திரைக் கதிர்

'பார்ட்டி' படத்துக்கான அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து சிம்பு நடிக்கும் "மாநாடு' படத்துக்கான முதல் கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
திரைக் கதிர்

• 'பார்ட்டி' படத்துக்கான அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து சிம்பு நடிக்கும் "மாநாடு' படத்துக்கான முதல் கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார். அக்டோபர் மாதம் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2019 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இதற்கிடையே நடிகர் சிம்பு கார்த்திக் நரேன் உள்ளிட்ட சில கவனம் ஈர்க்கும் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்தப் பணிகள் ஒரு பக்கம் இருக்க, தனது "மன்மதன் 2' படத்தின் முழு கதை உருவாக்கும் வேலைகளையும் முடித்துவிட்டார். கதை சிம்புவின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உருவாகியிருப்பதால் அதை தானே இயக்கி, நடித்து தயாரிக்கும் எண்ணமும் தற்போது அவருக்கு உருவாகியுள்ளது. விரைவில் அந்த அறிவிப்பு வந்தாலும் வரும் என்கிறார்கள், சிம்பு தரப்பினர்.

• மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருந்த படம் திடீரென்று கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மிஷ்கின் இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்க புதிய பட அறிவிப்பு வெளியானது. இதற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக தேர்வானார். கதாநாயகனாக சாந்தனு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. நித்யாமேனன் தவிர, மற்றொரு ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவியிடம் பேசப்பட்டது. இந்நிலையில் திடீரென இப்படம் கைவிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் திடீரென படத்திலிருந்து விலகியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகி தேர்வு நடக்கிறது. முந்தைய படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் கொடுத்திருந்த கால்ஷீட்டை இப்படத்துக்கு பயன்படுத்த மிஷ்கின் முடிவு செய்துள்ளார். ரஹ்மான் இசையமைப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை. இப்படத்துக்கான திரைக்கதை முடிந்துள்ள நிலையில், உடனடியாக படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளன. சாந்தனு நடிப்பதாக இருந்த படம் அப்படியே உள்ளதாகவும், அது அவருக்கு மட்டுமே பொருத்தமான கதை என்பதால், இந்தக் கதை வேறு என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின். இப்படத்தின் மூலமாக பி.சி.ஸ்ரீராம் - மிஷ்கின் கூட்டணி முதன் முறையாக இணைகிறது. 

• கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் படப்படிப்பு டார்ஜிலிங் உள்ளிட்ட இமயமலை அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்துக்காக ரஜினிகாந்த் "காலா' பட ரிலீஸுக்கு முதல் நாள் சென்னையில் இருந்து டார்ஜிலிங் புறப்பட்டார். அங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சென்னை திரும்புகிறார். இரண்டாம் கட்டமாக டேராடூன் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் ஜூலை 16-ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ரிஷிகேஷ் பயணம் மேற்கொண்டது போல இந்தமுறை ஓய்வு நேரத்தில் பாபாஜி குகை, தான் அங்கே கட்டியுள்ள குருசரண் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கும் திட்டமும் உள்ளதாம். டேராடூன் படப்பிடிப்பு முடிந்ததும், படத்தின் முக்கிய சில காட்சிகளை மதுரையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் நிறைவுப்பகுதி மதுரையில்தான் படமாக்கப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் தொடங்கி மதுரையில் முடிவதுபோலதான் படத்தின் கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ். இதற்காக மதுரையில் பிரத்யேக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கார்த்திக் சுப்பராஜ் படங்களில் மதுரைக்கு முக்கியத்துவம் இருப்பதால், இப்படத்தையும் அதற்கேற்றவாறு முடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் கூட்டம் கூடி விடக் கூடாது என ரஜினியின் மதுரை பயணத் திட்டம் தயாராகி வருகிறது. 

• வினோத் இயக்கத்தில் நிகிலா விமலுடன் இணைந்து நடித்துள்ள "ரங்கா' படத்தைத் தொடர்ந்து டெக்னாலஜி த்ரில்லர் படமொன்றில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ். படம் முழுக்க டெக்னாலஜி த்ரில்லரை அடிப்படையாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. ஈஸ்வர் கார்த்திக் என்ற புதியவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "லேர்ன் அண்டு டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் தேவ் ஆனந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 

• தமிழகத்தில் எம்.ஜி.ஆரைப் போன்று ஆந்திரத்தில் சினிமா, அரசியல் என இரண்டிலும் ஜொலித்தவர் என்.டி.ஆர். எம்.ஜி.ஆர். பாணியில் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு வந்ததாக இவரைப் பற்றி சொல்வார்கள். ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத என்.டி.ஆரின் வாழ்க்கை தற்போது சினிமாவாக உருவாகவுள்ளது. இப்படத்துக்கு "என்டிஆர் பயோபிக்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார். கிரிஷ் இயக்குகிறார். இந்த படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. இதற்கு முன் "தசாவதாரம்' படத்தில் நடிக்க வித்யா பாலனை கமல்ஹாசன் கேட்டார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு கபாலியில் ரஜினி ஜோடியாக நடிக்க கேட்டபோதும் அவர் மறுத்துவிட்டார். என்டிஆர் படத்தில் நடிக்க அவரிடம் பேசியபோது, உடனே அவர் ஒப்புக்கொள்ளவில்லை. முழு திரைக்கதையையும் எழுத்து வடிவில் அவர் கேட்டிருந்தார். அதன்படி முழு கதையும் படித்த பிறகு அவர் நடிக்க சம்மதித்துள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தி வந்த வித்யாபாலன் இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கிறார். இதையடுத்து இவரை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சிகளிலும் சில இயக்குநர்கள் இறங்கியுள்ளனர். 
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com