திருமணத்தின் பெரும் பயன்கள்!

திருமணத்தின் பெரும் பயன்கள்!

உலகம் படைக்கப்பட்டது மனிதன் வாழ்வதற்கே. மனித உற்பத்தி இல்லையேல் உலகம் படைக்கப்பட்டதின் நோக்கம் ஆக்க வழியில் அமையவே இஸ்லாம் திருமணத்தைத் திருந்திய பொருந்திய வாழ்வை வலியுறுத்துகிறது.

உலகம் படைக்கப்பட்டது மனிதன் வாழ்வதற்கே. மனித உற்பத்தி இல்லையேல் உலகம் படைக்கப்பட்டதின் நோக்கம் ஆக்க வழியில் அமையவே இஸ்லாம் திருமணத்தைத் திருந்திய பொருந்திய வாழ்வை வலியுறுத்துகிறது. தனித்து இருப்பதற்குத் தகுதி உடையவன் இறைவன் மட்டுமே. அல்லாஹ்வின் படைப்புகள் சேர்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவை. திருமணம் புரிவது இறைவனின் கட்டளையை கடைப்பிடிப்பது; நபி வழியில் நடப்பது,. திருமணத்தைக் குறிக்கும் நிக்காஹ் குர்ஆனில் 23 இடங்களில் குறிப்பிடப் படுகிறது. உயிரினங்களை இணை இணையாகப் படைத்து இனப்பெருக்கத்திற்கு ஏற்பாடுகள் செய்பவன் அல்லாஹ். இதனை அறிந்து மனிதர்கள் திருமணம் புரிய வேண்டும். 
திருமணத்தால் உறவு பரந்து பரவி விரிவடையும்; சந்ததிகள் பெருகி பரம்பரைபாங்குறும். "திருமணம் தவறு இழைக்காமல் உங்களைத் தடுக்கிறது'' என்றுரைக்கிறது குர்ஆனின் 4-3 ஆவது வசனம்.பெண்களைப் பேதுற பார்க்கும் தவறைத் திருமணம் தடுப்பதைத் தாஹா நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) தெரிவிப்பதைத் தப்ரானி, ஹாக்கிம் நூல்களில் காணலாம். பார்வையை தாழ்த்தி பாவத்திற்குத் தூண்டும் வெட்கத் தலங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குர்ஆனின் 24- 30 ஆவது வசனம், காம பார்வை நுண்ணசைவு இச்சையில் இசைவை உண்டாக்கி கசப்பான விபச்சாரத்திற்கு வழி வகுக்கும் என்பதாலேயே பார்வையைத் தாழ்த்தி வெட்க தலங்கள் என்னும் பாலியல் உறுப்புகளைப் பாதுகாக்க எச்சரிக்கிறது, திருமணத்தால் பல தீமைகள் தடுக்கப்படுகின்றன. மனித வாழ்வு செம்மையாகிறது.
அநாதைகளைத் திருமணம் செய்து ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுத்த நன்மையோடு அநாதைகளை ஆதரித்து நன்மையும் கிடைக்கும். விதவைகளை திருமணம் செய்தால் விதவைகளுக்கு வாழ்வு கொடுத்த நன்மையையும் பெறலாம். நபிகள் (ஸல்) அவர்களின் நற்றோழர் ஜாபிர்பின் அப்தில்லாஹ் திருமணம் புரிந்த இளைஞரான அவர்கள் விதவையைத் திருமணம் செய்த காரணத்தைக் கேட்டார்கள்.
உஹது போரில் கொல்லப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒன்பது சகோதரிகளை விட்டு இறந்தார்கள். பருவம் எய்தா அச்சிறுமிகளைப் பராமரிக்க அவர்களைப் போன்ற பக்குவம் இல்லா பருவப் பெண்ணை மணப்பதைவிட விதவையை மணப்பது சிறப்பென்று நிறப்பமான விதவையைத் தேர்ந்து எடுத்ததாய் பதில் கூறியதும் அவரின் செயலைச் செம்மல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டியதை ஹாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரியில் உள்ளது. வளரும் பருவத்தில் குழந்தைகள் உள்ளோர் விதவையைத் திருமணம் செய்வதில் உள்ள நன்மையை நவில்கிறது ஜாபிர் (ரலி) அவர்களி ன் நல்லுரை.
