பச்சைக் கிளி! - கலைஞரின் கவிதை 

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப் பழத்தைச் செருகி இடையில் மல்லிகை
பச்சைக் கிளி! - கலைஞரின் கவிதை 

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப்
 பழத்தைச் செருகி இடையில் மல்லிகை
 இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை
 மடலை வைத்தால் பச்சைக் கிளியே!
 உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு!
 வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!
 சின்ன இறகே! நீண்ட வாலே!
 கன்னற் கிளியே சொன்னது பிசகா?
 வர்ணனை கேட்க வாழ்த்த மறுப்பாய்
 புகழ்ச்சொல் கேட்டும் போற்றிட மாட்டாய்.
 காரணம் அறிவேன் சின்னக் கிளியே!
 கூண்டில் உன்னைப் போட்டத னாலே
 தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும்
 சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன்
 இன்று தெரிந்தேன்-
 சிறைமிகக் கொடிது, சிறைமிகக் கொடிது!
 மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்!
 பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்!
 என்சிறை முடிந்ததும் உன்சிறை உடைப்பேன்.
 சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன்.
 அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்!
 அனுபவம் பெற்றேன்- அனுபவம் பெற்றேன்.
 வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு!
 பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்!
 கட்டிய கால்கள் விடுபடும்; உடனே
 எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்!
 எழில்நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்!
 கூண்டில் உன்னை அடைத்தேன் கிளியே!
 மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டேன்; கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டதால் கூண்டுக் கிளியுனைத்
 திறந்து விடுவேன். ஆனால் கிளியே
 கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு
 ஆண்டிட வந்தார்
 மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார்!
 ஏனோ கிளியே? ஏனோ கிளியே?
 பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே!
 உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார்
 என்றே சொல்வாய் நன்று கிளியே;
 நீ யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com