திருமூலத்தில் அவதரித்த மணவாள மாமுனிகள்!

வைணவ குருமார்களில் கடைசி குருவாக போற்றப்படும் மகிமை கொண்ட மஹினீயர் மணவாள மாமுனிகள் ஆவார்.
திருமூலத்தில் அவதரித்த மணவாள மாமுனிகள்!

வைணவ குருமார்களில் கடைசி குருவாக போற்றப்படும் மகிமை கொண்ட மஹினீயர் மணவாள மாமுனிகள் ஆவார். பின்பு வைணவ மடங்களாகத் திகழ்பவை, வானமாமலை, அஹோபில மடம், பரகாலமடம், ராமானுஜ மடம் போன்றவைகள். மேற்கண்ட குருமார்களால் தோன்றுவிக்கப்பட்டு இன்றளவும் வைணவம் வளர வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. 

மணவாள மாமுனிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சிக்கல் கிடாரம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த திருநாவீறுடைய பிரான் தாஸரண்ணருக்கும் ரங்கநாச்சியாரம்மாவுக்கும் குமரனாய் (கி.பி. 1370) ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூல நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர்கள் "அழகிய மணவாளன்' என்று பெயரிட்டனர். 

ஆதிசேஷனே ராமானுஜராகவும் பின்பு அழகிய மணவாளன் என்ற மாமுனிகளாகவும் அவதரித்தார் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம். 
மணவாள மாமுனிகள் தக்க காலத்தில் தீதில் திருமலையாழ்வார் என்கிற மஹாவித்வானிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றார். பின்பு இல்லற வாழ்வு மேற்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து அரங்கனின் கைங்கர்யங்களில் ஈடுபட்டதோடல்லாமல் ஆழ்வார்களின் பாடல்களின் தத்துவங்களை அடியார்களுக்கு காலஷேபங்கள் மூலம் உபதேசித்து வந்தார். 

இந்த கைங்கர்யங்களுக்கு இல்லறம் தடையாக இருப்பதை உணர்ந்து துறவறம் பூண்டு மணவாள மாமுனிகள் என்ற நாமம் பூண்டார். இவருக்கு சடகோப ஜீயர் என்பார் துறவறம் அளித்தார். தன்னுடைய குருவான திருவாய் மொழிப்பிள்ளையின் உத்தரவுப்படி வைணவ சமய நூல்களை ஆய்வு செய்து வந்தார். 

ராமானுஜரிடம் மிகவும் ஈடுபாடு கொண்டு அவர் மீது யதிராஜ விம்ஸதி என்ற ஸ்லோகங்களை இயற்றினார். அரங்கனின் கைங்கர்யத்தை தொடர்ந்து பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்தார். அவ்வமயம், காஞ்சியில் ஓராண்டு காலம் தங்கி காலட்சேபம் செய்தார். 

அதை முன்னிட்டே தற்போதும் காஞ்சி திருவெஃகா தலத்தில் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார். அதேபோன்று ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரை தரிசித்து அவரின் ஸ்ரீ பாஸ்யத்தை பிரவசனம் செய்தார். அதன் நினைவாக ஸ்ரீ பெரும்புதாரில் மாமுனிகள் காலட்சேபம் செய்த இடத்தில் உள்ள கம்பத்தில் மாமுனிகளின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

இவரின் காலட்சேபத்தின் அருமையை உணர்ந்த திருவரங்கன் தாமே இவரிடம் காலட்சேபம் கேட்டான். அதற்காக ஸ்ரீரங்கத்தில் தனது திருக்கோயில் திருவிழாக்களை ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைத்தான். மேலும் இவரையே தன்னுடைய ஆசானாக வரித்து ""ஸ்ரீசைலேச தயாபத்ரம் தீபக்யாதி குணார்னவம், யந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரு முநிம்'' என்ற தனியனை அளித்து கௌரவித்தான். மேலும் குருதட்சிணையாக தன் (ஆதிசேஷன்) ஆஸனத்தில் அவரை அமர்த்தி இவரின் புகழ் மேம்பட உலகறிய செய்தான். அதனால்தான் திருக்கோயில்களில் மணவாள மாமுனிகள் ஆதிசேஷனில் அமர்ந்த நிலையில் திருவுருவங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். வைணவத்தை வளர்க்க தமக்குத் துணையாக எட்டு மஹனீயர்களை நியமித்தார். அவர்களே "அஷ்டதிக் கஜங்கள்' என்று பெருமை பெற்றனர். 1. வானமாமலை ஜீயர், 2. பட்டர்பிரான் ஜீயர், 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர், 4. கோவில் அண்ணா, 5, பிரதிவாதி பயங்கரம் அண்ணா, 6. எறும்பியப்பா, 7. அப்பிள்ளை, 8. அப்புள்ளார்.

மாமுனிகள் பல கிரந்தங்களை வியாக்யானம் செய்தும் கிரந்தங்களை அருளியும் பெரிய ஜீயர் என்ற பெருமையை பெற்றார். நான்குநேரியில் உள்ள வானமாமலை மடத்தில் மாணவாள மாமுனிகள் அணிந்திருந்த மோதிரம் ஒன்று உள்ளது. பிரதி வருடமும் ஐப்பசி திருமூல நன்னாளான மணவாள மாமுனிகளின் அவதார தினத்தில் தற்போது உள்ள ஜீயர் அம்மோதிரத்தை தாம் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு புனிதநீர் அளிக்கிறார்.

இத்தகைய பெருமையுடைய மணவாள மாமுனிகளுக்கு திருக்கோயில் ஒன்றை நிறுவ அவரின் சீடர்கள் விரும்பியபோதிலும் இவர் அதற்கு மறுத்தார். பின்பு சீடர்களின் குருபக்தியை மெச்சி சிறிய அளவில்தான் இருக்க வேண்டுமெனக் கூறி, தான் உபயோகித்து வந்த இரண்டு செப்பு சொம்புகளை கொடுத்தார்.

அதில் இரண்டு விக்ரஹங்களை செய்து ஒரு விக்ரகத்தை பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலும் மற்றொன்றை ஸ்ரீரங்கத்திலும் பிரதிஷ்டை செய்தனர். இதில் ஆழ்வார் திருநகரியில் உள்ளது கைகூப்பிய நிலையில் அமைந்திருக்க, திருவரங்கத்தில் உள்ளது உபதேசிக்கும் பாவனையில் அமைந்துள்ளது. காலப்போக்கில் அநேக திருத்தலங்களில் மாமுனிகளுக்கு சிலாவிக்ரஹம் அமைக்கப்பட்டு அவரது அவதார திருநாள்  (4.11.2016) கொண்டாடப்பட்டு வருகின்றது.
- எம். என். ஸ்ரீநிவாசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com