அபயம் அளித்து தைரியம் கொடுக்கும் மஹாபைரவர்!

ஸ்ரீ ராமர், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பொருட்டு ரிஷிகளின் ஆலோசனைப்படி ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினார்.
அபயம் அளித்து தைரியம் கொடுக்கும் மஹாபைரவர்!

ஸ்ரீ ராமர், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பொருட்டு ரிஷிகளின் ஆலோசனைப்படி ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினார். அதற்கு அனுமனிடம் காசிக்குச் சென்று ஒரு சுயம்பு லிங்கத்தை எடுத்து வரும்படியாகக் கூறினார். 

அனுமனும் காசிக்குச் சென்றார். எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகத் தெரிய, ஒன்றும் புரியாமல் திகைத்தார். பின்னர், ஒரு கருடன், ஒரு பல்லியின் துணையுடன் சுயம்பு லிங்கத்தை எடுக்க முயன்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பைரவருக்கு கோபம் கொப்பளித்தது. தன் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் தன் அனுமதி பெறாமல் செயலாற்றிய அனுமனிடம் சண்டை இட்டார். 

சண்டை வெகுநாள் நீடித்தது. பிறகு தேவர்களெல்லாம் இருவரையும் சமாதானப் படுத்தினர். அனுமன் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே இவ்வாறு செய்தார் என்பதறிந்து சிவலிங்கத்தை அனுமன் எடுத்துச் செல்ல சம்மதித்து லிங்கத்திற்குக் காவலாக தானும் உடன்சென்றார். பல்லிக்கும் கருடனுக்கும் சாபம் கொடுத்தது தனிக்கதை!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தகட்டூர் என்ற ஊரைக் கண்டதும் பைரவர், அங்கேயே தங்க விரும்பி அமைந்ததாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. 

தகட்டூருக்கு யந்திரபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு ஸ்ரீ பைரவ யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு (தகடு+ ஊர்) அதன் மகிமையாலும் ஸ்ரீ பைரவரின் கடாட்சத்தாலும் மக்களின் எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுகின்றனர். 
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் உக்கிர தெய்வமானானும் புன்சிரிப்புடன் நின்ற கோலத்தில் சிறு குழந்தையாக அருள்பாலிக்கிறார். 
கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் துர்க்கையம்மன் எழுந்தருளி அருள்செய்கின்றனர். கோயிலின் எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது.

பைரவரின் ஜன்ம தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் முன்னும் பின்னுமாக 8 நாள்களுக்கு விசேஷ ஆராதனைகள், ஹோமங்கள் நடைபெறும். இந்த தினங்களில் கோயிலில் கூட்டம் அலைமோதும்! 

மேலும் திங்கள், வெள்ளிக்கிழமைகள் இங்கு வெகு விசேஷம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும் மாலை 5.00 மணி அளவில் மிகச் சிறப்பாக பைரவ யாகம் நடைபெறுகின்றது. 

இங்கு ராவுத்தர் என்ற கோயில் இருக்கின்றது. பைரவரை வணங்கும் பக்தர்கள் ராவுத்தருக்கு பானகம் வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். மற்றுமொரு சிறப்பாக, கோயிலைச் சுற்றி நவக்கிரக மரங்களான, அத்தி, அரசு, புரசு, கருங்காலி, வன்னியும் நவக்கிரக செடிகளான வெள்ளெருக்கு, அருகு, தர்ப்பை, செந்நாயுருவியும் பைரவ பக்தர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வருகின்றது. 

மேலும் ஆலயத்தைச் சுற்றி மஞ்சள் கடம்பு, வன்னி, வேம்பு, பலா, வில்வம், மகிழமரம், ஆகிய மரங்கள் உள்ளன. அந்தந்த கிரகங்களின் கெடுபலன்களால் ஏற்படும் தீமைகளை மேற்கண்ட விருட்சங்களைச் சுற்றி வந்து தீர்த்துக் கொள்ளலாம் என்று பல முனிவர்களால் இயற்றப்பட்ட மிகப் பழைமையான நூலான "விருட்ச சாஸ்திரம்' கூறுகின்றது. பைரவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த நட்சத்திர மரங்களையும் சுற்றி வந்து நன்மை பெறுகின்றனர்.
இவ்வாண்டு, பைரவர் ஜன்ம தின 8 நாள் உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. வரும், 10.12.2017 அன்று இவ்வைபவம் பூர்த்தியாகின்றது.
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலை வழியாக வாய்மேடு சென்று தகட்டூர் பைரவர் கோயிலை சென்றடையலாம். 

தொடர்புக்கு: 97885 18226.
- நா. ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com