அழகிய கூத்தருக்கு ஆனித் திருமஞ்சனம்!

சிதம்பரம் முதல் அனைத்து தலங்களிலுமுள்ள அருள்மிகு நடராஜருக்கு, ஆண்டுக்கு ஆறு முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அழகிய கூத்தருக்கு ஆனித் திருமஞ்சனம்!

சிதம்பரம் முதல் அனைத்து தலங்களிலுமுள்ள அருள்மிகு நடராஜருக்கு, ஆண்டுக்கு ஆறு முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மூன்று நட்சத்திரத்திலும் (சித்திரை-திருவோணம், ஆனி -உத்திரம், மார்கழி - திருவாதிரை), மூன்று கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினங்களிலும் (ஆவணி, புரட்டாசி, மாசி) நடைபெறும். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, ராஜவல்லிபுரம் அருள்மிகு அழகிய கூத்தருக்கு ஆண்டுதோறும் ஆறு தடவைக்கு மேல் அபிஷேகம் நடைபெறுகிறது வெகு சிறப்பு.

சிதம்பரம் கனகசபையில் ஆனந்த தாண்டவம், மதுரை வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவம், திருநெல்வேலி தாமிர சபையில் முனி தாண்டவம், திருக்குற்றாலம் சித்திர சபையில் திரிபுர தாண்டவம், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவம் என ஐந்து சபைகளில் ஐந்து வித தாண்டவங்களை நடத்திக் காட்டியதாக வரலாறு. இந்த ஐந்து சபைகளைக் குறிக்கும் தில்லைக் கலம்பகம் பாடலொன்று:

குடதிசை யதனில் மருவு குற்றாலம் கோதறு சித்திர சபையாம்
குற்றமில் குணக்கின் பழையனூர் மன்றக் குல நவரத்ன மன்றென்பார்
அடல்விடைப் பாகன் நெல்லையம்பதியில் அம்பலம் தாமிர சபையாம்
ஆலவாய் மதுரை வெள்ளியம்பலமாம் அணி தில்லைச் செம்பொன்னம்பலமே.

இந்த ஐந்து தாண்டவங்களைத் தவிர சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் ஸ்ரீமஹாலட்சுமிக்காகக் கெளரி தாண்டவமும், இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவமும் ஆடியதாக ஏழு தாண்டவங்களையும் நூல்கள் கூறுகின்றன.

திருநெல்வேலி தாமிர சபையில் ஆடிய தாண்டவம் படைத்தலையும், மதுரை வெள்ளியம்பலத்திலும், திருப்புத்தூரிலும் ஆடிய தாண்டவங்கள் காத்தலையும், சங்கார தாண்டவம் அழித்தலையும், திருக்குற்றாலத்தில் ஆடிய திரிபுர தாண்டவம் மதைலையும், தில்லையில் ஆடிய ஆனந்த தாண்டவம் ஐந்தொழிலையும் குறிக்கும்.

சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனத்தன்றும்; மார்கழித் திருவாதிரையன்றும் பெருவிழா நடைபெறுகிறது. மூலவரே உற்சவராக விழா காண்பது இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை வெள்ளியம்பலத்தில் பாண்டிய மன்னனின் வேண்டுகோளை ஏற்று கால் மாறி ஆடியது சிறப்பு. இதேபோல் நாகப்பட்டினம் அருகிலுள்ள கீவளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் பத்து திருக்கரங்களுடன் கால் மாறி ஆடிய திருக்கோலம் காணலாம். அட்சய தாண்டவம் ஆடும், இந்த தாண்டவ மூர்த்தியை "சுந்தர தாண்டவ மூர்த்தி' அல்லது "வித்யேச தாண்டவ மூர்த்தி' என்று அழைக்கின்றனர்.

