சீதையைத் தேடி வந்த ராகவன்!

சீதையைத் தேடி வந்த ராகவன்!

அது வீசஷாரண்யம் எனும் காட்டுப்பகுதி. அங்குள்ள நதிக்கரையில் சாலிஹோத்ர முனிவர் பர்ணசாலை அமைத்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார்

அது வீசஷாரண்யம் எனும் காட்டுப்பகுதி. அங்குள்ள நதிக்கரையில் சாலிஹோத்ர முனிவர் பர்ணசாலை அமைத்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். ஒரு நாள், முதியவர் ஒருவர் அவ்விடம் வந்து யாசகம் கேட்டு நின்றார். சாலிஹோத்ர முனிவரும் தான் உண்ணும் உணவில் ஒரு பாதியை அம்முதியவருக்கு அளித்தார். முதியவர் மேலும் உணவு கேட்க, தன்னுடைய பங்கையும் அவருக்கு அளித்தார் முனிவர். உண்ட களைப்பு தீர, முதியவர் சாலிஹோத்ரரிடம்"நான் சயனிக்க எவ்வுள்?' என்று வினவ, அவரும் தன் பர்ணசாலையை காட்டி "இவ்வுள்' என்று விண்ணப்பம் செய்தார். அடுத்தகணமே முதியவர் இறைவனாக மாறி திவ்யமங்கள சொரூபியாய் தெற்கே திருமுகம் வைத்து சயனிக்க மிகவும் ஆச்சர்யமடைந்த சாலிஹோத்ரர் திருமாலின் திருக்கோலத்தைக் கண்டு பரவசமடைந்து துதித்து அவரிடம் எப்போதும் இந்தக் கோலத்திலேயே சேவை அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

திருமாலும் அதற்கிசைந்து சயனகோலத்துடன் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அதுவே நாம் இன்றும் கண்டு வழிபடும் தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழும் திருவள்ளூரில் மூலமூர்த்தியாக சயனகோலத்தில் மகரிஷியின் சிரசில் கை வைத்தபடி சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி. திருஎவ்வுள் என்ற பெயரே மருவி இன்று திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் இத்தலத்து பெருமானை போற்றியுள்ளனர். ஹ்ருத்தாபாபநாச புஷ்கரணியில் தீர்த்தமாடி வீரராகவனையும், விஜயகோடி விமானத்தையும் சேவிப்பதனால் எல்லா நோய்களும் பூண்டோடு அழியுமாதலால் பகவானுக்கு வைத்யவீரராகவன் என்ற திருநாமமும் உண்டு. ராமலிங்க அடிகளார் தன் தீராத வயிற்றுவலியை நீக்கிய இப்பெருமாள் பேரில் போற்றிப் பஞ்சகம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஈக்காடு என்னும் பகுதியின் புராணப் பெயர் தர்மúஸனாபுரம் என்பதாகும்.

அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த தர்மúஸன மகராஜன், ராணி கெüதமி தம்பதிகளுக்கு பிறந்தவள் வசுமதி என்னும் பெண்.

தக்க வயதில் நங்கைப் பருவம் எய்தி அதிரூப செüந்தரியம் உடைய மங்கையாய் வளர்ந்து ஒரு நாள் ஹிருத்தாபநாசினியின் நதிக்கரையில் உள்ள நந்தவனத்தில் தன் சேடிகளுடன் வந்து மலர் கொய்து கொண்டிருக்கும்போது ஸ்ரீவீரராகவப் பெருமாள் வெகு அழகான ராஜகுமாரனாக அம்மங்கையின் முன் தோன்றினார். மகாலட்சுமி தேவியே வசுமதியாக அவதரித்திருக்கிறாள் என்று மனதில் நிச்சயித்து அம்மங்கையை மணம் கொள்ள விரும்பினார். நந்தவனத்தில் நடந்தவற்றை கேள்விப்பட்ட மகாராஜா அவ்விடம் வந்து ராஜகுமாரனைப் பற்றி விவரங்களை அறிய முற்பட்டார். ராஜகுமாரன் தன்னைப் பற்றி எதையையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வீரராகவ ஸ்வாமி சந்நிதியில், திருமணத்திற்குப்பின் அரசகுமாரியுடன் சதாசர்வகாலமும் அவ்விடத்திலேயே வசிப்பதாக சத்தியம் செய்து கொடுத்தார்.

தங்கள் குலதெய்வமான வீரராகவப் பெருமாள் முன்னிலையில் திருமணத்திற்கு சம்மதித்த மகாராஜாவும் வசுமதியை ராஜகுமாரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த திருமணத் தம்பதிகள் சயனகோலத்தில் இருக்கும் பெருமாளுடன் (சேஷதல்பத்தின் மேலேறி) ஐக்கியமாகி மறைந்தனர்.

அப்போதுதான் அனைவரும் மணவாளனாக வந்தது வீரராகவப் பெருமாள் என்றும், மஹாலட்சுமித் தாயார்தான் வசுமதியாக அவதரித்துள்ளார் என்றும் எண்ணி அறிந்து பரவசம் கொண்டனர். மேலும் ஸ்ரீராமபிரான் அசுவமேதயாகம் செய்த சமயம் சுவர்ண சீதையாயிருந்து யாகபூர்த்தி செய்தமையால் அவளே இங்கு வசுமதியாகிற கனகவல்லியாகத் தோன்றினாள் என்ற ஐதீகமும் நிலவி வருகின்றது. இன்றும் தை மாத திருக்கல்யாண பிரம்மோத்ஸவத்தின்போது ஒரு நாள் வீரராகவப் பெருமாள் கருடவாகனத்தில் ஈக்காடு கிராமத்தில் எழுந்தருளுகின்றார்.

தற்போது வசுமதி தாயார் அவதரித்த ஈக்காடு கிராமத்தில் உள்ள கல்யாண வீரராகவ பெருமாள் கோயில் சிதிலமடைந்து திருப்பணியை எதிர் நோக்கியுள்ளது. சம்ப்ரோக்ஷணம் நடந்து பல வருடங்கள் ஆகியுள்ளன. இந்தப் பணியைச் சீரிய முறையில் நிறைவேற்ற அகோபிலமடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் அருளாசியுடன் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் ஆஸ்திக அன்பர்கள் துணை கொண்டு ஸ்ரீவசுமதி, கனகவல்லி சமேத ஸ்ரீகல்யாண வீரராகவப் பெருமாள் சேவாசபா டிரஸ்ட் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமால் அடியார்கள் எங்கிருந்தாலும் அவசியம் இத்திருப்பணிக்கு உதவலாம்.
தொடர்புக்கு: 94938 33843 / 044 - 2764 5339.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com