அறிவியலுக்கு அப்பால் 17 - மனிதக் கணினிகள்

மகாபாரதத்தில் "வனபர்வா' வில் பிருஹதஸ்வர் என்னும் முனிவரின் மூலமாகத் தருமபுத்திரருக்கு
அறிவியலுக்கு அப்பால் 17 - மனிதக் கணினிகள்

மகாபாரதத்தில் வனபர்வா' வில் பிருஹதஸ்வர் என்னும் முனிவரின் மூலமாகத் தருமபுத்திரருக்கு நள தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. இந்த நள தமயந்தியின் கதையைத் தமிழில் வெண்பா வடிவில் புகழேந்திப் புலவர் காப்பியமாக வடித்தார். இந்தக் கதையின் இறுதிக் கட்டத்தில் ரிதுபர்ணன் என்னும் அரசனுக்குத் தேரோட்டியாக பஹுகன் என்னும் பெயரில் வேலை பார்த்து வந்த நளன், அந்த மன்னனை தமயந்தி வாழும் ஊருக்குத் தேரில் அழைத்துப் போகிறான். காற்றின் வேகத்தில் அந்தத் தேர் செல்லும் போது மன்னனின் மேலாடை கீழே விழுகிறது. அந்த மேலாடையை எடுத்துத் தருமாறு ரிதுபர்ணன் கேட்கிறான். ஆனால், மேலாடை வீழ்ந்தது எடுவென்றான், அவ்வளவில் நாலாறு காதம் கடந்ததே! என்கிறான் நளன்.

நளனுடைய தேரோட்டும் பயிற்சியைப் பார்த்து அதிசயித்துப்போன மன்னன், தன்னிடம் உள்ள வேறொரு திறமையை நளனுக்குக் காட்ட விழைகிறான். அப்பொழுது, அந்தத் தேர் செல்லும் பாதையில் ஒரு மிகப்பெரிய "தான்றி' மரத்தை இருவரும் பார்க்கிறார்கள். அந்தத் தான்றி மரத்தின் கிளைகளில் இருக்கும் இலைகள் மற்றும் பழங்களின் எண்ணிக்கையைப் பார்த்தவுடனேயே சொல்லக்கூடிய "அக்ஷ ஹ்ருதயம்' என்னும் கணித சாத்திரத்தில் தான் வல்லவன் என்று சொல்லிவிட்டு ரிதுபர்ணன் மேலும் கூறினான்: ""இந்த மரத்தில் தற்போது இருக்கும் இலைகளும் பழங்களும் கீழே விழுந்திருக்கும் இலைகளையும் பழங்களையும் விட எண்ணிக்கையில் 101 அதிகமாக இருக்கும். இதன் இருபெரும் கிளைகளில் உள்ள இலைகளின் எண்ணிக்கை 1 கோடியாகும். பழங்களின் எண்ணிக்கை 2095 ஆகும்''.

உடனே, தேரை நிறுத்தி விட்டு, மன்னன் சொன்ன எண்ணிக்கை சரிதானா என்பதைக் கணக்கிட்டு உறுதி செய்து கொண்ட நளன், அந்தக் கணித சாத்திரத்தை மன்னனிடமிருந்து கற்றுக் கொண்டு குதிரைகளைப் பற்றிய சாத்திரத்தையும், தேரோட்டும் வித்தையைப் பற்றிய நுணுக்கங்களையும் மன்னனுக்குக் கற்றுக் கொடுத்ததாக அந்தக் கதை தொடர்கிறது.

மனிதகுல வரலாற்றில் பிறப்பிலேயே கணிதத்தில் மேதையானவர்கள் பலர் உண்டு. அவர்களின் மூளை அதிவேகக் கணினிகளுக்கு ஒப்பானவையாகக் கருதப்படுவது உண்டு. அமெரிக்க உளவியல் பத்திரிகையில் (American Journal of Psychology) ஏப்ரல், 1891 இதழில் முனைவர் இ.டபிள்யு. ஸ்க்ரிப்ட்சர் (Dr.E.W.Scripture) இப்படிப்பட்ட கருவிலேயே கணித மேதையாகத் தோன்றியோர் சிலரைப் பற்றி Arithmetical Prodigies என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.

