ஒன்ஸ் மோர்

அரசியலில் புகுந்த பின் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்கு நாளுக்கு நாள் வறுமை மேலிட்டுக் கொண்டே சென்றது.
ஒன்ஸ் மோர்

அரசியலில் புகுந்த பின் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்கு நாளுக்கு நாள் வறுமை மேலிட்டுக் கொண்டே சென்றது. தாம் வரைந்த ஓவியங்களை விற்று ஈட்டிய பொருளை அவர் தம்மை நாடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்காகவே செலவழித்து விடுவது வழக்கம். சாரி சாரியாய் நாள்தோறும் காங்கிரஸ் ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்து கொண்டே இருந்தனர். அதனால் அவர் கடன் வாங்கியும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  "புலமை இருக்கும் இடத்தில் செல்வம் இருக்காது'  என்று தமிழ்நாட்டில் உலவி வரும் ஒரு நம்பிக்கைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது நாமக்கல் கவிஞரின் அன்றைய வாழ்க்கை.

ஏழ்மையிலிருந்து அவரை மீட்பதற்காகச் செல்வந்தர்களான அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு இனாமாகச் சில நிலபுலன்களை அளிக்க முன்வந்தனர். ஆனால் தற்செயலாக நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகளால் அவர்களது எண்ணம் ஈடேற முடியாமல் போய்விட்டது. கோயம்புத்தூரில் அவருடன் படித்த நண்பர் இராமநாதன் செட்டியார் என்பவர் ஆண்டு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானம் வரக்கூடிய செழிப்பான நிலங்களை அவருக்கு இனாமாக அளிக்க முன்வந்தார். ஆனால் தமது வாக்குறுதியை செயற்படுத்துவதற்கு முன்பே அவர் திடீரென்று இறந்து போனார்.

அவரது இனிய நண்பர்களில் ஒருவரான தேவகோட்டை திருநாவுக்கரசு செட்டியார் என்பவர் அவரது வறுமையைக் கண்டு மனம் பொறாமல் கடனில் மூழ்கிப்போன அவரது வீட்டையும் காட்டையும் கடன்காரர்களிடமிருந்து மீட்டுத் தந்தார். அவரது நூல்களையெல்லாம் வெளியிடுவதற்காக ஒரு வெளியீட்டு நிலையத்தையும் அவர் ஏற்படுத்த முன்வந்தார். அதன் மூலமாகவாவது கவிஞருக்கு மாதா மாதம் ஒழுங்காக வருமானம் வர வழி பிறக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் அவர் தமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்து சிறைக்குப் போய்விட்டார். 

இவ்வாறு கவிஞருக்குப் பல முறை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே போய்விட்டது. புலமையும் வறுமையும் கூடப் பிறந்தவை போலும் என அவர் எண்ணலானார். பண நெருக்கடியிலிருந்து அவரைக் காப்பாற்ற நாமக்கல்லில் இருந்த நாகராஜ அய்யங்கார் எனும் அவரது நண்பர் பெரும் பாடுபட்டார். அவர் நம் கவிஞரை  "மியூட் மில்ட்டன்' என்று அழைப்பது வழக்கம். அக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த பி.டி.ராஜன் அவர்களை அய்யங்கார் அணுகி, கவிஞரது பாடல்களை எல்லாம் வெளியிடும்படியும் கவிஞருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுக்கும்படியும் பெரிதும் வேண்டிக் கொண்டார். அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்ட டாக்டர் ராஜன் ஒரு வாரத்திற்குள்ளாகவே பதவியைத் துறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் அரசியல் காரணமாக அவர் இடம் பெற்றிருந்த அமைச்சரவையே அவ்வமயம் கவிழ்ந்து விட்டது.

1937-ஆம் ஆண்டு முதல் 1944 வரை சேலம் மாவட்டக் கழகத்தில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். அச்சமயத்தில்தான் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அவரது கவிதை நூல் ஒன்று கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டது. இதற்குரிய தீர்மானமொன்றை மாவட்டக் கழக  உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றினர். உடனே கழகத்தின் தலைவராய் இருந்த நாச்சியப்பக் கவுண்டர், எல்லாப் பள்ளிகளிலும் மூன்றாவது வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் கவிஞரது பாடல்கள் அடங்கிய "பிரார்த்தனை' என்ற நூல் கட்டாயப் பாடமாக விளங்க வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இதன் மூலம் தமக்கு ஏராளமான வருமானம் வருமென்று கவிஞர் எதிர்பார்த்தார். குறைந்தது 50 ஆயிரம்  படிகளாவது விற்கும் என்று கருதிய அவர் சற்று எச்சரிக்கையாகவே 25 ஆயிரம்  படிகளை அச்சிட்டார். எனினும் அவர் எண்ணியபடி படிகள் விற்கவில்லை. ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னுங்கூட 8,000 படிகள் அவரது வீட்டில் விற்காமல் தூங்கிக் கொண்டிருந்தன. வறுமை அவரை விட்டு நீங்கினபாடில்லை.

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் பிரமுகராக விளங்கிய சின்ன அண்ணாமலை கவிஞருக்கு உறுதுணை நண்பராக விளங்கினார். அவர்  "தமிழ்ப் பண்ணை' என்ற வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கவிஞரது பாடல்களையும் புதினங்களையும் வெளியிட முன்வந்தார். கவிஞர் மீது அன்பும் மதிப்பும் கொண்ட நண்பர்கள் பலர், இத்தமிழ்ப் பண்ணையில் பங்குதாரர்களாகச் சேர்ந்தனர். ஆனால் அங்கேயும் கவிஞருக்கு துர்பாக்கியம் காத்திருந்தது. மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தமிழ்ப்பண்ணை நிர்வாகத்தில் பல ஊழல்கள் ஏற்பட்டு இறுதியில் அது மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய அவல நிலைக்கெல்லாம் தமது ஊழ்வினையே காரணமென்றும், வேறு யாரையும் குறை சொல்வதில் பயனில்லை என்றும் கவிஞர் அடிக்கடி கூறுவார். பொருளாதார நிலையைப் பொருத்தவரையில் அவருக்கு இவ்வாறு பல சமயங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற்போன நிலைகள் ஏற்பட்டிருக்கின்றன.

"இந்திய இலக்கிய சிற்பிகள்: நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை' என்ற நூலில் அதன் ஆசிரியர் கி.ர. அனுமந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com