சிலுவையும் புனிதவெள்ளியும்

"பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே‘‘
சிலுவையும் புனிதவெள்ளியும்

புனித வெள்ளி, நல்ல வெள்ளி என்று போற்றும் நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஜீவனை விட்ட நாள் ஆகும். பொதுவாக சிலுவையில் அறையப்பட்டவர்கள் கொடூர வேதனையினாலும் ரத்தம் சிந்துதலினாலும் காயங்கள் ஏற்படுத்தும் வலியினாலும் விரைவில் இறந்துவிடுவர். ஆயினும் பலர் இரண்டு மூன்று நாள்களுக்கு அவஸ்தைப் பட்டபின்னர் மரிப்பார்கள்.

தேவ கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்க பரமபிதா தம் மைந்தர் இயேசுவை சிலுவையில் பாவ பரிகாரியாக ஒப்புக் கொடுத்தார்.

தேவ தூசனம் செய்தார் எனவே அவர் கொல்லப்பட வேண்டும் என ஆசாரியர்கள் மற்றும் அவர்களால் ஏவப்பட்ட யூதர்களும்
இயேசுவை வியாழன் இரவு சிறைப் பிடித்து ரோமின் ஆட்சியாளர் பிலாத்துவிடம் தண்டிக்க அழைத்துச் சென்றனர். பிலாத்து ரோம ஆட்சியர் ஏரோதுவின் ஒப்புதலுடன் யூத மக்களின் நெறுக்குதலுக்குப் பயந்து, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார்.

இயேசு மரத்தால் ஆன சிலுவையை எருசலேம் வீதிகளில் சுமந்து கொண்டு செல்ல, கொல்கொதா என்னும் மேடான இடத்தில் இரண்டு கள்வருடன் சிலுவையில் கால்களிலும் கைகளிலும் ஆணியால் அடித்தனர். வெகு யூதர்கள் இயேசுவை பரிகாசம் செய்தனர்.

இயேசு சிலுவையில் தொங்கியபடி, மனிதர்கள் தெய்வத்துக்கு செய்யும் கொடுமையை கண்டு தம் பிதாவிடம் வேண்டினார். அவ்வாறு சிலுவையில் இயேசு மொழிந்த திருவார்த்தைகள் புனிதவெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள் தியானிப்பது வழக்கம்.
இயேசு மொழிந்த ஏழு வார்த்தைகள்:
1. "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே‘‘ - லுக்கா: 23:34.
இயேசு ஆண்டவர் தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் தம்மை
பரிகசிக்கிற மக்களுக்கு தம் தந்தையாம் கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்.
2. "இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்'' -லுக்கா:23:43.
தம்மிடம் வேண்டிய கள்ளனுக்கு இயேசு ஆண்டவர் அவனுக்கு பரதீசை அளிக்கிறார்.
3. "ஸ்திரியே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்த சீடனை நோக்கி அதோ உன் தாய்'' -யோவான்:19,26,27.
இயேசு ஆண்டவர் தம் தாய்க்கு தம் சீடர் மூலம் அடைக்கலம் கொடுத்து, மகனுக்குரிய தம் கடமையை செய்கின்றார்.
4. "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?‘‘ மாற்கு 14:34.
வலியும் வேதனையும் உலகத்தினரின் பாவம் சுமத்தப்பட்ட தம் பிதா தம் கைவிட்ட நிலையில் இயேசு ஆண்டவர் தம் தந்தையின் பரிவு வேண்டுகின்றார்.
5. "தாகமாய் இருக்கிறேன்'' - யோவான்:19:28.
உடல் வாட, உதிரம் யாவும் வடிய, வலி மேலிட, பருக தண்ணீர் கேட்டு இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவரிடமே இறைஞ்சுகிறார்.
6. "முடிந்தது'' -யோவான்: 19:30.
தம் பலியால் ரத்தம் சிந்துதலால் மனிதருக்கு மீட்பு பெற்ற தம் உலகத்திற்கு வந்த நோக்கம் முடிந்தது என்று இயேசு சொன்னார்.
7. "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' - லுக்கா:23:46.
இயேசு சிலுவையில் தம் இன்னுயிரை தம் பிதாவின் கரங்களில் ஒப்புவிக்கிறார்.
பாவத்தின் சம்பளம் மரணம். எனவே, இயேசு சிலுவையில் பாவ நிவாரண பலியாகி நம் பாவம் அனைத்தையும் நீக்கி நம்மை மீட்கவே மரித்து உயிர்த்தார் என விசுவாசிப்பவர்கள் அனைவரையும் இயேசு இரட்சிப்பார். இப்புனித வெள்ளி தியானம் யாவரையும் மீட்டு அருளட்டும்.
- தே. பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com