"முடி' வுள்ள பிரச்னை!

பள்ளி, கல்லூரி செல்லும் இளம் வயதினராகட்டும், ஐம்பதைக் கடந்துவிட்ட முதியவர்களாகட்டும், எல்லாருக்கும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் பிரச்னை: முடி பிரச்னைதான். ""முடி உதிர்வது, இளநரை போன்றவற்றுக்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து, சிகிச்சை செய்தால் அவற்றைத் தீர்க்க முடியும்'' என்கிறார்
"முடி' வுள்ள பிரச்னை!

பள்ளி, கல்லூரி செல்லும் இளம் வயதினராகட்டும், ஐம்பதைக் கடந்துவிட்ட முதியவர்களாகட்டும், எல்லாருக்கும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் பிரச்னை: முடி பிரச்னைதான். ""முடி உதிர்வது, இளநரை போன்றவற்றுக்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து, சிகிச்சை செய்தால் அவற்றைத் தீர்க்க முடியும்'' என்கிறார் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்.
 ""இன்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு முடி கொட்டுதல், இளநரை போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கின்றன. அதிகப் பாடச்சுமை, அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலை, பெற்றோர், ஆசிரியர்கள் தரும் நெருக்குதல்கள் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. படிப்பு முடித்து வேலைக்குச் சென்றால் வேலை செய்யுமிடத்தில் மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக ஐடி துறையில் இது அதிகம். இந்த மன அழுத்தத்தால் முடி கொட்டுகிறது.
 அடுத்து இளம் வயதினர் சரியாகச் சாப்பிடுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. வைட்டமின் பற்றாக்குறையால் முடி கொட்டும். பயோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ குறைவால், முடி உதிரும். இரும்புச் சத்து குறைந்தால் முடி கொட்டும். தாது உப்புகள், புரதச் சத்து குறைந்தாலும் அதிக அளவில் முடி உதிரும்.
 இரவு நேரத்தில் வேலை செய்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. இரவில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடலின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. வளர்சிதை மாற்றம் முறையாக நடைபெறுவதில்லை. இதனாலும் முடி கொட்டும்.
 இளம் வயதினர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதில்லை. வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்ப்பதே அதிகம். இதனாலும் முடி கொட்டுகிறது. கேரளத்தில் உள்ள பெண்களுக்கு முடி அதிகமாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் தினம்தோறும் தேங்காய் எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்துக் கொள்வதே.
 தலைமுடியில் உள்ள அழுக்கைப் போக்க, நிறைய ஷாம்புகளை இப்போது பயன்படுத்துகிறார்கள். விளம்பரங்களைப் பார்த்து ஷாம்புகளை அடிக்கடி மாற்றுகிறார்கள். ஷாம்புகள் ரசாயனப் பொருட்களால் செய்யப்படுபவை. அவற்றைப் பயன்படுத்துவதால் முடி கொட்டும்.
 சிலர் உடம்புக்குப் போட வேண்டிய சோப்பை, தலைக்குப் போடுகிறார்கள். இதனாலும் தலையில் முடி கொட்டும்.
 ஹார்மோன் பிரச்னைகள் - உதாரணமாக தைராய்டு பிரச்னையால் முடி கொட்டும். இரும்புச் சத்துக் குறைவால் ஏற்படும் ரத்தசோகையாலும் முடி கொட்டும். ஆனால் முடி கொட்டுவது என்பது இயல்பானது. தினம்தோறும் நமக்கு 50 இலிருந்து 100 முடிகள் தலையிலிருந்து உதிர்கின்றன. அந்த இடத்தில் புது முடிகள் முளைக்கின்றன. குளிக்கும்போது இரண்டு தலை முடிகள் உதிர்வதைப் பார்த்து டென்ஷனாகி, முடி கொட்டுகிறது என்று பயந்தால், அதனால் அதிக அளவில் முடி கொட்ட வாய்ப்புண்டு.
