப்பத்தான் தெரிஞ்சுது. தின்னுப்புட்டு சந்தோஷமா குரல் கொடுத்தபடியே புள்ளைங்க காலை நக்கிக் கொடுத்தேன். என் வால் தானா ஆடுது.
இன்னொண்ணு சொல்லணும்க....இந்தப்புள்ளைங்க என் பேரை சுருக்கி செல்லமா ராஜ்....ராஜ்...னு கூப்பிடும் போது எனக்கு எவ்வளோ பெருமையா இருக்கும் தெரியுமா?
நல்லவேளைஅதுங்க எனக்கு டாமின்னு பேர் வைக்கலை. அப்பிடியே வெச்சிருந்தாலும் அந்தப் புள்ளைங்களுக்காக அந்தப் பேரை சந்தோஷமா நான் ஏத்துக்கிட்டிருப்பேன்.

நம்ம கால் ஒடிஞ்சதுக்கு முன்னாடி நடந்த ஒரு விசயத்தை சொல்லியே ஆகணும்.
அந்த வருஷம் கார்த்திகை மாசம். நடு ராத்திரி நேரம். ராணி....ராணின்னு ஒரு பொம்பளை நாயைப் பத்தி என் காதுல விளுந்தது.
ராணியோடு சுத்திக்கிட்டிருந்தவன் ஜக்கு. வயசானாலும் ரொம்ப ஆக்ரோஷமானவன். அவன் ஒரு நாயி பத்து நாயிங்களைச் சமாளிப்பான். ராணியை வேறு எந்த ஆம்பிளை நாயும் மோப்பம் புடிக்கக் கூட வுட மாட்டான்.
என் நல்ல நேரம், ஒரு மோட்டார் சைக்கிள் சக்கரத்துல மாட்டி ஜக்குவோட கால் ஒண்ணு ஒடிஞ்சிருந்தது. அந்த வேளைக்கு அவன் நொண்டி. நான் நல்லாயிருந்தேன். இதான் சமயம்னு ராணியை நைஸா நின்னுக்கிட்டிருந்த ஒரு லாரி அடி வரைக்கும் கூட்டி வந்துட்டேன்.
எங்கிருந்தோ கோவமாக் கொலைச்ச படியே வந்த ஜக்கு எம்மேல பாய்ஞ்சான். ராணி ஒரு பக்கம் பயந்து ஓடுது.
கால் நொண்டியானாலும் ஜக்குவோட ஆக்ரோஷம் ஜாஸ்தியாயிருந்துச்சு. நான் இளவட்டம். ஜக்குவைப் போல நொண்டலை. கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு ஜக்குவைக் குதறிப் பிறாண்ட ஆரம்பிச்சேன். பாவம் வயசானவன். சீக்கிரம் களைச்சுப் போனான். அவனை ஒரு வாய்க்க்கால் பள்ளத்திலே தள்ளிவிட்டேன். தண்ணியில்லாத வாய்க்கால்தான். இருந்தாலும் ஜக்கு கரையேறி வர நேரமாகும்.
நான்தான் ஜெயிச்சுட்டேன்னு தெரிஞ்சதும் ராணி ஓடிவந்து என் கூட ஒட்டிக்கிச்சு. அப்புறம் ஒரு வாரம் ராணி கூட ரொம்ப ஜாலியாகச் சுத்திவந்தேன். ஒருசில வேளை ஜக்கு கண்ணெதிரிலேயே ராணியோடு சுத்தினேன்.
என்ன இருந்தாலும் வாழ்ந்து கெட்டவன் ஜக்கு. அவனை வயித்தெரிச்சல் கொட்டின பாவத்துக்குக் கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டாரு. ராணி எனக்குக் கிடைச்ச ஒரே வாரத்துல சின்னப் பசங்க எறிஞ்ச கல்லு பட்டு நானும் நொண்ட ஆரம்பிச்சேன். ஜக்கு கிட்டே மாட்டினா அவ்வளோதான். ராணியை விட்டுட்டு இந்த அஞ்சுவீட்டு லைனுக்கு வந்துட்டேன்.

நாய் நன்றி உள்ளதுன்னு சொல்லுவாங்க.
என்னைப் பாருங்க. ரொம்ப நாளா எனக்குச் சோறு போட்டவங்க வேற ஊருக்குப் போகப் போறாங்க. இவங்களைப் பத்தி நினைக்காமே, பழைய ராணியப் பத்தி நினைச்சுக்கிட்டிருக்கேன்.
என்ன பண்றதுங்க. நாய் வாழ்க்கையிலே எதுவுமே நிலையில்லே. சோறு கிடைக்கிறது, ஜோடி கிடைக்கிறது, மத்த நாயிங்க கிட்ட கடிபடாம, மனுஷங்க கிட்ட அடிபடாம இருக்கறதுல்லாம் நம்ம கையில இல்லைங்க.
சொல்ல மறந்துட்டேனே. என் தங்கக் கம்பி எஜமானும் ஒரே ஒருதரம் என்னை அடிச்சிருக்காரு.
அன்னிக்கி எஜமான் ஆபீஸூக்குப் போகலை. லீலாம்மாவும், புள்ளைங்களும் ஆட்டோவுல ஏறி எங்கியோ வெளியே போயிருக்காங்க. ரொம்ப நேரமாக எனக்குச் சோறு வரலை. பசி வயத்தைக் கிள்ளுது. எஜமான் குடும்பம் வந்த பிறகு, எப்போவாவது எனக்கு ஒருகை சோறு வைக்கிற அக்கம்பக்கத்து வீட்டு மகராசிகளும் அதை நிறுத்திட்டாங்க.
