மாயமாய் மறைந்த மலேசிய விமானம்! 

இந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியுடன், 239 பயணிகளுடன் மலேசிய விமானம் மாயமாய் மறைந்து போய் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
மாயமாய் மறைந்த மலேசிய விமானம்! 

இந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியுடன், 239 பயணிகளுடன் மலேசிய விமானம் மாயமாய் மறைந்து போய் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த விபத்தில் மறைந்ததாகக் கருதப்பட்ட பயணிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த கே.எஸ். நரேந்திரன் என்பவரின் மனைவி சந்திரிகா சர்மா. நரேந்திரன் மனிதவளத்துறை ஆலோசகர், நிறுவனங்களில் ஊக்கச் சொற்பொழிவாற்றுபவர். சந்திரிகா, சமூக சேவகி. அதனால் பயணங்கள் அதிகம் மேற்கொள்பவர். அவர் பயணம் செய்த மலேசியாவிலிருந்து பீஜிங் சென்ற அந்த விமானம் தான் மாயமாய் மறைந்துபோயிற்று!
 இத்தனை வருட இடைவெளியில் சும்மா இருந்த மலேசியா, இப்போது மீண்டும் அந்த விமானத்தைத் தேடும் பணியில் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகள் கூறுகின்றன.
 நரேந்திரன், இது பற்றி ஆங்கிலத்தில் விபத்துக்குப் பின் நடந்த நிகழ்வுகளை வைத்து ஒரு புத்தகமே எழுதிவிட்டார். அயல் நாடுகளில் சுமார் ஒரு டஜன் புத்தகங்கள் இது பற்றி பிரசுரமாகிவிட்டன. (நரேந்திரனின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு "வானத்தில் மறைந்த வாழ்க்கை' நூலாக வெளிவரவிருக்கிறது.)
 "எனக்கு இந்த சம்பவங்கள் குழப்பமாகவும், கவலையளிப்பதாகவும் இருந்தன. அவர்களுடைய மௌனமும் ஒளிவு மறைவாக இருப்பதும் வேண்டுமென்றே செய்வது போல் இருக்கிறது. திருப்தியளிக்கும் வகையில் உறவினர்களுக்கு விளக்கம் தர இயலாததால் சந்தேகம் ஏதும் எழாவண்ணம் ஜாக்கிரதையாக இருக்கப் பார்க்கிறார்கள். என்ன ஆயிற்று என்று வெளிப்படையாகக் கூறுவதில் ஏன் தயக்கம்?'' என்று நரேந்திரன் கேள்வி எழுப்பினார்.
 ஜனவரி 22 அன்று, மலேசிய அரசு அமெரிக்க நிறுவனம் "ஓஷன் இன்ஃபினிடி'யை புதிய தேடல் முயற்சியை மேற்கொள்ளுமாறு பணித்தது என்று "கார்டியன்' நாளிதழ் முதல் எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன. மலேசிய அரசையும் ஓஷன் இன்ஃபினிடியையும் தொடர்பு கொண்ட கார்டியன் நாளிதழ், தனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றது.
 ஜனவரி 29, 2015 அன்று மலேசியா அதிகார பூர்வமாக எம்.ஹெச்.370 விமானம் மறைந்துவிட்டதாக அறிவித்தது. பின்னர் மார்ச் 6, 2016ஆம் தேதி கிசியூனியன் தீவுக் கடற்கரை அருகே விமானத்தின் ஒரு பகுதியைக் கண்டெடுத்தார்கள். அதே ஆண்டு மே மாதம் 'கண்டுபிடிப்பதில் அதிக நம்பிக்கை இல்லை' என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தார்கள். 2016 டிசம்பரில் இது வரை தேடாத இடத்தில் தேடப்போவதாக ஒரு புதிய செய்தி வந்தது. ஜனவரி 23, 2017 அன்று மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் மாயமாய் மறைந்த விமானத்தைத் தேடும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார். அக்டோபர் 17, 2017 அன்று மூன்று நிறுவனங்கள் மலேசிய அரசை அணுகி, மறைந்த விமானத்தைத் தேடும் பணியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. அக்டோபர் 19, 2017 அன்று வந்த செய்தியில், மலேசியா அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக ஒரு செய்தி வந்தது.
