அறிவியல் அசத்தும் குக்கிராமத்துப் பள்ளி ஆசிரியர்!

மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என வீதி தோறும் பெருகி வரும் கல்வி நிறுவனங்களால், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்
அறிவியல் அசத்தும் குக்கிராமத்துப் பள்ளி ஆசிரியர்!

மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என வீதி தோறும் பெருகி வரும் கல்வி நிறுவனங்களால், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மத்தியில், "இந்தப் பள்ளியில்தான் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்' என ஆர்வத்துடன் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளியாக உருமாறியுள்ளது ஒரு குக்கிராமத்துப் பள்ளி. 
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளிதான் அது. அறிவியல் கல்வியை ஆரம்ப நிலையிலுள்ளவர்களுக்கும், செயல் வடிவில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பிரபாகரன். நாம் அவரைச் சந்தித்த வேளையில் பெரிய மாணவர் பட்டாளம் அவரைச் சூழ்ந்து நின்று, அவர் செய்து காட்டும் அறிவியல் விந்தைகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தது. 
அவர் நம்மிடம் கூறியது: 
"பொதுவாக நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், அதை அப்படியே தியரியாகவே கூறுவார்கள். உதாரணமாக மின்சாரத்தைக் கடத்தும் பொருள்கள் குறித்த பாடத்தில், இவை எல்லாம் குறை கடத்தி, இவை எல்லாம் மீக்கடத்தி என புத்தகத்தில் உள்ளதை தெரிவிப்பார்கள். அந்த பொருள் எப்படி மின்சாரத்தை கடத்தும் என்பதைத் தெரிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வமாக இருந்தாலும், அவற்றை எல்லாம் செயல்முறை வடிவில் கற்றுக் கொடுக்கமாட்டார்கள். அதனால் மாணவர்கள் அந்த பாடங்களை மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். அதனால், அறிவியல் மீது அவர்களுக்கு ஆர்வம் குறையக்கூடிய வாய்ப்பும் உருவாகும். 
ஆனால், அதையே செயல்முறையில் செய்து காட்டினால் அதை மாணவர்கள் எளிதில் உணர்ந்து கொள்வதுடன், அந்த பாடத்தை புத்தகத்தில் படிக்காமலேயே அது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள். மேலும், அந்த செயல்முறையை நேரில் பார்ப்பதால், அது குறித்த கேள்வி கேட்டால் எளிதாக எழுதவும் செய்து விடுவார்கள். எனவே, இந்த செயல்முறை கற்பித்தல் முறையைப் பின்பற்றி பாடங்களை நடத்துவது என முடிவு செய்து எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தி வருகிறேன். 
அறிவியல் பாடங்களை அப்படியே செயல்முறை வடிவமாக்கி கற்பிப்பதால் மாணவர்களுக்கு எளிதாக அப்பாடத்தின் கருப்பொருள் புரிந்து வருகிறது, அதனால் மாணவர்கள் மனப்பாடம் செய்யாமலேயே பாடங்களை கற்க முடிகிறது. நான் கற்றுக் கொடுத்த பிறகு அந்த செயல்முறையை மாணவர்களைக் கொண்டு செய்து காட்ட பழக்கியிருக்கிறேன். அவர்கள் செய்யும் அறிவியல் செயல்முறையை அப்படியே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து வருகிறேன். 
இதற்கிடையே, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிவியல் கற்பித்தல் முறைகளை அறிந்த மதுரை அறிவியல் சோலை இன்னோவேஷன் மையத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜேந்திரன் என்னுடைய இத்தகைய கற்றல் முறைகளை, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அந்த அமைச்சகம் என்னைத் தேர்வு செய்து, சில திட்டப்பணிகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகைக்காக 4 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக 3 லட்சம் ரூபாய் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிதி மூலம் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ள முடியும். தமிழகத்திலேயே தமிழ் வழி கற்பிக்கும் பள்ளிகளில் இந்த பள்ளி மட்டும்தான் மத்திய அரசின் நிதியை பெற்றுள்ளது'' என்றார் பெருமையுடன். 
- வி.குமாரமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com