மங்கலம் தரும் மங்கநல்லூர் ஸ்ரீ அகத்தீஸ்வரமுடையார்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகே பிருதூர் வழியாக சென்றால் 4 கி. மீ. தொலைவில் மங்கலம் பொங்கும் மங்கநல்லூர் என்ற ஊர் அமைந்துள்ளது.
மங்கலம் தரும் மங்கநல்லூர் ஸ்ரீ அகத்தீஸ்வரமுடையார்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகே பிருதூர் வழியாக சென்றால் 4 கி. மீ. தொலைவில் மங்கலம் பொங்கும் மங்கநல்லூர் என்ற ஊர் அமைந்துள்ளது.  இவ்வூரின் தென்பகுதியில் வானமே கூரையாக அமைய அழகிய சிவலிங்கத்திருமேனி  வழிபாட்டில் உள்ளது.  முன்பு கோயில் இருந்து அழிந்ததற்கான சான்றாக சிதைந்த செங்கற்கட்டட பகுதிகள் காணப்படுகின்றன.  கோயிலைச் சுற்றி சிறிய மேடான பகுதியாக விளங்குகிறது.  கோயிலுக்கு எதிரில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.  அவருக்கு பின்புறம் கொடிமரம் இருந்ததற்கான அடையாளமாக வேலைப்பாடு மிக்க கற்கள் காணப்படுகின்றன.  

ஒரு காலத்தில் இக்கோயிலில் சிறப்பாக வழிபாடுகள் நடந்ததை இவை மெüனமாய் எடுத்துக் கூறுகின்றன.  கோயிலின் வடக்குப் பகுதியில் பூமியில் பாதி புதைந்த நிலையில், அமர்ந்த கோலத்தில் சண்டிகேசுவரர் காணப்படுகிறார்.  பின்னமான உடைந்த நிலையில் தட்சிணாமூர்த்தி திருமேனியும் உள்ளது.

முன்பு,  இக்கோயில் பரிவார ஆலயங்களுடன் இருந்ததற்கு அடையாளமாக விளங்கிய விநாயகர் திருமேனி இவ்வூரில் உள்ள முருகன் கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது.

இக்கோயிலில் சிறப்புடன் வழிபாடுகள் நடைபெற்றதற்கு சான்றாக வரலாற்றுச்சிறப்பு மிக்க கல்வெட்டு பொறிக்கப்பட்ட மூன்று பலகை கற்கள் இவ்வூரில் காணப்படுகிறது.  ஒரு கல்வெட்டில் "குலோத்துங்க சோழதேவர்க்கு' என்றும்; மற்றொன்றில் "திரிபுவன சக்கரவர்த்தி' என்றும்  துவக்கமாக காணப்படுகிறது. 

தற்பொழுது மங்கநல்லூர் எனப்படும் இவ்வூர் கல்வெட்டுகளில் மங்கல நல்லூர் எனப்பெயரிட்டு அழைக்கப்படுவதைக் காண்கிறோம். "வெண்குன்றக்கோட்டத்து, மருதாடு நாட்டு, மங்கலநல்லூர் திருஅகத்தீசுவரமுடையார்' என்று கல்வெட்டு குறிப்பதால் இறைவனது பெயர் "திருஅகத்தீசுவரமுடையார்' என்பதை அறியமுடிகிறது.

இத்திருக்கோயிலில் விளக்கு எரிக்கவும், சந்தி விளக்கு எரிக்கவும் அருமொழி அருளாளன் என்பவர் தானம் அளித்த செய்தி காணப்படுகிறது.

எனவே இக்கோயில் பிற்கால சோழர்காலத்தில் சிறப்புடன் விளங்கியிருந்ததை அறியமுடிகிறது.

தற்பொழுது சிவபெருமானுக்கு தகர கொட்டகை அமைத்து தினமும் வழிபாடு நடைபெறுகின்றது. மேலும் பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகளை ஊர் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பை உணர்ந்த மக்கள் அவற்றை கோயில் அருகில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

சுமார், 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, சிறப்பான வழிபாட்டில் இருந்த மங்கலநல்லூர் அகத்தீசுவரமுடையார் கோயிலுக்கு திருப்பணி மேற்கொள்ள ஊர்மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.  பழைய கோயிலை புதுப்பித்து வழிபாட்டிற்கு கொண்டுவருவது சாலச்சிறந்தது என  "ஸ்காந்த மகாபுராணம்' கூறுகிறது.  

இக்கோயிலைத் திருப்பணி செய்ய தெய்வப்பிரச்சன்னம் ஊர் மக்களால் பார்க்கப்பட்டது.  அப்பொழுது இக்கோயில் முன்பு கற்கோயிலாக இருந்து பின்னர் செங்கற்கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டதுடன் சுமார்,  500 ஆண்டுகளாக  வழிபாடு இல்லாமல் இருந்ததும் அறியப்பட்டது. 

மேலும் இங்கு, அம்பாளுக்கு  "கொடியிடைநாயகி' என்ற பெயருடன் வழிபாடுகள் நடைபெற்றன என்பதும் அறியப்பட்டது.

இக்கோயிலில் வழிபட, மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.  மேலும் குடும்பத்தில் சொத்து பிரச்னை இருந்தால் அதுவும் நீங்கும் என அறியப்பட்டது.  குலதெய்வ சாபமும் இங்கு வழிபட்டால் நீங்கும்.

ஆகஸ்ட் -19, சனிக்கிழமை, பிரதோஷ நன்னாளில் இவ்வூருக்கு பெருந்திரளாக பக்தர்கள் பங்கேற்று கூட்டுவழிபாடு நடத்தும்படி ஊர்மக்கள் விண்ணப்பிக்கின்றனர். மங்கலம் பொங்கும் மங்கநல்லூர் திருக்கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு இறையருள்பெறலாம்.  
தொடர்புக்கு : 98841 58841 / 90257 01419.
- கி. ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com