 "இதை நான் எழுத முயன்றதற்குக் காரணம், என்னுடைய பழைய, புதிய சிநேகிதர்கள் கூறிய யோசனைதான். நான் பத்திரிகைகள் சிலவற்றில் அவ்வப்போது எழுதியதைப் படித்துவிட்டு உற்சாகப்படுத்தியவர்கள் அநேகம். சிலரோ தாங்கள் நெகிழ்ந்துபோனதாகவும், நான் எழுதியதைப் படித்துவிட்டு ஆறுதல் அடைந்ததாகவும் சொன்னார்கள். என்னுடன் பணியில் இருந்தவர்களோ நான் ஒரு புத்தகமே எழுதியிருக்க வேண்டும் என்றார்கள்'' என்று கூறுகிறார் நரேந்திரன். ""நான் ஒன்றும் புகழ் பெற்ற நபர் அல்ல. வாழ்க்கையில் ஒரு பகுதியை நான் எழுதுவதன் மூலம் என்னை நானே எடை போடுக்கொள்ளலாம், அவ்வளவுதான்!''
 பயணிகள் 239 பேருடன் மறைந்தது, விமானத்துறை உலக வரலாற்றில் மிகப் பெரிய புதிர் கடந்த ஆண்டு ஜனவரியில், ஆஸ்திரேலியா, சைனா, மலேசியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட, 1,20,000 சதுர கிலோமீட்டர் வட்டார, 157 மில்லியன் டாலர் தேடுதல் வேட்டை, பயனற்றதாகவே முடிந்தது. மேலும் 25,000 சதுர மீட்டர் வடக்குப் பகுதியிலும் தேட வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் ஏற்கவில்லை.
 இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி ஓஷன் இன்ஃபினிடி நிறுவனம் தேடலைத் தொடங்கியது. இந்த ஒப்பந்தத்தில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் தேடுதலுக்கு 10,000 சதுர கிலோமீட்டருக்குள் விமானத்தைக் கண்டுபிடித்தால் 20 மில்லியன் டாலர் தரப்பட வேண்டும். 25,000 சதுர கிலோமீட்டருக்குள் கண்டுபிடிக்கப்பட்டால் 50 மில்லியன் டாலர் தரப்பட வேண்டும். இந்த எல்லையைத் தாண்டிப் போய்த் தேட வேண்டியிருந்தால் ஓஷன் இன்ஃபினிடிக்கு 70 மில்லியன் டாலர் தர வேண்டும். ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் காசு கிடையாது!
 ஓஷன் இன்ஃபினிடியின் பிரதான வேலை, கடலுக்கடியில் எண்ணெய் தேடுவது, கடலடியில் கேபிள் பதிப்பது, கடலாழத்தில் சென்று வரைபடம் தயாரிப்பது இவைதாம். ஏன் இந்தத் தேடல்? நொறுங்கிய விமானப் பகுதிகள் கிடைத்தால், மறைவதற்கு முன் விமானத்தில் என்ன நடந்தது என்று கண்டு பிடிக்கலாம் என்ற நப்பாசைதான். விமானத்தில் மெக்கானிகல் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேண்டுமென்றே யாராவது அதைக் கடத்தப் பார்த்திருக்கலாம் என்று ஊகங்கள் உலாவுகின்றன.
