பிரான்மலையில் மங்கைபாகர்!

வரலாற்றுப் புகழ் கொண்ட பறம்பு மலை சங்க காலத்தில் வள்ளல் பாரி ஆண்ட பறம்பு நாட்டின் தலைப்பதியாக விளங்கியது
பிரான்மலையில் மங்கைபாகர்!

வரலாற்றுப் புகழ் கொண்ட பறம்பு மலை சங்க காலத்தில் வள்ளல் பாரி ஆண்ட பறம்பு நாட்டின் தலைப்பதியாக விளங்கியது. புலவர் பெருமான் கபிலர், வள்ளல் பாரியின் உள்ளம் கவர்ந்த உயரன்பராகப் பறம்பு மலையில் பாரியோடு உடனிருந்து பல காலம் வாழ்ந்ததால், பறம்புமலை தமிழ்ப்பதியாகச் சிறந்தது. பெருங்கருணைப் பேரருளாளன் எழுந்தருளியதால் பறம்பு மலை சிவமணம் கமழும் தெய்வத் திருப்பதியாகவும் திகழ்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் திருக்கொடுங்குன்றம் என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞான சம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிகின்றோம். பாண்டிய நாடு சிறப்பிற்குரிய பதினான்கு சிவதலங்களைக் கொண்டுள்ளது. அத்திருத்தலங்களுள் மலைத்தலங்கள் இரண்டு; ஒன்று திருக்கொடுங்குன்றம், மற்றொன்று திருப்பரங்குன்றம். திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இத்தலத்தை பாடியுள்ளனர்.

இத்திருத்தலத்திற்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்குள்ள முருகப்பெருமான் திருநடனம் புரிந்து காட்சி தந்தருளினார் என்பர். திருக்கொடுங்குன்றம் திருத்தலம் இன்று பிரான்மலை என அழைக்கப்பெறுகின்றது. இங்கு எழுந்தருளியுள்ள பெருமான், "திருக்கொடுங்குன்றநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரமுள்ள இம்மலை, பாதாளம், பூமி, கயிலாயம் ஆகிய முப்பெரும் பகுதிகளாக அமைக்கப்பெற்றுள்ளது. மலையின் அடிவாரத்தைப் பாதாளமாகவும் அதற்கு மேல் உயரப் பகுதியை பூமியாகவும், அதன் மேல் உச்சிப் பகுதியைக் கயிலாயமாகவும் கொண்டுள்ள ஆலய அமைப்பு வித்தியாசமானது ஆகும்.

இவ்வாலயத்தில் தேனாடி தீர்த்தம் என்னும் மதுபுஷ்கரணி தீர்த்தக் குளத்தில் தீர்த்தமாடி கொடுங்குன்றநாதரைத் தரிசித்தால் வாய்க்காத மகப்பேறு வந்து வாய்க்கும்; தீராத நோய்கள் உடன் தீர்ந்தொழியும்; செல்வமும், செல்வாக்கும் சேர்ந்துவரும் என்பது ஐதீகம்.

முகமண்டபத்தில் நந்தி கம்பீரமாகக்காட்சி தருகிறது. மகா மண்டபத்துள் சந்நிதிக்கு நேராக மேற்கே நந்தி, பலிபீடம் உள்ளன. மகாமண்டபத்தில் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள ஓர் அபூர்வ மூர்த்தி, "ஜ்வர பக்ந மூர்த்தி!' இவர் மூன்று திருமுகங்களும், நான்கு திருக்கரங்களும் மூன்று திருப்பாதங்களும் கொண்ட சிறப்புமிக்க சிலாரூபமாக விளங்குகிறார். கொடுமையான தீராச்சுரமுற்றோர், இம்மூர்த்தியை ஒரே ஒரு முறை வழிபட்டாலே சுகமடைவர் என்கின்றனர்.

பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோயில் உருவாக்கம் கொண்டுள்ளது. தெற்கு முகமாக உள்ள பைரவர் சந்நிதியின் முன் மண்டபத்தில், மேற்கு தூணில் கருப்பர் சுவாமி, கிழக்குத் தூணில் சன்னாசிக் கருப்பர் சுவாமி ஆகியோர் பைரவ மூர்த்திக்கு முன்னோடிகளாக அமைந்துள்ளனர். பைரவர் நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். வலது திருக்கரங்களில் சூலம், உடுக்கையுடன், இடது திருக்கரங்களில் நாகபாசம், கபாலமும் கொண்டுள்ளார். அருகிலேயே ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது.

பூமித்தளத்திலிருந்து மேல்நோக்கி ஏறியவுடன், மேற்கே லட்சுமி மண்டபமும். கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன. திருக்கயிலாயத்தில் அம்மையப்பர் வீற்றிருந்து அருள்பாலிப்பது போலவே, திருக்கொடுங்குன்றத்திலும் மங்கைபாகராகத் திருமணக் கோலத்துடன் எழுந்தருளியிருப்பதால் இத்திருத்தலம், "தென் கயிலாயம்' என வழங்கப்பெறுகிறது.

24.2.2017 ஆம் தேதி, மகா சிவராத்திரி விழா இங்கு, நான்குகால பூஜைகளுடன் நடைபெறுகிறது. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக பிரான்மலைக்கு பேருந்து வசதி உண்டு. இறங்கியவுடன் கோயில் உள்ளது.
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com