பிள்ளைகளால் பெறும் பேறுகள்

விதை விதைத்தவன் விளைச்சலை எதிர்பார்ப்பது போல வலை விரித்தவன் விலை போகும் மீனைக் காண மீளா பார்வை பார்ப்பது போல மரத்தை நட்டவன் உரத்தை இட்டு வளர்த்து காய் காய்ப்பதை பழம் பழுப்பதை
பிள்ளைகளால் பெறும் பேறுகள்

விதை விதைத்தவன் விளைச்சலை எதிர்பார்ப்பது போல வலை விரித்தவன் விலை போகும் மீனைக் காண மீளா பார்வை பார்ப்பது போல மரத்தை நட்டவன் உரத்தை இட்டு வளர்த்து காய் காய்ப்பதை பழம் பழுப்பதை விழுவதை விழி மூடாது பார்ப்பது போல இலைக்குமுன் அமர்ந்தவன் பரிமாறும் உணவை உற்சாகமாய் உற்று நோக்குவது போல திருமணமானவன் குழந்தை பெற விரும்புவது இயற்கை. பிள்ளைப்பேறு திருமண பயன். "" உங்களின் மனைவியர் உங்களின் வேளாண்மை பூமி. அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்ற குர்ஆனின் 2-223 ஆவது வசனம் முறையான திருமணத்தில் முறையாய் குழந்தைகளைப் பெற வேண்டும். முறை தவறி குழந்தைகளைப் பெறுவது கூடாது என்று கூறுகிறது. 
"முதுமையிலும் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் அருளிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்ற குர்ஆனின் 14-39 ஆவது வசனம் இயம்பும் இப்ராஹீம் நபியின் வரலாற்றில் ஒரு நிகழ்வு. இப்ராஹிம் நபி அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லை. எனினும் ஏக இறைவன் அருளில் அதிருப்தி இன்றியும் நிராசை உறாதும் நீண்ட துஆவை (இறைஞ்சுதலை) விடாது கேட்டார்கள். ஏறத்தாழ அவர்களின் 99 ஆவது வயதில் அவர்களின் இரண்டாவது மனைவி ஹாஜிரா இஸ்மாயில் நபியையும் அவர்களின் 100 வயதிற்கு மேல் முதல் மனைவி சாரா இஸ்ஹாக் நபியையும் பெற்றனர். இரு குழந்தைகளையும் முதிர்ந்த வயதில் பெற்ற இப்ராஹீம் நபி நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்ததைப் புகல்கிறது இந்த வசனம்.
தாவூது நபிக்குச் சுலைமான் நபியை மகனாக அளித்ததையும் அந்த நல்ல அடியார் மெய்யாகவே ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வை நோக்கி நின்றதையும் ஜக்கரியா நபிக்கு யஹ்யா நபியை மகனாக அளித்ததையும் கூறும் குர்ஆனின் 38-30 ஆவது வசனத்திற்கு விளக்கம் அளித்த இப்னு அப்பாஸ் (ரலி) நமது சந்ததியினர் அல்லாஹ்வின் நன்கொடைகளில் உள்ளவர்களாவார்கள். அல்லாஹ் நாடியவருக்குப் பெண்களை நன்கொடையாக அளிப்பான்; இன்னும் அவன் நாடியவருக்கு ஆண்களை அளிப்பான் என்று தெளிவுபடுத்தினார்கள். ஒருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் மூன்று முறை பிள்ளை பெறும் தகுதியற்ற அழகும் பணமும் குடும்ப பாங்கும் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டபொழுது குழந்தை பெற தகுதியுள்ள பெண்ணையே மணமுடிக்க மாநபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிப்பவர்- மஃகல் பின் யசார் (ரலி) நூல் -நஸஈ; அபூதாவூத், ஹாகிம்.
"வறுமைக்குப் பயந்து உங்களின் குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள். நாம் உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்'' என்ற குர்ஆனின் 17-31 ஆவது வசனத்தை மீண்டும் 16-32 ஆவது வசனம் உறுதிபடுத்துகிறது. உங்கள் மனைவிகளில் இருந்து சந்ததிகளையும் பெயரன் பெயர்த்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவையும் புகட்டுகிறான். அவர்கள் பொய்யானவைகளை நம்பி அருள்கொடைகளை நிராகரிக்கின்றனர். பிள்ளைகளைப் பெற வைத்து பிள்ளைகளிலிருந்து பெயரன் பெயர்த்திகளையும் பெற வைத்து அனைவருக்கும் அரிய உணைவையும் அளிக்கும் அல்லாஹ்வைப் புறக்கணித்து பொய்யை நம்பும் புல்லர்களைச் சாடுகிறான். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் அரபியர் பெண் குழந்தைகள் பயனற்றவர்கள். உண்டு வளர்ந்து மணமுடித்த பிறகு கணவனோடு சென்று விடுவார்கள். அவர்களால் பெற்றோருக்குப் பயனில்லை என்று பெண் குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் உடைய அரபிகளுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை. 
குழந்தைகளால் மனித வாழ்வில் மகிழ்வு ஏற்படுகிறது. பிள்ளைகளால் உணவு பெருக்கத்திற்கு அருள்புரிகிறான் அல்லாஹ். நற்சிந்தனைகள் ஊறி ஒளிரும் குழந்தைகள் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நற்றொண்டு ஆற்றுவர்.
நாம் பெற்றிடும் சாலிஹான பிள்ளைகள் நம் மறுமையின் சேமிப்புகள் என்று செப்புகிறது செம்மறை குர்ஆனின் 2-223 ஆவது வசனம். பருவம் எய்தாத குழந்தைகள் இறந்துவிட்டால் அவ்விறந்த குழந்தைகளின் மீது காட்டிய பிரியத்தால் பெற்றோர்கள் மறுமையில் சொர்க்கம் செய்வர் என்று செம்மை நபி (ஸல்) அவர்கள் செப்பியதைச் செவியுற்று புவியோருக்குப் புகல்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
இம்மை மறுமை இரண்டிலும் பெற்றோர்களாகிய நம்மின் நல்வாழ்விற்கு செம்மையாய் செயல்படும் குழந்தைகளைப் பெற்று பேறுகளைப் பெறுவோம். பேராளன் அல்லாஹ்வும் அருள்புரிவான்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com