பேல்பூரி

செலவு செய்தால்தான் பணத்தின் மதிப்பு தெரியும். கடன் கேட்டால்தான்... உன் மதிப்பு தெரியும்.
பேல்பூரி

கண்டது

(புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

விழா ரெஸ்டாரெண்ட்

சுப.காளிதாசன், நீர்விளங்குளம்.


(நாச்சியார் கோயில் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

பந்தி

கீதா முருகானந்தம், கும்பகோணம்.


(கடையநல்லூர் கீழ பஜாரில் உள்ள தேநீர் கடையின் பெயர்)

பச்சப்புள்ள டீ ஸ்டால்

டி.யு.முஹம்மது அலி, கடையநல்லூர்.


(தென்காசி பேருந்து நிலையத்தின் உட்புறச் சுவரில்)

பணம் சேமிப்பு சுயநலம்!
மழை நீர் சேகரிப்பு பொது நலம்!

செ.டேவிட் கோவில் பிள்ளை, தென்காசி.


கேட்டது

(சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே கணவன், மனைவி)

மனைவி: என்னங்க மியூசியம் இங்கிருந்து பக்கம்தானே? அழைச்சிட்டுப் போங்க...
கணவன்: மியூசியத்துக்கு நீ தேவைன்னா அவங்களே வண்டி அனுப்புவாங்க... இப்ப பேசாம வீட்டுக்கு வா.

நெ.இராமன், சென்னை-74

(கோவை ஒப்பணக்காரவீதியில் கணவன் - மனைவி)

கணவன்: இந்த ஜவுளிக்கடை ஆரம்பிச்சு 60 வருஷமாச்சு. இங்கே துணி எடுக்கலாம்
மனைவி: வேண்டாங்க... அறுபது வருஷம்ன்னா ட்ரெஸ்லாம் ரொம்ப பழையதா இருக்கும். இந்த வருஷம் ஆரம்பித்த கடையைப் பார்த்து எடுக்கலாங்க.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

மைக்ரோ கதை

ஓடுகிற ரயிலில் வழக்கமாக டிக்கெட் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்த ரயிலில் பயணிகளிடம் டிக்கெட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார் டிக்கெட் பரிசோதகர். சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞனிடம் டிக்கெட் கேட்டார். 

""ஆன் லைன் புக்கிங் சார்'' என்றான். 
"" அப்போ... செல்போன் மெசேஜைக் காட்டு'' என்றார் டிக்கெட் பரிசோதகர். 
""செல்போன் என் ஃபிரண்ட் கிட்ட இருக்கு சார்''
""ஐடி புரூஃபாவது காட்டு'' என்று கேட்டார். 
""அதுவும் என் நண்பன்கிட்டதான் இருக்கு. சாப்பிடுறதுக்கு ஏதாவது வாங்கி வர அவன் போயிருக்கான். இப்ப வந்திடுவான்'' என்றான் இளைஞன். 
"" அப்ப உன் கிட்ட எதுவுமே இல்லையா?'' என்று கோபமாகக் கேட்டார் டிக்கெட் பரிசோதகர்.
""பிளாட்பாரம் டிக்கெட் இருக்கு சார்'' என்றான். 
"" அது எதுக்கு?''

எஸ்.எம்.எஸ்.

""ஃபிரண்டை வழியனுப்ப வந்தேன் சார்...'' என்றான் இளைஞன்.
எம்.ரவீந்திரன், திருமருகல்.

யோசிக்கிறாங்கப்பா!


செலவு செய்தால்தான் பணத்தின் மதிப்பு தெரியும். 
கடன் கேட்டால்தான்... உன் மதிப்பு தெரியும்.

தீ.அசோகன், சென்னை-19.

நத்தைக்கு தன் கூடு சுமையானால்...
நகர்வது எப்படி?
உனக்கு நீயே சுமையானால்...
உயர்வது எப்படி?

உ.மணிமேகலை, இராஜபாளையம்.

அப்படீங்களா!

நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஏதோ கொஞ்சம் நமக்குத் தெரியும். பாலில் கால்சியம் இருக்கிறது... பயறு வகைகளில் புரோட்டின் இருக்கிறது... பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருக்கிறது என்று ஏற்கெனவே நாம் கேட்டவற்றில் இருந்து நாமாகவே கருத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவி உங்கள் கையில் இருந்தால், ஒவ்வோர் உணவுப் பொருளிலும் அடங்கியுள்ள சத்துகள் எவை என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். 

TELLSPEC FOOD SCANNER என்ற அந்த கருவி உங்களிடம் இருந்தால், நீங்கள் சாப்பிடக் கூடிய உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள சத்துகளை உடனே உங்களால் தெரிந்து கொள்ள முடியும். 

உங்களுடைய செல்போனுடன் இந்தக் கருவியை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எந்த உணவை நீங்கள் உண்ணப் போகிறீர்களோ... அதன் அருகே இந்தக் கருவியைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இந்தக் கருவியில் உள்ள சென்சாரின் மூலம் உணவுப் பொருள்களில் எவ்வளவு கார்போ ஹைட்ரேட் உள்ளது? எவ்வளவு கொழுப்புச் சத்து உள்ளது? எவ்வளவு புரதச் சத்து உள்ளது? என்பதைக் கண்டறிந்து அந்தத் தகவலை உங்கள் செல்போனுக்கு அனுப்பிவிடும். அதை செல்போனின் திரையில் நீங்கள் பார்க்க முடியும். 

செல்போனில் உள்ள இந்த தகவல்கள் TELLSPEC நிறுவனத்தின் SERVER இல் சேமித்து வைக்கப்படும். பின்பு அந்த தகவல்கள் பரிசீலனை செய்யப்படும். அவற்றை நீங்கள் உங்கள் செல்போனில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சத்தும் உடலுக்கு எந்த அளவுக்குத் தேவை என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com