விரும்புவதை விரும்பி வழங்கல்

தனி மனிதனுக்கோ ஒரு குழுவிற்கோ, கூட்டத்திற்கோ, ஓர் சமுதாயத்திற்கோ, ஒரு ஊருக்கோ, பல ஊர்கள் அடங்கிய பகுதிக்கோ பயனுறும் பொருளை அன்பளிப்பாகவோ
விரும்புவதை விரும்பி வழங்கல்

தனி மனிதனுக்கோ ஒரு குழுவிற்கோ, கூட்டத்திற்கோ, ஓர் சமுதாயத்திற்கோ, ஒரு ஊருக்கோ, பல ஊர்கள் அடங்கிய பகுதிக்கோ பயனுறும் பொருளை அன்பளிப்பாகவோ அல்லது நன்கொடையாகவோ நல்கும்பொழுது அப்பொருளை அளிப்பவர் விரும்பும் பொருளாக அப்பொருள் இருக்க வேண்டும். விரும்பும் பொருளையும் விருப்பத்தோடு வழங்க வேண்டும். "நீங்கள் பிரியப்படுவதைச் செலவு செய்கிறவரை நீங்கள் நன்மையை பெற மாட்டீர்கள். ஏதேனும் சிறிய பொருளைத் தானமாக செலவு செய்வதையும் அல்லாஹ் நன்கு அறிவான்'' என்று அருமறை குர்ஆனின் 3-92 ஆவது வசனம் கூறுகிறது.

இறை குர்ஆனின் 2-267 ஆவது வசனம், "நன்னம்பிக்கை உடையோரே! நீங்கள் சம்பாதித்தவற்றில் நல்லவற்றிலிருந்தும் பூமியில் உங்களுக்கு நாம் வெளிப்
படுத்தியவற்றிலிருந்தும் செலவு (தானதர்மம்) செய்யுங்கள். அதிலிருந்து கெட்டதைச் செலவு செய்ய நீங்கள் நாடாதீர்கள்'' என்று எச்சரிக்கிறது. வேண்டா வெறுப்பாய் நிர்ப்பந்தத்தில் கொடுப்பது கூடாது. இக்காலத்தில் உபயோகிக்கும் பொருள்களை உண்ணும் உணவைப் பலநாள்கள் இனி இப்பொருள் அல்லது உணவு தேவைப்படாது என்ற நிலை ஏற்படும்வரை குளிரூட்டியில் (Fridge) வைத்திருந்து அதன்பின் அன்பளிப்பாய் அளிக்கும் இன்றைய நிலை நன்றல்ல.

"உடல்நலம் பொருள் வளம் விரும்பி வறுமை வராது வாழ விரும்புவோர் தர்மம் செய்வதால் விரும்பியதைப் பெறுவர்'' என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி.

மாநபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் திருமணம் முடிந்ததும் வந்தவர்கள் வாழ்த்தி சென்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் வேலையாய் வெளியே சென்றார்கள். தந்தை தாஹா நபி (ஸல்) அவர்கள் வாங்கி கொடுத்த புத்தாடையை அணிந்து பூரிப்புடன் பாத்திமா (ரலி) மட்டும் வீட்டில் இருந்தார்கள். வீட்டு வாயிலில் ஒரு ஏழைப் பெண் ஏதாவது தரும்படி வேண்டினாள். மணமகள் பாத்திமா (ரலி) எடுத்துக் கொடுக்க எதுவும் இன்றி இருந்தார்கள். அந்த ஏழையை ஏறிட்டு பார்த்தார்கள். அப்பெண்ணிடம் நல்ல உடை இல்லை. தந்தை தந்த மனம் மகிழ மணப்பெண்ணாய் அணிந்திருந்த மண ஆடையை மனம் ஒப்பி அந்த ஏழையிடம் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த பழைய உடையை உடுத்திக்கொண்டார்கள். வீடு திரும்பிய திருநபி (ஸல்) அவர்கள் புத்தாடையுடன் மணக்கோலத்தில் அமர்ந்திருந்த மகளைப் பழைய ஆடையில் பார்த்ததும் பதறிவிட்டார்கள். நடந்ததை நவின்றார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். "புத்தாடையையா கொடுக்க வேண்டும். வேறு உடைகளைக் கொடுத்து இருக்கலாமே?'' என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "விரும்பும் பொருளை விரும்பி வழங்க நீங்கள் தானே அறிவுறுத்தினீர்கள். அவ்வாறே வழங்கிவிட்டேன்'' என்ற மகளின் பதிலால் மனம் மகிழ்ந்தார்கள் மாநபி (ஸல்) அவர்கள். 

அரபு நாட்டில் உடும்பு கறியைச் சாப்பிடுவார்கள். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உடும்பு கறியை உண்ண மாட்டார்கள். ஒருநாள் உடும்பு கறி உத்தம நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வந்தது. அதனை அண்ணல் நபி (ஸல்) உண்ணவில்லை. அன்னை ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அக்கறியை ஏழைகளுக்கு எடுத்து கொடுக்க அனுமதி கேட்டார்கள். கேண்மை நபி (ஸல்) அவர்கள் நாம் உண்ணாததைப் பிறருக்குக் கொடுப்பது கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) சர்க்கரையை விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரையை விலை கொடுத்து வாங்கி எல்லாருக்கும் வழங்கி மகிழ்வார். அவரின் நண்பர்கள் சர்க்கரைப் பசி போக்கும் உணவு அல்லவே. பசி போக புசிக்கும் உணவுகளை வாங்கி தரக்கூடாதா? என்று கேட்டனர். அவர் விரும்பி சாப்பிடும் சர்க்கரையை இறைவன் கட்டளைப்படி விலைக்கு வாங்கி வழங்குவதாக பதிலுரைத்தார். 

நாமும் விரும்பி பயன்படுத்தும் பொருள்களை விரும்பி உண்ணும் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) உணவுகளை நாளும் நாடி வருவோருக்கும் தேடிச் சென்று தேவை உடையோருக்கு விருப்பத்துடன் கொடுத்து இறைவன் பொருத்தத்தைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com