கணிதமேதை இராமானுஜத்தைப் பற்றி நாம் அறிவோம். அவரைப் பற்றிக் கடந்த ஆண்டு வெளிவந்த "தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி (The Man who knew infinity)’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் இராமானுஜத்திற்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.ஹார்டி (Hardy) அவர்களுக்கும் ஓர் உரையாடல் நடக்கும். அந்த உரையாடலில் கணித மேதை இராமானுஜம், தனக்குப் பல கணிதச் சமன்பாடுகளுக்குச் (equations) சரியானவிடையைத் தான், வணங்கும் தெய்வமாகிய நாமகிரித் தாயார் தன்னுடைய நாவில் எழுதுவதாகவும், அதனால் அந்த விடைகளைப் படிப்படியாக அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யும் திறன் தனக்கு இல்லை என்றும் கூறுவார். இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் கண்ணால் காணும் நிதர்சனத்திற்கும், தன்னுடைய அறிவு சொல்லும் பாடத்திற்கும் சமரசம் காண முடியாமல் பகுத்தறிவாளராகிய திரு.ஹார்டி தவிப்பார்.
எது எப்படியாயினும், எழுதப்படிக்கத் தெரியாமலேயே கூட, எண் கணிதத்தில் (arithmetics) உலகை வியக்க வைத்தவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். 1710-ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, தன்னுடைய 14-ஆவது வயதில் அதாவது 1724-ஆம் ஆண்டு, வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, அடிமையாக விலைக்கு விற்கப்பட்டு, அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்ட திரு.தாமஸ் ஃபுல்லர் (Thomas Fuller) இப்படிப்பட்ட அதிசயத்தக்க மனிதராக விளங்கினார். இன்றைய நவீன கணிப்பான் (அ) கணக்குப்பொறிகளைவிட மிக வேகமாகக் கூட்டல் பெருக்கல்களைச் செய்யும் திறனைப் பெற்ற திரு.தாமஸ் ஃபுல்லர் அந்தக் காலத்திலேயே வெர்ஜீனியா கேல்குலேட்டர் (Virginia Calculator)  என்றே அழைக்கப்பட்டார்.

ஒன்றரை வருடத்தில் எத்தனை விநாடிகள் இருக்கின்றன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, உடனடியாக 4,73,04,000 விநாடிகள் என்று அவர் பதிலளித்தார். அதேபோல், ஒரு மனிதன் 70 ஆண்டுகள் 17 நாட்கள் 12 மணிநேரம் உயிரோடு இருந்தால், அவன் வாழ்ந்த நொடிகள் எத்தனையாக இருக்கும் என்று கேட்டபோது, கண்களைச் சற்று நேரம் மூடித் திறந்த திரு. ஃபுல்லர், அதற்கான விடை 221,05,00,800 நொடிகள் என்று விடையளித்தார். ஆனால், இந்தக் கேள்வியைக் கேட்ட நபர் ஒரு தாளில் இந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்துவிட்டு திரு.தாமஸ் ஃபுல்லரின் விடை தவறு என்று கூக்குரலிட்டார். எனினும், கொஞ்சமும் அதிர்ச்சிக்கு உள்ளாகாத திரு.தாமஸ் ஃபுல்லர், அந்தக் கேள்வி கேட்டவரைப் பார்த்து, ""ஐயா தாங்கள் போட்ட கணக்கில் லீப் (Leap) வருடங்களைத் தாங்கள் கணக்கில் கொள்ளத் தவறி விட்டீர்கள், லீப் வருடங்களை நீங்கள் கணக்கில் கொண்டால், என்னுடைய விடைதான் சரியாக இருக்கும் என்று பதிலளித்தார். இதைக் கேட்டுத் திகைத்துப்போன அந்தக் கேள்வியாளர், லீப் வருடங்களை கணக்கில் கொண்டு மீண்டும் கணக்குப் போட்டபோது, திரு.தாமஸ் ஃபுல்லரின் விடையே சரியாக இருந்தது. 1782-ஆம் ஆண்டு தனது 72- ஆவது வயதில் காலமான திரு.தாமஸ் ஃபுல்லருக்கு இறுதிவரை எழுதப் படிக்கத் தெரியாது. அதைத் துரதிஷ்டம் என்று ஒருவர் வருத்தப்பட்டுப் பேசியபோது, திரு.தாமஸ் ஃபுல்லர் சிரித்துக் கொண்டே சொன்னார் : எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டவுடன் பலர் முட்டாள்கள் ஆகிவிடுகிறார்கள்.

