ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக ரத்த அழுத்தமும் பக்கவாதமும்!

மூளையில் தற்காலிகமாக ஏற்படும் ரத்தத் தடையின் காரணமாக இந்த உபாதை ஏற்படக் கூடும். பக்கவாத நோயில் ஏற்படும் நரம்புகளின்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக ரத்த அழுத்தமும் பக்கவாதமும்!

நான் TRANSIENT ISCHEMIC ATTACK (TIA) எனும் உபாதையால் பாதிக்கப்பட்டு ECOSPRIN மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இது எதனால் வருகிறது? ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு உள்ளதா?
அ.மகராஜன், 
கொட்டாரம்.
மூளையில் தற்காலிகமாக ஏற்படும் ரத்தத் தடையின் காரணமாக இந்த உபாதை ஏற்படக் கூடும். பக்கவாத நோயில் ஏற்படும் நரம்புகளின் இழுப்பைப் போல ஏற்படும் இந்த உபாதையானது, பக்கவாதத்தில் ஏற்படும் நிரந்தரச் செயலிழப்பைப் போன்று ஏற்படுத்துவதில்லை. சில மணித்துளிகளோ அல்லது சுமார் 24 மணி நேரம் வரை நீடித்து அதன் பின் சாதாரண நிலைக்குத் திரும்பி விடும். மூளையிலுள்ள திசுக்களை முழுவதுமாக அழித்துவிடுவதில்லை. என்றாலும், உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். ஏனென்றால், மூவரில் ஒருவர் மறுபடியும் TIAவினால் பக்கவாத நோய்க்கு இலக்காகக் கூடும்.
அதிகமான அளவில் ரத்த அழுத்த உபாதை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கத்தினால் சுத்த ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் கிழிசலை ஏற்படுத்தி, ரத்த உறைவுகளை உண்டாக்கி, முகம், கை,கால்களில் தற்காலிக நரம்பு இழப்பையோ, நிரந்தர பக்க உபாதையையோ தோற்றுவிக்கலாம். அதனால் அதிக ரத்த அழுத்த நோயாளிகள், அடிக்கடி தங்களுடைய ரத்த அழுத்த நிலையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வீட்டிலேயே அதற்கான கருவியை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் அவசியமாகும். சிலருக்கு மருத்துவமனை சூழ்நிலை, மருத்துவர் என்ன சொல்வாரோ? என்ற பயம் காரணமாக, ரத்த அழுத்தம் உயரக் கூடும். அதனால் வீட்டில் அமைதியாக உள்ள சூழ்நிலையில், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவருக்குத் தெரிவிப்பதும் முக்கியமாகும். 
தலைசுற்றல், கிறுகிறுப்பு, செயல் தடுமாற்றம், இடறும் நடை போன்றவை தென்பட்டால், உடனடியாக ரத்த அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். 
ரத்தத்தில் அதிக கொழுப்பு, சர்க்கரை உபாதை, புகைபிடிப்பவர், உடல் பருமன், இதயநோயாளி ஆகியோருக்கு, நீங்கள் குறிப்பிடும் TIA எனும் தாக்கம் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பார்வை மந்தமாகுதல், பேச்சுக் குளறுபடி, குழப்பம், நடை தடுமாற்றம், உணர்வுநிலை குறைதல், கிறுகிறுப்பு, தன்நினைவின்றி சிறுநீர் கழித்தல், நாக்கில் சுவையை விபரீதமாக அறிதல், அசாதாரண மணம் அறிதல், ஒருபக்கமாக உடல் வலுவிழத்தல் போன்றவை TIA உபாதை ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் சில அறிகுறிகளாகும்.
ரத்தத்தை நீர்க்கச் செய்து , மூளையிலும் இதயத்திலும் ரத்தக் குழாய்களின் உட்புற வழியாக எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் தங்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நிரந்தரமாகச் சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கும் நீங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறீர்கள். 
உடலில் இயற்கையினால் ஏற்படும் வேக உணர்ச்சிகள் இருவகை. உடலுக்குத் தேவைப்படாததும், உள்ளே அதிக நேரம் தங்கியிருந்தால் கெடுதியும் உண்டாக்கும் மலம், சிறுநீர், குடல் காற்று போன்றவற்றை ஏற்படுத்தும் உந்துதல்கள் ஒருவகை. இரண்டாவது வகை - உடலுக்குத் தேவையான பசி, தாகம், தூக்கம், போகம் போன்றவை தாமதிக்காமல் உடனே உடம்பில் சேர்ப்பிப்பதற்காக உண்டாகுபவை. இவற்றை அடக்கவே கூடாது. அடக்கினால் TIA உபாதை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவசியம் அடக்க வேண்டிய, அடக்காவிட்டால் கெடுதல் செய்யும் உந்துதல்களும் மனிதர்களுக்கு உண்டு. லோபம் எனும் அடையத்தகாத விரும்பத்தகாத வஸ்துகளைப் பிடிவாதமாய் அடைய ஆசைப்படுவது, எதையும் எவருக்கும் கொடுக்க இஷ்டமில்லாத கருமித்தனம், சோகம் எனும் தேவையில்லாதவற்றில் எல்லாம் வருத்தம்; எந்த சமயத்திலும் எந்தக் காரியத்திலும் பயம்; குரோதம் எனும் கோபம்; மானம் எனும் கர்வம்; நைர்லஜ்யம் எனும் சங்கோஜம், நாணம், கூச்சம் ஒன்றுமில்லாமல், பிறர் பார்க்கும்படி செய்யக்கூடாததைச் செய்தல், ஈர்ஷ்யா எனும் பொறாமைப்படுதல்; அதிராகம் எனும் பேராசை; அபித்யா எனும் தனக்கு எவ்வித தீங்கும் செய்யாதவருக்கு கெடுதல் செய்ய மனதில் எண்ணுவது ஆகியவை ரத்தக் கொதிப்புக்குக் காரணமாகி, மூளையில் ரத்தக் கசிவையும், நாளங்களில் அடைப்பையும் ஏற்படுத்தி, நீங்கள் குறிப்பிடும் TIA எனும் உபாதைக்குக் காரணமாகலாம். 
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com