அறிவியலுக்கு அப்பால் 19:  எக்சிக்யூடிவ் இ.எஸ்.பி

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் (Illinois) நகரில் பிறந்து 1886-இல் சிகாகோவிற்குக் (Chicago) குடிபெயர்ந்த
அறிவியலுக்கு அப்பால் 19:  எக்சிக்யூடிவ் இ.எஸ்.பி

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் (Illinois) நகரில் பிறந்து 1886-இல் சிகாகோவிற்குக் (Chicago) குடிபெயர்ந்த ஜெ.டபிள்யூ.ஸ்டீவன்ஸ் (J.W.Stevens) காப்பீட்டுத் தொழிலில் (Insurance) கோடிகோடியாகச் சம்பாதித்தார். அந்த வருமானத்தைக் கொண்டு 1925-இல் 3000 அறைகளுடன் 28 அடுக்குகளைக் கொண்ட ஸ்டீவன்ஸ் ஹோட்டல் (Stevens Hotel) என்னும் விடுதியை 30 மில்லியன் டாலர் செலவில் கட்டினார். 1927-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் நாள் அமெரிக்காவைக் கலக்கும் வகையில் ஒரு திறப்பு விழாவைக் கண்ட அந்த விடுதி, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மிகப் பெரிய நட்டத்தில் வீழ்ந்து திரு.ஸ்டீவன்ஸ் குடும்பத்தினரைத் திவாலாக்கியது. குடும்பத் தலைவர் பக்கவாதத்தில் வீழ்ந்தார். மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு மகன் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டான். (அவனது மகன் பின்னாளில் அமெரிக்க உச்ச நீதி மன்ற நீதிபதியானார்).

முதல் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தால் அந்த விடுதி எடுத்துக் கொள்ளப் படுவதற்கு முன், ஸ்டீவன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அந்தப் பங்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணம் திரு.கான்ராட் ஹில்டனுக்கு (Conrad Hilton) உதித்தபோது, அவரது நண்பர்கள் அவரைப் பரிகசித்தனர். அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க நினைப்பவர்கள் தங்களுடைய கேட்புத் தொகையை (quote) மூடிவைக்கப்பட்ட ஓர் உறைக்குள் (envelope) குறிப்பட்டு அனுப்ப வேண்டும் என்னும் விதிக்கு இணங்க திரு.கான்ராட் ஹில்டன், ஒரு தன்முகவரியுடைய கடிதத்தாளில் (letterhead) 1,65,000 டாலர்கள் என்ற தொகையை எழுதினார். பிறகு, கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த ஹில்டனின் மனக்கண்ணுக்கு முன்னால் 1,80,000 டாலர்கள் என்னும் தொகை தொடர்ந்து பளிச்சிட்டுக் கொண்டே இருந்தது. ஏன் என்று புரிந்து கொள்ள முடியாமல், தான் ஏற்கெனவே எழுதிய தாளைக் கிழித்துப்போட்டுவிட்டு இன்னொரு தாளில் திரு.ஹில்டன் 1,80,000 டாலர்கள் என்று எழுதி, அந்த நிறுவனத்தை விலைக்குக் கொண்டுவந்த பொறுப்பாட்சியருக்கு அனுப்பினார்.

குறிப்பிட்ட நாளில் எல்லா ஒட்டப்பட்ட உறைகளும் திறக்கப்பட்டபோது, திரு.ஹில்டன் எழுதிய கேட்புத் தொகையாகிய 1,80,000 டாலர்கள்தான் வந்திருந்த கேட்புத் தொகைகளிலேயே அதிகமானதாகவும், அவருக்கு அடுத்தபடியாக இன்னொருவர் கேட்ட கேட்புத்தொகை 1,79,800 டாலர்கள் ஆகவும் இருந்தது. இறுதியில் ஸ்டீவன்ஸ் நிறுவனமும், அதனுடைய ஸ்டீவன்ஸ் விடுதியும் திரு.ஹில்டனின் கைக்கு மாறி, இன்று அது ""ஹோட்டல் கான்ராட் ஹில்டன், சிகாகோ'' (Hotel Conrad Hilton, Chicago) என்ற மிகப் புகழ்பெற்ற உண்டுறை விடுதியாகச் செயல்படுகிறது. 1,65,000 டாலர்களை கேட்புத்தொகையாகக் கேட்க நினைத்த திரு.கான்ராட் ஹில்டன் அவர்களை, எந்தச் சக்தி 1,80,000 டாலர்களாக மாற்றிக் கேட்க வைத்தது?

அமெரிக்கப் பங்குச் சந்தையை மிகப்பெரிய அளவில் கலக்கியவர் ஜெஸ்ஸி லிவர்மூர் (Jesse Livermore).. செல்வச்செழிப்பு, ஏழ்மை, ஆடம்பரம், அழகான பெண்கள், புதுப்புது சொகுசுக் கார்கள், கோடிக்கணக்கில் பணம், திடீர் திவால், மறுபடி பணம், மறுபடி திவால், பல திருமணங்கள், இப்படித் திரைக்கதைகளை விஞ்சும் வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.

