அறிவியலுக்கு அப்பால் 20: குழு இசிவு நோய்

1980-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இங்கிலாந்தில் நாட்டிங்காம்ஷையரில் (Nottinghamshire) ஆஷ்லாண்ட்
அறிவியலுக்கு அப்பால் 20: குழு இசிவு நோய்

1980-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இங்கிலாந்தில் நாட்டிங்காம்ஷையரில் (Nottinghamshire) ஆஷ்லாண்ட் (Ashland) என்னும் ஊரில் கிர்க்பி (Kirkby) என்னுமிடத்தில் குழந்தைகளுக்காக பேண்ட் வாத்திய இசைக்குழுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் வெகு உற்சாகத்துடன் அங்கு நடந்த ஊர்வலத்திலும் போட்டிகளிலும் பங்குபெற வந்திருந்தனர். அப்போது, திடீரென்று ஒரு சிறுமிக்குக் கண்களில் எரிச்சலும், வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. உடனே அடுக்கடுக்காக ஒரு தொற்று நோயைப்போல் மற்ற குழந்தைகளுக்கும் அது பரவி, கிட்டத்தட்ட 300 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்தக் குழந்தைகள் அனைவரும் தங்களுடைய இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்தத் திடீர் தாக்குதலுக்கான காரணத்தை பள்ளி நிர்வாகம் எவ்வளவோ ஆராய்ந்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் தெற்கு புது தில்லியில் உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அதற்கு நிவேதனம் செய்யப்பட்ட பாலைத் தும்பிக்கையின் மூலம் உறிஞ்சி விட்டதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அந்தச் செய்தி பரவத் தொடங்கியதும், நாடெங்கும் பல கோயில்களில் விநாயகர் சிலைகள் அவற்றின் அருகே சிறு கரண்டியில் காட்டப்பட்ட பாலைத் தும்பிக்கையின் வழியாக உறிஞ்சியதாகப் பக்தர்கள் பரவசத்துடன் கொண்டாடத் தொடங்கினர். 

இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஒரு சில அறிவியலாளர்கள் ஒரு பரிசோதனைக் கூடத்தில் விநாயகர் சிலையின் அருகே பாலை எடுத்துக்கொண்டு போய் காட்டியவுடன் அந்தச் சிலையும் பாலை அருந்தத் தொடங்கியது. அதன்பின் அறிவியலாளர்கள் இச்சம்பவத்திற்கு அளித்த முதல் விளக்கம் என்னவென்றால் விநாயகர் சிலையில் உள்ள மிக நுண்ணிய மெல்லிய குழாய்களின் வழியாகத் "தந்துகி எழுகை' முறையின் மூலம் (Capillary rise method) இந்தப் பால் உள்ளே இழுக்கப்பட்டது என்பதாகும். ஆனால், அன்று மாலைக்குள் அறிவியலாளர்களின் இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் அருந்துவதை நிறுத்திக் கொண்டன.

ஓர் இடத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு பல்வேறு இடங்களில் பிரதிபலிப்பாகி, பல்கிப் பெருகி ஒரே மாதிரியான விளைவுகளை எப்படி ஏற்படுத்தும் என்னும் கேள்விக்கும், திடீரென்று அந்த விளைவுகள் எப்படித் தாமாகவே நின்று போகும் என்னும் கேள்விக்கும், இயற்பியல் (Physics) சார்ந்த "தந்துகி எழுகை' முறையின் (Capillary rise method)விளக்கம் முழுமையானதாக அமையாமல் போனது. காரணம் தந்துகி எழுகை முறையில் இது நடக்குமானால் ஏன் இதற்கு முன் அப்படி நடக்கவில்லை என்ற கேள்விக்கும், அன்று மாலைக்குப் பிறகு ஏன் அது தொடரவில்லை என்பதற்கும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை.