திருமண வயதை அடைந்த பெண்ணிற்குப் பொருத்தமான மணமகன் அமைந்தால் தாமதிக்காது திருமணம் முடித்திட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிக்கிறார் அலி (ரலி) நூல்- திர்மிதீ. உரிய வயதில் திருமணம் செய்வதும் விரைவில் பிள்ளை பெறுவதும் குறைந்த மஹரைப் பெற்று கொள்வதும் பெண்களுக்கு வளத்தை உண்டாக்கும் என்று உத்தம நபி ( ஸல்) அவர்கள் உரைத்ததை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை பைஹகீ நூலில் காணலாம். கன்னிபெண்ணை அவளின் பொறுப்புதாரியான தந்தை திருமணம் புரிந்து மணமகனோடு மனம் ஒன்றி வாழ வற்புறுத்தலாம். ஆனால் விதவையை அவ்வாறு வற்புறுத்த கூடாது. விதவை விரும்பினால் விரும்பியவரும் சம்மதித்தால் நிம்மதியாய் வாழ திருமணம் நடத்த நந் நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை மிஷ்காத்தில் காணலாம்.
பலரறிய நடக்கும் பகிரங்க திருமணம் ஊருக்கு ஊர் சென்று பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தில்லுமுல்லு நடத்தும் கில்லாடிகளின் தொல்லைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும். 
உங்களுடைய " மனைவிகளை உங்களிலிருந்தே உருவாக்கி உங்களுக்கு இடையில் அன்பையும் நேசத்தையும் உண்டாக்கி இருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று'' என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 30-21 ஆவது வசனம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மூடி மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுதல், எச்செயலையும் செய்யுமுன் திட்டமிட்டு செய்தல், மனம் ஏற்காதவற்றை மறத்தல், சிறுகுறைகளைப் பெரிதுபடுத்தாது விட்டு விடுதல், திருமண வாழ்வை வளமாக்கும்.
திட்டமாக பல தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவி மக்களைக் கொடுத்தோம் என்ற குர்ஆனின் 13-38 ஆவது வசனம் இறைதூதர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழ்ந்ததை அகிலத்திற்கு அறிவிக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை கதிஜா (ரலி) காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் பால்குடி தாயார் ஹலீமா வீட்டிற்கு வந்ததொழுது மாமியாருக்குரிய மரியாதை செய்து ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு அன்பளிப்பு வழங்கினார்கள். 
ஏழ்மைக்கு அஞ்சி திருமணம் செய்யாதவர் என் வழியிலிருந்து வழுவியவர் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைத் தாரிமி என்னும் நூலில் காணலாம். திருமணம் செய்தவர்கள் வறுமையில் இருந்தால் அல்லாஹ்வின் கருணையால் செல்வம் பெறுவர். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் விசால கொடையாளி என்று விளம்புகிறது விழுமிய குர்ஆனின் 24-32 ஆவது வசனம். வறுமைக்குப் பயந்து வாலிப வயதில் திருமணம் செய்யாதிருப்பது கூடாது. திருமணம் பொருள் தேட தூண்டும். தூண்டலினால் துலங்காது ஓங்கும் உழைப்பு வறுமையை விரட்டிவிடும். வளம் வந்து சேரும் வாழ்வில்.
இறைமறை இயம்புகிறபடி இறைத்தூதர் நடந்து காட்டிய நந்நெறியில் திருமணம் புரிந்து பெரும் பயன்களைப் 
பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com