1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வினால் (Extra sensory perception) உந்தப்பட்ட அவர், வால்ஸ்ட்ரீட்டில் (Wall Street) தன் வசம் ஏராளமாக இருந்த யூனியன் பசிபிக் (Union Pacific) என்னும் தனியார் ரயில் நிறுவனப் பங்குகளை விற்கப்போனார். நல்ல நிலையில் இருந்த அந்நிறுவனப் பங்குகளை விற்பதற்கு லிவர்மூருக்கு அப்போது எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் வால் ஸ்ட்ரீட் அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி எங்கோ ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு வெறி பிடித்தவரைப்போல் அவர் அன்று அந்தப் பங்குகளை விற்றார்.

இது நடந்த இரு நாட்களுக்குள், ஏப்ரல் 18-ஆம் நாள் சான் பிரான்சிஸ்கோ (San Fransisco) நகரில் ஒரு மிகப் பெரிய நில அதிர்வு ஏற்பட்டு தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு, யூனியன் பசிபிக் நிறுவனம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் விளைவாக மற்ற எல்லாப் பங்குதாரர்களும் நொடித்துப் போன நிலையில், லிவர்மூர் மட்டும் அந்தப் பங்குகளை விற்றதனால் 2,50,000 அமெரிக்க டாலர்கள் லாபத்தைச் சம்பாதித்தார். (1906-இல் அது எவ்வளவு பெரிய தொகை என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவும் இயலாது).
 ஹில்டனைப்போல், லிவர்மூரைப்போல் பல தொழிலதிபர்கள் பல நேரங்களில் தாங்கள் பெற்ற அறிவினாலும், மேலாண்மைத் திறத்தினாலும், அனுபவத்தாலும் எடுத்த முடிவுகளைவிட, உள்ளுணர்வினால் உந்தப்பட்டு எடுத்த முடிவுகளின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை மேலாண்மையியல் வல்லுநர்கள் (Experts in Management Sciences) ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற மேலாண்மை நிர்வாகிகள் பலர் தங்களது அறிவு சொல்லும் பாடத்தைவிட, உள்ளுணர்வு (hunch, gut feeling, ESP) சொல்லும் பாடத்தைக் கேட்டே வெற்றி பெறுகிறார்கள் என்பதையும், ஐம்புலன்களின் பாற்பட்டு எழும் தகவல்களைத் தாண்டி, புலன்களுக்குப் புலன்படாத ஆறாவது புலனின் (6th sense) குரலுக்குச் செவிமடுத்தே வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் எண்ணிப்பார்த்த டக்ளஸ் டீன் (Douglas Dean) என்னும் மின்வேதியலாளர் (Electro Chemist) ஒருவரும், ஜான் மைல்ஸ்கி (John Mihalsky) என்னும் தொழிற் பொறியாளர் (Industrial Engineer) ஒருவரும், அமெரிக்காவில் உள்ள நேவார்க் பொறியியல் கல்லூரியில் (Newark College of Engineering) பெரும் பொருட் செலவில் (PSI Communications project) தொடர்ந்து பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.

""பிளெத்ஸிமோக்ராப்'' (Plethsymograph) என்னும் கருவியின் மூலம், இரண்டு வெவ்வேறு அறைகளுக்குள் அமர்ந்திருக்கும் இருவேறு நபர்களுக்குள் புலன்களைத் தாண்டிய தகவல் தொடர்பு இருக்க முடியுமா என்பதற்கான ஆரம்ப கட்ட பரிசோதனைகளைச் செய்த அவர்கள், தங்களது அடுத்தகட்ட முயற்சியில் மிகப் பெரிய தொழில் வல்லுநர்களை ஈடுபடுத்தி அவர்களால் எந்த அளவிற்கு ஒரு கணினியால் உருவாக்கப்பட்ட 100 இலக்கங்களைக் (digits) கொண்ட எண்ணைச் சரியாக யூகிக்க முடிகிறது என்று பரிசோதித்தார்கள்.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளை ""எக்சிக்யூடிவ் இ.எஸ்.பி.'' (Executive ESP) என்னும் தலைப்பில் திரு.டக்ளஸ் டீன் ஒரு நூலாக 1974-இல் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவ்விரு விஞ்ஞானிகளும் கண்ட உண்மை என்னவென்றால், தத்தம் துறைகளில் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்று சாதனை படைத்த முதன்மை நிர்வாக அதிகாரிகள் எல்லாம் பெரும்பாலும் உள்ளுணர்வினால் உந்தப்பட்டே முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதுதான்.

1985-இல் வெளிவந்த ""ஏசியன் வால் ஸ்ட்ரீட் வீக்லி'' (Asian Wall Street Weekly) பத்திரிகையில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகிய ""அறிவியல் தொழில் நுட்ப முகமை'' (Science and Technology Agency) ஒரு சுவாரசியமான குறிப்பை வெளியிட்டது. அதில் ஜப்பானிய அரசாங்கத்தின் ""க்ரியேடிவ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி ப்ரமோஷன் ப்ரொக்ராம்'' (Creative Science and Technology Promotion Programme) திட்டத்தின்கீழ், உயரதிகாரிகளின் ஆன்மிக நடவடிக்கைகளை முறையாகப் படித்துப் பதிவேற்றுவது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சொல்லப்பட்டது.

அப்படியானால் உள்ளுணர்வு (intuition), புலன்களைத் தாண்டிய உணர்வு (ESP) இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாலா, இப்பாலா?

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com