நாராயண நாமம் நவின்றவன்!

ஆழ்வார்கள் பன்னிருவர் வரிசையில் இறுதியாகச் சொல்லப்படுபவர் திருமங்கையாழ்வார் (இவரது காலம் கி.பி. 776 - 881).
நாராயண நாமம் நவின்றவன்!

ஆழ்வார்கள் பன்னிருவர் வரிசையில் இறுதியாகச் சொல்லப்படுபவர் திருமங்கையாழ்வார் (இவரது காலம் கி.பி. 776 - 881). சோழ நாட்டிலுள்ள திருவாலி திருநகரி (சீர்காழி பூம்புகார் வழி) திவ்ய தேசத்திற்கருகில் உள்ள திருக்குறையலூரில் திருமாலின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாய் ஒரு கார்த்திகை பௌர்ணமியில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் அவதரித்தார்.
 குமுதவல்லி என்ற உத்தம மங்கையை மணக்கும் பொருட்டு திருநறையூர் திருத்தலம் சென்று நம்பி பெருமாள் சந்நிதியில் பஞ்ச சமஸ்காரங்களைப் பெற்று, அம்மங்கைக்கு கொடுத்த வாக்கின் படி ஓராண்டுகாலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அமுது செய்வித்தார். இந்த கைங்கர்யத்திற்காக வரிப்பணத்தை செலவழித்து நாட்டை ஆண்ட மன்னனின் கோபத்திற்கு ஆளாகி சிறை சென்றார்.
 தொடர்ந்து இப்பணி நடத்திவற பொருள் தேவைப்பட்டதால் வழிப்பறியிலும் ஈடுபட்டார். மணக்கோலத்தில் வந்த அந்த திவ்ய தம்பதிகளிடமே தன் கை வரிசையை திருமங்கைமன்னன் காட்ட, பெருமாள் அவருக்கு சங்கு சக்ரதாரியாகக் காட்சியளித்து அவரது செவியில் "ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஓதி மறைந்தார். உடனே ஞானம் கைவரப்பெற்று "வாடினேன் வாடி' என்று தொடங்கி "நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்' என பாசுரங்கள் பிரளயமாக அவரது நாவிலிருந்து வர ஆரம்பித்தன. இன்றும் பங்குனிமாதத்தில் "வேடுபறி உற்சவம்' என்ற பெயரில் இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது.
 இவர் மொத்தம் 1361 பாசுரங்கள் அடங்கிய ஆறு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். பெருமைக்குரிய இந்த ஆழ்வாரின் அவதார உற்சவம் அவரது அவதார ஸ்தலமான திருநகரியில் தற்போது நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 2 ஆம் தேதி (கார்த்திகை கிருத்திகை) அவரது அவதார நன்னாள். அன்று திருக்குறையலூரில் சிறப்பு திருமஞ்சனம் பூஜை, ஹோமம், பாராயணம் முதலிய வைபவங்கள் நடைபெறுகின்றன.
 - ப.ஓ.தேவநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com