உலகங்களின் போர் (War of world) என்னும் வானொலித் தொடர் கொலம்பியா ஒலிபரப்பு நிறுவனத்தால் (Columbia Broadcasting System)  1938 அக்டோபர் மாதம் ஒலிபரப்பப்பட்ட போது, அதைக் கேட்ட வானொலி நேயர்கள் இரண்டாம் உலகப் போருக்கான நிகழ்வுகளுக்கும,  கற்பனையில் உருவான அந்தத் தொடரில் வரும் சம்பவங்களுக்கும் வேறுபாடு காண முடியாமல் ஊரை விட்டு ஓடத் தொடங்கினார்கள். அப்படி ஓடியவர்களில் ஒரு சிலர் விஷவாயு ஒன்று தங்களைத் தாக்கியதாகக் கூறிய போது நூற்றுக்கணக்கான நகரவாசிகள் தங்களுக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். ஆனால், அன்று மாலைக்குள் அந்த பரபரப்பு அடங்கி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய போது அந்த ஊரின் எந்தப் பக்கத்தையும் விஷவாயு தாக்கவில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள பிபிசி (BBC) செய்தி நிறுவனம் 18 ஏப்ரல் 2016 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அச்செய்தியில், மலேசியாவில் உள்ள கொடபாரு (Kotabharu) என்னும் நகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பல மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், அதில் பயந்து போன பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு நீண்ட விடுமுறையை அளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், சிறிது நாட்களுக்குப் பிறகு அந்தப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட போது எந்தக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த மாற்றமோ, ஆன்மிக அனுபவமோ ஏற்படவில்லை.

மேற்கூறிய பல நிகழ்வுகளில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால் இந்த நிகழ்வுகளுக்கு எந்தப் புறக்காரணிகளும் (extraneous causes) இல்லை என்பதே. ஆடிவெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் பலவிதமான அம்மன் கோவில் திருவிழாக்களிலும் ஊர்வலமாகப் பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு போகும்போதும், கூழ் காய்ச்சிப் படையலிடும்போதும், பலருக்கு ஆவேசம் வருவதை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். இதுபோன்ற நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் இடங்களில் ஒரு பெண்மணியிடம் தொடங்கும் விசித்திரமான இந்தப்போக்கு, கடகடவென்று பல பெண்மணிகளிடம் பரவுவதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எந்தவிதமான புறக்காரணிகளும் இருப்பதில்லை என்பதை அறிவியலாளர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

இப்படி எந்தப் புறக்காரணிகளும் இல்லாமல் ஒரு கூட்டத்தினரின் கற்பனையில் உருவாகி அதை அவர்கள் உண்மை என்று நம்புகிற அளவுக்கு அவர்களது உடலில் மாற்றங்களைக் கொண்டு வரும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு உளவியல் மற்றும் சமூகவியல் அறிஞர்கள் மாஸ் ஹிஸ்டீரியா (Mass hysteria) என்று பெயரிட்டனர்.

ஹிஸ்டீரியா என்ற சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதி, இசிவு நோய் என்னும் மொழி பெயர்ப்பைக் கொடுக்கிறது. ஆனால், இதில் அறிவியலாளர்களுக்குப் புரியாத ஒரு புதிர் என்னவென்றால் இசிவு நோயினால் ஏற்படும் பல நிகழ்வுகள் கற்பனையோடும் மனதளவிலும் நின்று விடுவதாக இல்லை. கிர்க்பி (Kirkby) நகரில் பள்ளி மாணவர்களுக்கு கண்களில் ஏற்பட்ட எரிச்சலும், வாந்தியும், மயக்கமும் கற்பனையோடு நில்லாமல் உண்மையாக நடந்தேறியது. ஒருவரது உள்ளத்தில் ஏற்படும் இவ்விதமான நோய் அல்லது தாக்கம், அவரது உடலில் ஒரு சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது நவீன மருத்துவத்தால் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ஆனால், ஒருவரது உள்ளத்தில் ஏற்படும் இவ்விதமான நோய் அல்லது தாக்கம், அவரது உடலைத் தாண்டி பல்வேறு மனங்களிலும், உடல்களிலும் எப்படி ஒரே சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கும், ஒரு சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளத்தின் ஆட்சிமை இல்லாமலேயே அந்த உடல்கள் எப்படி அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுகின்றன என்ற கேள்விக்கும் அறிவியலால் இன்று வரை விடை காண முடியவில்லை.

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com