வெள்ளை நிறத்தொரு புலி!

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப் புலி, சத்தியமங்கலத்தில் வெள்ளை நிறத்தில் புல் புல் பறவை, திருப்பூரில் வெள்ளை நிற ஆந்தை, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ளையாக மாறிவரும்
வெள்ளை நிறத்தொரு புலி!

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப் புலி, சத்தியமங்கலத்தில் வெள்ளை நிறத்தில் புல் புல் பறவை, திருப்பூரில் வெள்ளை நிற ஆந்தை, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ளையாக மாறிவரும் யானை இவையெல்லாம் அண்மையில் நம்மை ஆச்சரியப்பட வைத்த தகவல்கள்தாம்.

ஆனால், இந்த உயிரினங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளதா என்றால் இல்லை என்கிறார் வன உயிரின ஆராய்ச்சியாளரும், ஆசிய யானைகள் குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய பிரதிநிதியுமான டாக்டர் ராமகிருஷ்ணன். இவரைப்போலவே பல்வேறு வன உயிரின ஆராய்ச்சியாளர்களும், வன உயிரின ஆர்வலர்களும் மறுக்கின்றனர்.

இதற்கு காரணம் உடலில் உள்ள நிற திசுக்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் விளைவுகளே எனவும், உலகில் 3 வகையான நிறக் குறைபாடுகள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே வன உயிரினங்களில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
"அல்பேனிசம் என்ற வகையிலான குறைபாடு அந்த உயிரினத்தின் உடல் முழுக்க வெள்ளையாக மாற்றி விடுவதுடன், அதன் கண்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் தன்மை கொண்டவையாகும். மெலனிசம் என்ற வகையிலான நிறக் குறைபாடு உடல் முழுக்க கருப்பு நிறத்தில் மாற்றி விடுவதாகும். 3-ஆவது வகை லூசிசம் எனப்படும். இதில், உட ல் முழுக்க வெள்ளை நிறத்துக்கு மாறியும், கண்கள் இயல்பான நிலையிலும், கால்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கும். இந்த 3 வகையான நிறக்குறைபாடுகளே உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, வெள்ளைப்புலி, வெள்ளை அணில் , கருப்பு நிற பறக்கும் அணில், தந்தமில்லாத மக்னா யானை உள்ளிட்டவற்றையும் கூறலாம்.

இதற்கு முழுமையான காரணம் மரபியல் கோளாறுகளேயாகும். ஓர் உயிரினத்தில் மெலனின் திசுக்கள் அதிகரித்தால் கருப்பு நிறத்துக்கும், குறைந்தால், வெள்ளை நிறத்துக்கும் மாறிவிடும். குறிப்பிட்ட ஒரு வனப் பகுதிக்குள், வனம் துண்டாடப்பட்டு இனச் சேர்க்கையும் குறிப்பிட்ட ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நடைபெறுவதால்தான் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்த நிறக் குறைபாடுகளை எதிர்க்கும் சக்தியின்றி அந்த இனமே அழிந்து விடும் அபாயமும் உள்ளது.

இத்தகைய பிரச்னை நிலத்துக்குள் வாழும் உயிரினங்களுக்குள் மட்டுமே ஏற்படுவதென்பதால் பறவைகளுக்கோ அல்லது நீர்வாழ் உயிரினங்களுக்கோ அதிக அளவில் ஏற்படுவதில்லை. அதனால் வனப் பகுதிகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும். இலங்கையில் மக்னா வகையிலான யானைகள் அதிக அளவில் இருப்பதற்கு அங்கு வனப் பகுதிகள் மிகக் குறைவாக இருப்பதே காரணம் எனலாம். அத்தகைய நிலை தமிழகத்தில் கூடலூர் மற்றும் வால்பாறை பகுதி
களிலும் காணப்படுகிறது.

ஐராவதம் என்ற வெள்ளை யானை இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டாலும் உண்மையில் அத்தகைய யானை இதுவரையிலும் இல்லை. தொடக்க காலத்தில் யானையின் உருவமே ஒரு காட்டுப் பன்றியின் அளவில்தான் இருந்தது. அப்போது அது மொரித்ரீயம் என அழைக்கப்பட்டது. அதற்கடுத்து டைனத்தேரியம் என அழைக்கப்பட்ட சராசரி நிலையைத் தாண்டி தற்போதைய நிலையிலான மேஸ்டிரோடென் என்ற நிலைக்கு வந்தது. எனவே, எந்த உயிரினமும் தனது இயல்பான நிறத்தை விட்டு திடீரென வெள்ளை நிறத்துக்கோ அல்லது கருப்பு நிறத்துக்கோ மாறிவிடாது'' என டாக்டர் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக வன உயிரியல் ஆராய்ச்சியாளரான சாம்சன் நம்மிடம் தெரிவித்ததாவது:
"மரபியல் மாற்றம், ஜீன்களில் ஏற்படும் குறைபாடு, நிலம் துண்டாடப்படல், சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகவே நிறக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. நிறக் குறைபாடுகள் ஏற்பட்டு நிறம் மாறும்போது அவற்றின் வாழ்நாளும் குறைகிறது. அதைத் தவிர, தங்களது இயல்பான நிறத்தை விட்டு வேறு நிறங்களுக்கு மாறும்போது எதிரிகளுக்கும் எளிதில் இலக்காகி விடுகிறது. வழக்கமாக வனத்தில் வாழும் எந்த ஓர் உயிரினமும், வனத்தின் சூழலுக்கேற்ற நிறத்திலேயே இருக்கும். அடுத்தவர்களால் அதை எளிதில் காண முடியாது. ஆனால், நிறம் மாறும்போது அவை எதிரிகளிடம் எளிதில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

வன விலங்குகளைப் பொருத்தவரையில் தற்போது இந்தப் பிரச்னை அதிகரித்து வந்தாலும், பறவை இனங்களில் புறாக்களில் இப்பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தில்லியில் காணப்படும் புறாக்களின் நிறத்தைக் குறிப்பிடலாம். அதற்குக் காரணம் அவற்றின் வாழ்விடம் சுருங்கி, இனப் பெருக்கத்துக்கான இடத்தின் சுற்றளவும் குறைந்துள்ளதால் அவை பெரும்பாலும் ஒரே நிறத்திலேயே காட்சியளிக்கின்றன'' என்றார் சாம்சன்.
ஏ.பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com