செல்வம் அருளும் அபிராமேசுவரர்!

தெய்வ மணம் கமழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் கரும்புத் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், வயல்கள் நிறைந்த "பாடகம்'
செல்வம் அருளும் அபிராமேசுவரர்!

தெய்வ மணம் கமழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் கரும்புத் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், வயல்கள் நிறைந்த "பாடகம்' என்ற ஊரில் அருள் வழங்கும் அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அபிராமேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

"பாடகம்' என்ற சொல் பண்டைய கல்வெட்டுகளில் "நிலம்', "நிலஅளவு' என்ற பொருளில் வருகிறது. பாடகம் என்றால் பெண்கள் காலில் அணியும் அணிகலன் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இவ்வூரின் பெயரே தொன்மைச் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

நிலவளம் மிக்க பாடகம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் "அபீதகுஜாம்பாள்' என்பதாகும்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில்! பலிபீடம், தீபஸ்தம்பம், நந்தி மண்டபம் ஆகியவை கிழக்கில் அமைந்துள்ளன. தீப ஸ்தம்பத்தின் அமைப்பு சிறப்பானது. அதன் அடிப்பகுதியில் சதுரமான வடிவத்தில் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கிலும் மேற்கிலும் சங்க நிதி- பதும நிதியின் வடிவங்கள் காணப்படுவது மிகச் சிறப்பாகும். மற்ற இருபக்கங்களில் ஒரு பெண் அகல் விளக்கைத் தாங்கிக் கொண்டிருக்கும் கோலத்திலும் மற்ற பக்கத்தில் பெண் ஒருத்தி தனது கைகளில் சாமரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் அற்புத வடிவத்தைக் காணலாம். இக்கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வற்றாத செல்வத்தை அளிக்கும் வகையில் இச்சிற்ப வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சித் தருகிறார். அழகிய, பெரிய திருமேனி. அர்த்த மண்டப வாயிலில் விநாயகரும் சண்முகரும் அருள்புரிகின்றனர். அடுத்து, முகமண்டபத் துண்கள் அழகிய சிற்பங்களுடன் காட்சி தருகின்றன. கருவறை தேவகோட்டங்களில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய வடிவங்களைக் காணலாம். திருச்சுற்றில் விநாயகர், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. வடக்கு திருச்சுற்றில் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கரங்களில் அங்குசம் பாசம் ஏந்தியும் கீழிரு கரங்களில் அபய- வரத முத்திரைத் தாங்கி அருள்புரியும் அழகிய வடிவத்தைக் கண்டு வணங்கலாம். இத்திருச்சுற்றில் தலமரமான வில்வமரம் அமைந்துள்ளது.

இக்கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்குகிறது. சோழர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சோழர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த இக்கோயில், பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தற்போதைய கோயிலின் கட்டடக் கலைப்பாணி விஜயநகர நாயக்கர் கால அமைப்புடன் விளங்குகிறது. 

இக்கோயிலில் பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், தைப்பொங்கல், சிவராத்திரி போன்ற நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு அருகாமையில் முத்தாலம்மன் என்ற மாரியம்மன் கோயிலில் சிறப்பாக வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன. 

வற்றாத செல்வத்தை அருளும் சங்கநிதி -பதுமநிதி வடிவங்கள் இக்கோயிலின் தீபஸ்தம்பத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போளூரிலிருந்து நகர பேருந்துகள் (தடம் எண்: 2,3,8), 12 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூருக்கு வந்து செல்கின்றன.
 தொடர்புக்கு: 91766 78003/ 95141 75453.
- கி. ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com