அவதாரம்! குறுந்தொடர் 11

கிருதயுகத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு ஆதிசேஷனாகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரானின் தம்பி இலக்குவனாகவும் துவாபரயுகத்தில் கிருஷ்ணனின் மூத்த சகோதரர் பலராமனாகவும்
அவதாரம்! குறுந்தொடர் 11

குறுந்தொடர்: 11
கிருதயுகத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு ஆதிசேஷனாகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரானின் தம்பி இலக்குவனாகவும் துவாபரயுகத்தில் கிருஷ்ணனின் மூத்த சகோதரர் பலராமனாகவும் கலியுகத்தில் உலகைத் திருத்தி பக்தி வழியிலும் சரணாகதி மார்க்கத்தையும் காட்டி உலகை உய்விக்க ஸ்ரீ ராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். ஆளவந்தார் வழிகாட்டியபடி அவரது திருக்குமாரர் திருவரங்கப் பெருமாளரையரால் காஞ்சியிலிருந்து கி.பி. 1056 ஆம் ஆண்டில் தாசரதி என்னும் முதலியாண்டான், கூரத்தாழ்வான் உடன்வர, ராமானுஜர் ஸ்ரீரங்கம் சென்று கோயில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

கோயில் பொறுப்பேற்றது முதல், படிப்படியாக சரிப்படுத்தி முறைப்படுத்தும் பணியையும் மேற்கொண்டார். கோவணர், கொடவர், கொடுவாள் எடுப்பார், பாடுவார், தழை எடுப்பார் என்ற ஐந்து கொத்துப் பணியாளர்களால் கைங்கரியம் நடந்தது. ராமானுஜர் அந்தணர் முதல் அனைவரையும் சேர்த்து அதனைப் பத்தாக மாற்றினார். மேலும் ஏகாங்கிகள் சாத்தாத முதலிகள் போன்ற வைணவ கைங்கரியக்காரர்களையும் நியமித்து கோயில் பணிகளையும் திறம்பட நடக்க ஏற்பாடு செய்தார். இதுபோன்று பல சீர்திருத்தங்கள் கைக்கொண்டார். இவரது நடவடிக்கைகளில் வெறுப்புற்ற சில பணியாளர்கள் அவரை விஷமிட்டுக் கொல்லவும் முயன்றனர். ஆனால் வைணவம் செய்த நற்பேறால் அந்த விபத்திலிருந்து தப்பினார். மன்னரின் செய்கையால் மைசூர்நாடு சென்று 12 ஆண்டுகள் கழித்து அங்கும் நற்செயல்களையே செய்து திரும்பினார்.

மைசூர் மாநிலத்திலிருந்து தமிழகம் மீண்ட எம்பெருமானார் தனது நூறாவது வயதில் தளர்ந்திருந்தார். தாம் ஸ்ரீரங்கம் மீள்வதற்குள் தமக்கு ஆசார்யர்களாகவும் ஆளவந்தார் சீடர்களுமான திருக்கோட்டியூர் நம்பி, திருமலையாண்டான், திருவரங்கப்பெருமாளரையர்,  திருக்கச்சி நம்பி, திருமலை நம்பி போன்ற பெரியவர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டனர். பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்ற வயதான சீடர்களும் வைகுந்தமடைந்து விட்டனர். தமக்குப்பின் தரிசன நிர்வாக ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணியில் எம்பெருமானாரின் திருவுள்ளம் திரும்பியது. 

தமது பல்லாயிரக்கணக்கான சீடர்களுள் எழுபத்துநான்கு பேரைத் தேர்ந்தெடுத்தார். உடையவரின் சீடர்களுள் பதினோராயிரம் பேர் உபவீதம் (பூணூல்) அணிந்தவர்கள்; பன்னீராயிரம் பேர் பூணூல் அணியாதவர்கள்; பன்னீராயிரம் பேர் பாகவத்தொண்டர்கள்; தவிர, பல்லாயிரம் பேர் அவர்களைச் சார்ந்து நின்றனர் என்று படிப்படியாக கணக்குச் சொல்லப்படுகிறது. 

கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் நடாதூராழ்வானும் பட்டர் வர்க்கமும் ஸ்ரீபாஷ்யத்துக்குத் துணை நிற்பர் என முடிவு செய்தார். அருளாளப்பெருமாள் எம்பெருமானாரை ஆராதனப் பெருமாளுக்குப் பொறுப்பு ஆக்கினார். கிடாம்பி, பெருமாள் ஆச்சான் இருவரும் மடைப்பள்ளியைக் கவனிப்பர் என எழுதா நெறிமுறை உருவாயிற்று. இன்னும் வடுகநம்பி எண்ணைக்காப்பு சாற்றுவர், கோமடத்துச் சிறியாழ்வான், கலசப்பானை, பாதரசேஷ எடுப்பர், பிள்ளையுறங்காவில்லி கருவூலம் நோக்குவர், இப்படி பல பணிகளை பலர் விரும்பிச் செய்தனர்.

எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்து அருளாட்சி புரிந்தார் ராமானுஜர். அக்காலத்துக் குறுநிலமன்னர் சிலரும் ராமானுஜருக்கு ஆதரவாக விளங்கினர். வேற்றுமைகளைக் கடந்து உயர்குலம் தாழ்குலம் இல்லாத பாகவத சமுதாயம் ஒன்றை உருவாக்கி ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுந்த வாழ்வை உண்டாக்கினார் ராமானுஜர். ஆயினும் மண்ணுலகின் இயல்பை யாரும் மாற்ற இயலாது என்பதனால் இடையூறுகள் பல நேர்ந்தன. 

கோயில் நிர்வாகம் சீராக நடைபெறவும் ஸ்ரீரங்கச் செல்வம் சிந்தாமலும் மங்காமலும் பொங்கும்படி ஆராய்ந்து திட்டமிட்டு ஆற்றலும் ஒழுக்கமும் உள்ளவர்களிடம் கைங்கர்யப்பணியை ஒப்படைத்தார்.  கோயிலைச் சுற்றி ஊர் அமைப்பிலும் பல உயரிய ஏற்பாடுகளைக் கண்டு என்றும் எவரும் வியக்கும் வண்ணம், பலவகைத் தொழிலாளர்களுக்கும் அரங்கன் முற்றத்தில் இடமளித்தார். மடத்தில் இலக்கண, வேதஆராய்ச்சி, வேதம்-திவ்யபிரபந்தம் ஆகிய உபய வேதாந்தங்கள் சிறக்கவும் ஓதவும் சமய நூல்கள், சம்பிரதாய கிரந்தங்கள் ஆய்வும் நடக்க வழி செய்திருந்தார். 

மைசூரிலிருந்து திரும்பி வந்து இருபது ஆண்டுகளே ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தாலும் பிற்கால வைணவத்தின் வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படைகளை நன்கு அமைத்துவிட்டார். கர்நாடகமாநிலம், திருநாராயணபுரம் என்கிற மேல்கோட்டையில் உடையவர் தன் சக்தியை அவரோகணித்து "தமர் உகந்த திருமேனி'யை தொட்டு ஆசி வழங்கி நிறுவியிருந்தார். இந்தச்சிலை ராமானுஜர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. 

"தானுகந்ததிருமேனி' இரண்டாம் திருமேனி ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது. இதன் பொருள் ராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர்பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோயில் வழிபாட்டில் உள்ளது. 120 ஆண்டுகள் ஞானத்துடன் வாழ்ந்த ஆன்மிகவாதியின் வடிவத்தில் இதனை தரிசிக்கலாம். 

"தானான திருமேனி' மூன்றாவது திருமேனி ஆகும். ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனி பூதஉடல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராமானுஜர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில் ஜீயர் மடத்தில்  திருமாலின் சாயுஜ்ய பதவியை அடைந்தார். அவர் பரமபதப் பதவியடைந்த உடன் அவரது சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் துடித்தனர்.

"தர்மோ நஷ்ட'' (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்துக்களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெயையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தமநம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தமநம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி பிறகு எண்ணெயை ராமானுஜரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் "பிரம்மமேத ஸம்ஸ்காரம்' என்பார்கள்.

பாரததேசமெங்கும் சுற்றித்திரிந்த ராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் மந்திரங்களை ஓத, பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடைசூழ, இறுதிப் பயண ஊர்வலம் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமையில் எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர, ராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோயில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் சென்றனர். மக்கள் திரளின் நடுவே மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் கடவுளர்களின் திருவீதி புறப்பாடு போல் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்கள். அரங்கன் கோயில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட, ராமானுஜர் இறுதி ஊர்வலம் கோயில் வாயிலை அடைந்தபோது, "தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்'' என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.  தொடர்ந்து அரங்கன், "ராமானுஜன் என்தன் மாநிதி'' என்றும்; "ராமானுஜன் என்தன் சேமவைப்பு'' என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். ராமனுஜரின் பூதவுடல் திருக்கோயில் ஆவரணத்துக்குள்ளேயே, தன் சத்தான யதிராஜரை யதிஸம்ஸ்கார விதியின்படியும் வைணவ மரபுப்படியும் பள்ளிப்படுத்தினர். அந்த இடம்தான் தற்போதைய உடையவர் சந்நிதி. 

1056 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் மிதித்த திருவடி திருவரங்கத்தின் செல்வத்தை மட்டுமா திருத்தியது. உலக மாந்தர் அனைவரும் உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி என்ற நம்பிக்கையையும் சொல்லி நம்மையும் திருத்தியது. 
(நிறைவு) 
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com