 இதுவரை ஆராய்ந்து பார்த்தவர்கள், யாராவது திட்டமிட்டு விமானத்தின் டிரான்ஸ்பாண்டரின் சுவிட்சை அணைத்துவிட்டு, ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்துமாக் கடலைத் தாண்டி அதைக் கடத்திச் செல்ல முயன்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
 "மலேசிய அரசுக்கு ஆஸ்திரேலியா தொழில் நுட்ப உதவிகளை அளிக்கும்!'' என்று ஆஸ்திரேலிய அமைச்சர் டரன்செஸ்டர் கூறியிருக்கிறார். இது வரை 200 மில்லியன் டாலர் செலவழித்தாகிவிட்டது. தங்கள் கணவர்களை இழந்த ஆஸ்திரேலிய மனைவிமார், இந்தத் தேடுதல் வேட்டை குறித்து பரவசம் அடைந்திருக்கின்றனர். இந்தச் செய்தியைக் கேட்டதும் டேனிகா வீக்ஸ் என்ற பெண்மணி, "பெரிய பாரம் இறங்கியது போல் இருக்கிறது'' என்றாராம்.
 குறைந்தபட்சம் இந்துமாக் கடல் தீவுகளிலிருந்தும், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்தும் கிடைத்த மூன்று விமான நொறுங்கல் துண்டுகள் இந்த விமானத்தின் பகுதிகளே என்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
 "அன்று மார்ச் 8ஆம் தேதி காலை நேரம். ஆறரை மணிக்கு போன் மணி அடித்தது. அம்மாதான் காபி போட்டுவிட்டு என்னை எழுப்புகிறார் என்று நினைத்து, எழாமலே இருந்தேன். தொடர்ந்து மணி அடிக்கவே, போய் எடுத்தேன். சந்திரிகாவின் சிநேகிதி. மலேசிய விமானம் காணமல் போய்விட்டது என்றாள். இது எனக்குத் தெரிந்து என்ன ஆகவேண்டும் என்று கேட்டேன். அதில்தான் சந்திரிகா பயணம் செய்தாள் என்றாள்.
 அதில்தான் சந்திரிகா பயணம் செய்தாள் என்று தெரியுமா என்று கேட்டேன். டிக்கட் விவரத்தை எனக்கு மெயிலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவளுடைய சிநேகிதி ஏதோ தவறு செய்துவிட்டாள் என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் மார்ச் 7, 2014 அன்று ஒரு மலேசிய விமானப் பயணத்துக்கு, காலை எங்கள் குடியிருப்பிலிருந்து சந்திரிகாவுக்கு விடை கொடுத்ததோடு சரி. கோலாலம்பூர்-பீஜிங் வழியாக உலான் படோர் போவது சுற்றுவழிதான். முதலில் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து, பின்னர் வேண்டாம் என்று முடிவெடுத்தாள் என்று எனக்குத் தெரியும். மங்கோலியாவில் குளிரில் தவிக்க வேண்டாம் என்றுதான் அவள் நினைத்திருக்கிறாள் என்றே நானும் எண்ணினேன். கோலாலம்பூரில் அதிக நேரம் தங்கும் என்பதில் அவளுக்கு விருப்பமில்லைதான். இந்தப் பயணம் பற்றி எனக்கு ஏதோ நிறையத் தெரிகிற மாதிரி ஒரு விசித்திரமான நினைப்பு!' என்று நூலில் எழுதியிருக்கிறார் நரேந்திரன்.
 விமான விபத்து நடந்தபோது, நரேந்திரனின் மகள் தில்லியில் படித்துக்கொண்டிருந்தாள். அவளை வரச் சொல்லி சமாதானம் செய்தார். பின்னர் அவளை தில்லியில் மீண்டும் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்தார். தன் வயதான தாயாருடன் சென்னையில் வசித்து வருகிறார் நரேந்திரன். அவருடைய தாய் பழம் பெரும் எழுத்தாளர் அநுத்தமாவின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்.
 மார்ச் முதல் வாரத்தில் மலேசியாவுக்கு வருமாறு விமான நிறுவனம் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று, நரேந்திரன் கோலாலம்பூர் செல்கிறார்.
 -சாருகேசி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com