வீட்டுக்குள்ள ரொம்பநேரமா "ஓ'ன்னு ஒரே இரைச்சல். எஜமான் டிவி பாக்குறாருன்னு நெனைச்சுக்கிட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சு வாசல் கதவு தொறந்தது. எஜமான் முகத்துல சுரத்தே இல்ல. இருந்தாலும் எனக்கு வயிறு பசிக்குதே. வாலை ஆட்டிக்கிட்டே போய் எஜமான் வேட்டியப் பிடிச்சு செல்லமாய் இழுத்தேன்.
பொளேர்னு முதுகுல ஒண்ணு விழுந்துது. எஜமான் கையில ஒட்டடைக் குச்சி. எஜமானுக்கு என்ன கோபமோ தெரியல. இருந்தாலும் இதுவரைக்கும் அவரு என்னை அடிச்சதில்லை. அடிச்சது எஜமான்கிறதாலே, வலியை விட வருத்தம் தான் அதிகமா இருந்தது. மெதுவாகப் போய் மாடிப்படி கீழே நான் படுத்துக்கிட்டேன்.
பத்தே நிமிஷம்தான். தட்டு நெறைய்ய சோறு எடுத்துக்கிட்டு வந்த எசமான் எனக்கு அதைப் போட்டுட்டு என் முதுகைத் தடவிக்கொடுக்கிறாரு.
""ஸாரிடா ராஜு. இன்னிக்கு இந்தியா கிரிக்கெட்டுல தோத்துடுச்சு. அந்த வருத்தத்துல உன்னை அடிச்சுட்டேன். ஸாரிடா. சமத்தா சாப்பிடுடா....''ன்னு என் பிடரியைக் கோதி விடுறாரு.
இதுக்கு ஏன் என்னை அடிக்கணும்னு புரியலை. இருந்தாலும் ஒரு நாயிதானேன்னு நினைக்காமல், என்னை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேக்கிறாரு பாருங்க. இது மனுஷனில்லைங்க. தெய்வம்.
இப்பிடிப் பட்ட தெய்வமும் அவரோட குடும்பமும் வேறு ஊருக்குப் போகுது.
சாப்பாடு கிடக்குது சாப்பாடு. எப்பிடியாவது கிடைச்சுடும். ஆனால், இப்பிடிப் பட்ட மனுஷ தெய்வம் இந்த வீட்டுக்கு மறுபடி வருமா. அதை நினைச்சால்தான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.
எல்லா சாமானும் ஏத்தியாச்சு போலிருக்குது.
வீட்டு ஓனர் வந்திருக்காரு. எஜமான் வீட்டைப் பூட்டி சாவியை ஓனர் கிட்டே குடுத்தாரு.
அக்கம்பக்கத்து வீடுல குடியிருக்கிறவங்க கிட்டல்லாம் ""நாங்க வர்றோங்க....''ன்னு எஜமானும், லீலாம்மாவும் சொல்லிக்கிறாங்க. இங்க இருக்கிற எல்லோருக்குமே, இவங்க கிளம்பறது கஷ்டமாகத்தான் இருக்கும்.
""நீங்க போன பிறகு இந்த நாயி ரொம்ப கஷ்டப்படும்....''ன்னு ஒரு அம்மா சொல்லுது.
எனக்குக் குரலே வரலை. மனசு தாங்காம எஜமான், லீலாம்மா, அவங்க புள்ளைங்க ரெண்டையும் சுத்திச் சுத்தி வர்றேன்.
புள்ளைங்க ரெண்டும் ""அப்பா....பாவம்ப்பா நம்ம ராஜு....அவனை விட்டுட்டுத்தான் போகணுமா?''ன்னு கேட்டதுதான் தாமதம், ""டேய் ராஜு நீயும் எங்க கூட வந்துர்றா....''ன்னு சொல்லிட்டாரு.
""ஹை ஜாலி, ராஜுவும் நம்ம கூட வர்றான்....'' புள்ளைங்க சந்தோஷத்துல குதிக்குதுங்க.
எனக்குத் தலைகால் புரியலே. எஜமானோட புதுவீட்டுக்குப் போகக் காரிலே ஏறும்போது சட்டுன்னு ஞாபகம் வந்து மாடிப்படி வரைக்கும் ஓடிப்போய் என்னோட சாப்பட்டுத் தட்டை எடுத்துக்கிட்டு வந்தேன்.
""ராஜு தன் விஷயத்துல தெளிவா இருக்கான் பாரு....''ங்கிறாரு எஜமான். எல்லோரும் சிரிக்கிறாங்க.
லாரிக்கு முன்னாடி காரு கிளம்புது. நான் ஜாலியா வேடிக்கை பார்த்துக்கிட்டே போறேன்.
புது இடத்துல ஜக்கு மாதிரி நாயிங்க தொந்தரவு இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ராணி மாதிரி ஒரு துணை கிடைச்சால் நல்லாயிருக்கும்.
"ச்சீ, நீயெல்லாம் ஒரு நாயி. முதல்ல எஜமானுக்கு விசுவாசமா இருக்கணும்னு நினைச்சுக்கோடா....'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
என் வாலை வேகவேகமா ஆட்டிக்கிட்டே லொள்....லொள்....ன்னு குரல் கொடுக்கிறேன்.
இதுவரைக்கு என் வாழ்க்கையில இவ்வளவு சந்தோஷமா நான் குரைச்சதேயில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com