நம்பியவரை கை தூக்கி விடும் தொரவி கயிலாசநாதர்!

பல்லவர்கள், சோழர்கள் என மன்னர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட திருக்கோயில், இன்று அடியார்களின் ஆதரவுக்கரம் வேண்டி காத்து நிற்கின்றது!
நம்பியவரை கை தூக்கி விடும் தொரவி கயிலாசநாதர்!

பல்லவர்கள், சோழர்கள் என மன்னர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட திருக்கோயில், இன்று அடியார்களின் ஆதரவுக்கரம் வேண்டி காத்து நிற்கின்றது!

சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான கயிலாசநாதர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம், தொரவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. தன் இருப்பிடம் சிதிலமடைந்திருந்தாலும், தன்னை நம்பி வந்தவர்களைக் கைதூக்கி விடும் பணியினை இன்றும் செம்மையாகச் செய்து வருகின்றார், தொரவி பெரிய நாயகி உடனுறை கயிலாசநாதர்.

தொன்மைச் சிறப்பு: சோழமன்னர் காலத்தில், ராஜேந்திர சோழ வளநாட்டில் புனையூர் நாட்டின் துணை நாடான பனையூர் நாட்டின் ஊர்களுள் ஒன்றாக தொரவி விளங்கியது. பல்லவர்கள், சோழமன்னர்களின் காலம் என்பதற்குச் சான்றாக இக்கோயிலில் அமைந்துள்ள இறை வடிவங்கள் விளங்குகின்றன.

விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. இவை பல்லவர் காலத்தவை என்பது வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அருகேயுள்ள நாகச்சிலையும் பழைமையானதே. இதேபோன்று, இத்தலத்து இறைவன் திருமேனி சோழர் காலத்தைச் சார்ந்தது என்பதையும் அறியமுடிகிறது.

என்றாலும், சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைத்த போது, இதன் வரலாறு கூறும் பல்வேறு கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து காணாமல் போய்விட்டன. இறைவன் திருவருள் கூடி வரும்போது அதுவும் வெளிச்சத்திற்கு வரும்.

இவ்வூரின் மேற்கே அமைந்துள்ள பனையபுரம், சோழநாட்டு ஆளுகையில் குறுநாட்டின் தலைநகரமாக விளங்கியிருந்ததை அவ்வூர் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அவ்வூரில் புகழ் பெற்ற தேவாரத்தலம் இருப்பதும், அவ்வூரில் மன்னரின் அரண்மனை, கோட்டைகள் முதலானவை இருந்ததையும் இப்பகுதியில் அமைந்துள்ள இடங்கள் சான்று கூறுகின்றன.

மண்டபம், கோட்டைமேடு, இராஜாங்குளம், இராணிக்குளம், வண்ணான் பேட்டை, அந்தணர்கள் வாழ்ந்த பார்ப்பனப்பட்டு, மகான்களும் துறவிகளும் வசித்த துறவி ஆகிய பகுதிகளும் ஊர்களும் இவற்றை உறுதி செய்கின்றன. அந்த வகையில் மகான்கள் மற்றும் துறவிகள் வாழ்ந்த விருப்பமான இடமாக விளங்கிய பகுதி துறவியாகும். இன்று இப்பெயர் மருவி, தொரவி என அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு: இவ்வாலயம் வழுதாவூர் நெடுஞ்சாலையினை ஒட்டி விசாலமான பகுதியில் அமைந்துள்ளது. சாலையை ஒட்டிய, இறைவன் சந்நிதி செங்கற்களைக் கொண்டு சுதையால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

எளிய பலிபீடம், எளிய நந்திதேவர் மேற்கு முகமாக இறைவனை நோக்க, மகான்களுக்கும் துறவிகளுக்கும் அருள் வழங்கிய இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், பல்லவர் கால விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அமைந்துள்ளன. வலம் வந்தால் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் சந்நிதி, அதனையடுத்து, பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.

தற்போது திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருவதால், மூலவர் திருவுருவங்கள் அனைத்தும் தனிக் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைவனின் திருவுருவங்கள் பாலாலயம் செய்யப்பட்டு முறையாக வழிபாடும் நடந்து வருகிறது.

கேணீஸ்வரர்: இந்த தொன்மையான ஆலயத்தின் தெற்கே சுமார் 400 மீ தொலைவில் வயல்வெளியின் நடுவே பெரிய வேப்பமரமும் அதன் வேர்ப்பகுதியில் சிவலிங்கத்திருமேனி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் "கேணீஸ்வரர்' என வழங்கப்படுகிறார். இவருடன் மற்றொரு சிவலிங்கம், தட்சிணாமூர்த்தியின் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இதனருகே, லிங்கத்திருமேனி மற்றும் கொம்பு இல்லாத நந்தியின் கல் திருமேனிகள் பூமியில் புதையுண்டு காட்சி தருகின்றன.

இங்கும் ஓர் ஆலயம் இருந்ததாகவும் இதற்கு அருகே பெரிய கேணி (கிணறு) மற்றும் திருக்குளம் இருந்ததாகவும் ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர். கேணியின் அருகே அமைந்த இறைவன் என்பதால் இவர் "கேணீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். கால வெள்ளத்தில் கிடைத்த இத்திருமேனிகளுக்கு வானமே கூரையாக அமைந்துள்ளது.

மகா பெரியவர்: விழுப்புரத்தில் தோன்றிய மகா பெரியவர், இப்பகுதியில் உள்ள ஆலயங்களைத் தரிசித்தபோது, தொரவிக்கும் வருகை தந்து, இவ்வூர் திருக்குளத்தில் நீராடி, இங்குள்ள கயிலாசநாதரை மனமுருகி வணங்கி வழிபட்டதை, இவ்வூர் பெரியவர்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.

ஆலயத் திருப்பணியினைப் புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாக முன்முயற்சி மேற்கொண்டு ஊர்ப் பொதுமக்களின் ஆதரவோடு பணியைத் தொடங்கியுள்ளனர். தற்போது இறைவனின் கருவறைக்கு பிரம்மாண்ட பீடம் தயாராகியுள்ளது.

அமைவிடம்: விழுப்புரம் - திருக்கனூர் - வழுதாவூர் வழித்தடத்தில் விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 12 கி.மீ, தொலைவில் தொரவி திருத்தலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 90252 65394/ 86808 36164.
- பனையபுரம் அதியமான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com