 தலை முடி கொட்டுகிறது என்ற பிரச்னைக்காக என்னிடம் வருகிறவர்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்வேன். அதற்குப் பின்பு அதற்கேற்ற சிகிச்சைகளைச் செய்வேன். உதாரணமாக, ஓர் இளம் பெண் தலையில் அதிக முடி கொட்டுகிறது என்று என்னிடம் வந்தால் முதலில் தைராய்டு பிரச்னை உள்ளதா? ரத்த சோகை உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்வேன். அந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருத்துவத்துக்கு பரிந்துரைப்பேன். தலை முடி அதிக அளவில் உதிராமல் தடுப்பதற்கும், முடி உதிர்ந்த இடத்தில் புது முடிகளை முளைக்க வைப்பதற்கும் இது அவசியம்.
 முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கையாகி வருபவர்களுக்கு அதற்கேற்ற சிகிச்சைகளைச் செய்வேன். சிலருக்கு சின்ன படை போல தலையில் ஒன்றிரண்டு வரும். சிலருக்கு தலை முழுக்கக் கூட படை வந்துவிடும். படை உள்ள இடத்தில் முடி கொட்டிவிடும்.
 அதிக அளவில் முடி உதிரும் பிரச்னைக்கு மருந்து,மாத்திரை, லோஷன், ஷாம்பு - தேவைப்பட்டால் முடி கொட்டிய இடத்தில் ஊசி போடுவது } போன்ற சிகிச்சைகள் உள்ளன. மருந்து, மாத்திரை, லோஷன், ஷாம்பு ஆகியவற்றால் சரியாகவில்லையென்றால்தான் ஊசி போடும் சிகிச்சையைச் செய்ய வேண்டும். சிகிச்சை செய்யும்போதும் சரி, செய்த பிறகும் சரி முடி கொட்டும் பிரச்னையைத் தீர்க்க நல்ல சத்துள்ள உணவுகளை நாம் தொடர்ந்து உண்ண வேண்டும். சத்துப் பற்றாக்குறையால் ஏற்படும் முடி கொட்டும் பிரச்னையை வெறும் மருந்து, மாத்திரை, ஊசி, லோஷன், ஷாம்புவால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது.
 இவை தவிர, முடி கொட்டுவதற்கு பரம்பரையும் காரணமாக உள்ளது. அதைச் சரி செய்வது கடினம். எனவே அதற்கு முடியை தலையில் நடும் சிகிச்சை உள்ளது. தலையின் பின்பகுதியில் உள்ள முடியை எடுத்து, முடியில்லாத இடத்தில் அறுவைச் சிகிச்சையின் மூலம் நட்டு வைப்பதுதான் இந்த சிகிச்சை. இந்த மருத்துவத்தை ஒரு சிலருக்குச் செய்ய முடியாது. சிலருக்குக் காயம்பட்ட இடத்தில் ஏற்படும் தழும்புகள் மேடாக இருக்கும். இதை ஹீலாய்ட் என்பார்கள். இப்படி தழும்புகள் மேடாக வருபவர்களுக்கு முடி நடும் சிகிச்சையைச் செய்ய முடியாது. அதுபோல உளவியல் காரணங்களால் சிலருக்கு முடி கொட்டும். அதற்குரிய உளவியல் மருத்துவத்தைச் செய்து அந்த முடி கொட்டுதலைச் சரி செய்ய முடியும்.
 சமீபத்தில் காதுக்கு அருகே தலையில் முடி கொட்டுவது அதிகமாக உள்ளது. செல்போனை அதிக அளவில் பயன்படுத்துவதால் அதில் ஏற்படும் கதிர்வீச்சால் முடி கொட்ட வாய்ப்புண்டு என்று கூறுகிறார்கள். எனவே செல்போனில் நீண்ட நேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
 வாரத்துக்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளிக்கும் பழக்கம் இன்று இல்லாமல் போய்விட்டது. முடிந்த அளவுக்கு அதைப் பின்பற்றினால், முடி கொட்டும் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்'' என்கிறார் ரேணுகா ராமகிருஷ்ணன்.
 ந.ஜீவா
 படம்: கே.அண்ணாமலை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com