மூவருமான முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் கடல் கொஞ்சும் படைவீடாகும்.
மூவருமான முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் கடல் கொஞ்சும் படைவீடாகும்.  புராண வரலாற்றின்படி தனது தந்தை சிவபெருமானின் ஐந்து திரு முகங்களையும் ஐந்து சிவலிங்கங்களாக ஆக்கி கடற்கரையில் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து தானே தினமும் தாமரை மலர்கொண்டு பூஜித்தார் முருகப்பெருமான்.  

ஒரு நாள், தேவர்கள் அனைவரும் வந்து "முருகப்பெருமானே..'' என்று காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க நின்று அழைக்கும்போது அப்படியே பூஜைக்காக எடுத்த தாமரை மலருடன் திரும்பி தேவர்களுக்கு காட்சி தந்த தலம் திருச்செந்தூர் ஆகும்.  

ஏனைய தலங்களில் எல்லாம் கையில் வேலுடனோ அல்லது தண்டாயுதத்துடனோ திகழ, இங்கு மட்டும் வலக்கையில் தாமரை மலருடன் காட்சி தருகின்றார் முருகப்பெருமான்.  திருமகளின் இருப்பிடமான தாமரை மலர் கரத்தில் இருப்பதால் பதினாறு செல்வங்களுடன் எதனை வேண்டி நின்றாலும் அதனை அக்கணமே அருளும் மூர்த்தியாக செந்திலாண்டவன் திகழ்கின்றார்.  

சூரபதுமனைக் கொல்லாமல் அவன் ஆணவத்தினை மட்டும் அழித்து சேவலாகவும் (கொடி), மயிலாகவும் (வாகனம்) மாற்றியருளினார்.  இத்தலம் குரு ஸ்தலமாகவும் விளங்குகின்றது.  

ஆதிசங்கரரும், குமரகுருபரரும் வழிபட்ட பெருமையுடையது; அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.

அதிசயம் ஆயிரமாயிரம் அருளும் செந்திலாண்டவருக்கு கந்தர் சஷ்டி விழாத் தவிர, ஆவணி, மாசி இரு மாதங்களிலும் பிரம்மோற்சவம் நடை
பெறுகின்றது.  இந்த உற்சவத்தின்போது 7ஆம் நாள் முருகப்பெருமான் முழுவதுமாக சிவப்பு சார்த்தி (அதாவது ஆடைகள், அணிகலன்கள், மாலைகள் என எல்லாமே சிவப்புதான்) சிவபெருமானாகக் காட்சி தருகின்றார்.  

எட்டாம் திருநாள் காலையில் முழுவதுமாக வெள்ளை சார்த்தி பிரம்மதேவராகவும்; அன்று மாலையில் முழுவதுமாக பச்சை சார்த்தி திருமாலாகவும் காட்சி தருகின்றார்.  காக்கும் கடவுள் திருமால் என்பதால் பச்சை சார்த்துதலைக் காணக் கூட்டம் அலைபுரண்டோடும்.  அனைவரின் இல்லங்களில் பச்சை சார்த்திய முருகப்பெருமானையே வைத்து வழிபாடு செய்வார்கள்.

சிவபெருமானாக, மஹாவிஷ்ணுவாக, பிரம்ம தேவராகக் காட்சிதரும் முருகப்பெருமான் மூவரும் தானே என்று உலகிற்கு அறிவிக்கும் விதமாக உள்ளது.  மேலும் ராஜஸ, தாமஸ, சத்வ குணங்களின் வெளிப்பாடாகவும் குணங்கடந்த இறைவன் இவ்வாறு காட்சி தருகின்றான் எனவும் பெரியவர்கள் கூறுவார்கள்.

இந்த ஆண்டு, ஆவணித் திருவிழாவில் ஆகஸ்ட்-18, வெள்ளிக்கிழமை சுவாமி சிவப்புப்பட்டு சார்த்தியும்; ஆகஸ்ட்-19, சனிக்கிழமை காலை வெள்ளை சார்த்தியும்;

மதியம் பச்சை சார்த்தியும் அருள்பாலிக்க உள்ளார்.  சகல நலன்களை அள்ளிவழங்கும் திருச்செந்தூரில் நடைபெறும் இந்த அபூர்வ வைபவத்தில் நாமும் கலந்துகொண்டு நலன்கள் யாவையும் பெறுவோம்.

- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com