தாமஸ் ஃபுல்லரைப் போலவே இங்கிலாந்தில் மனிதக் கணினியாக இயங்கியவர் ஜெடிதா பக்ஸ்டன் (Jedidiah Buxton)என்னும் ஒரு விவசாயக் கூலி ஆவார். 1707- ஆம் ஆண்டு டெர்பிஷையர் (Derbyshire)  என்னும் நகரில் பிறந்த அவரை, "கனவான்களின் பத்திரிகை" (Gentleman's Magazine) என்னும் பத்திரிகையில் 8.2.1751- இல் வெளிவந்த கடிதம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஒரு குறிப்பிட்ட (ஒரு அங்குலத்திற்கும் குறைவான) அளவுள்ள வாற் கோதுமை ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் 8 மைல் நீளத்திற்குப் பயிரிடப் பட்டால் எத்தனை விதைகள் பயிராக்கப்படும் என்ற கேள்விக்கு, 202,68,00,00,360 என்று பதிலளித்தார் பக்ஸ்டன். அவருடையத் திறமையைக் கண்டு வியந்து இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டிக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அவரைக் கெளரவிக்கும் விதமாக ஷேக்ஸ்பியரின் மூன்றாம் ரிச்சர்ட் நாடகம் அவருக்குப் போட்டுக் காட்டப்பட்டபோது, அந்தப் படிப்பறியாப் பாமரனுக்கு அந்த நாடகம் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால், நாடகத்தின் முடிவில் அதில் வரும் நடிகர்கள் எத்தனை முறை மேடையில் தோன்றினார்கள், எவ்வளவு நிமிடங்கள் மேடையில் இருந்தார்கள், எத்தனை வார்த்தைகளைப் பேசினார்கள் என்னும் கணக்கை மிகத் துல்லியமாகச் சொன்னார் பக்ஸ்டன்.

அறிவியலுக்குப் புலப்படாத அவருடைய கணிதத் திறமையைப் பாராட்டி 1764-ஆம் ஆண்டு ஒரு பெண்மணி அவரை ஓவியமாக வரைந்தார். அந்த ஓவியம் இன்றும் கூட எம்டன் என்னும் ஊரில் புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் மிகப் பெரிய பூஜ்யமாக இருந்த பக்ஸ்டன், கணிதத்தில் எப்படி எந்தப் பயிற்சியும் இல்லாமல் புலியாக விளங்கினார் என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. 1772- ஆம் ஆண்டு போர்ட்லேண்ட் கோமகனிடம் (Duke of Portland) தான் முன்கூட்டியே அனுமானித்ததைப் போல ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இயற்கையான மரணம் எய்திய பக்ஸ்டன், மரணத்திலும் ஒரு புரியாத புதிராகிப் போனார்.

இப்படிப்பட்ட கணித மேதைகள் எப்படி சாதாரணக் குடும்பங்களில், வால் நட்சத்திரங்களைப் போல் தோன்றுகிறார்கள் என்பது இன்னமும் அறிவியலுக்கு அப்பாலேயே உள்ளது.

- நீதிபதி-வெ-ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com