பிரம்மனும் லட்சுமியும் கர தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகானம் இசைக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க, பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும், லோபாமுத்திரையும் கண்டு களிக்கின்றனர். இப்பெருமான் தனது வலது பாத தரிசனத்தை அகத்தியருக்குக் காட்டியதாக வரலாறு. மதுரை வெள்ளியம்பலம், கீவளூர் தவிர குரோம்பேட்டை ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோயிலிலும் கால் மாறி ஆடும் நடராஜரைத் தரிசிக்கலாம். திருவாலங்காட்டில் ரத்ன சபையில் காளியுடன் ஊர்த்துவ தாண்டவமாடினார். இந்த தாண்டவத்தை அருகிலிருந்து காரைக்கால் அம்மையார் கண்டு களிப்பதைக் காணலாம்.

செப்பறை: திருநெல்வேலியிலிருந்து 10 கி.மீ. தொலைவில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ளது செப்பறை. இவ்விடத்திற்கு சத்தியகிரிசாரல், கிஞ்சாவனம், மங்களேஸ்வரம் என்று புராணப் பெயருண்டு. மகாவிஷ்ணு, அக்னி, அகத்தியர், வாமதேவ ரிஷி முதலியோருக்கு நடன தரிசனம் காட்டியதாக வரலாறு.

தல வரலாறு: ஹிரண்யவர்மன் என்ற அரசன் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு, ஒரு வனத்தில் சுற்றித் திரிந்த சமயம், தாகம் ஏற்பட்டு அங்கிருந்து தடாக நீரைப் பருகினான். அப்பொழுது பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் அருளால் இறைவனின் நடனக் காட்சியைத் தடாகத்தில் தரிசனம் செய்தான். தான் பார்த்த காட்சியைச் சித்திரமாக வரைந்து, சிற்பிகளிடம் சிலை ஒன்றை வடிக்கச் சொன்னான். அவ்வமயம் இறைவன் ஒரு துறவி வடிவில் வந்து ஒரு செப்புக் காசினை உலையில் சேர்ப்பித்து விட்டார். திருமேனி ஒரு மாற்றுக் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக ஒரு சிலையை வடிக்கச் செய்தான். இரண்டாவது சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு இறைவன் ஆணையிடவும், முதல் சிலையை தெற்கு நோக்கி அனுப்புமாறும் அசரீரியாக உத்தரவிட்டார். அவரே செப்பறை ஸ்ரீஅழகிய கூத்தர் உலகின் முதல் நடராஜர் என அழைக்கப்படுகிறார்.

மணப்படைவீடு (மணவையை) ஆண்ட அரசன் ராம பாண்டியன். அவன் தினசரி திருநெல்வேலி சென்று, ஸ்ரீநெல்லையப்பரைத் தரிசனம் செய்து வந்தான்.

தாமிரபரணியில் வெள்ளம் காரணமாக சில தினங்கள் செல்ல இயலவில்லை. அப்பொழுது இறைவன் கனவில் நடராஜர் திருமேனி இருக்கும் இடத்தைக் காட்டி, வழிபடுமாறு கூறி மறைந்தார். மன்னன் நடராஜரைக் கண்டு பிடித்து,

ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதி அம்பிகை, நடராஜருக்கும் ஒரு கோயிலைச் செப்பறையில் எழுப்பினான் என்பது வரலாறு.

இத்தலத்தில் உள்ள ஸ்ரீஅழகிய கூத்தர் சந்நிதி செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளதால் இத்தலத்தையும் தாமிர சபையாகக் கருதுகின்றனர். சிதம்பரம், செப்பறை, கட்டாரிமங்கலம், கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம் என்ற ஐந்து இடங்களிலும் உள்ள நடராஜரை ஒரே சிற்பி வடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அழகிய கூத்தப்பெருமானின் தீ ஏந்திய கரமும், உடுக்கை ஏந்திய கரமும் சம நிலையில் இருப்பது இதன் தனிச்சிறப்பு.

அழகிய கூத்தருக்கு ஆனி உத்திரமும், மார்கழித் திருவாதிரையும் சிறப்பான விழாக்கள். வழக்கமாக அனைத்து தலங்களிலும் ஸ்ரீநடராஜருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள் தவிர, இத்தலத்தில் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சிவராத்திரி முதல் காலத்திலும், ஆனித் திருமஞ்சனத்திலும், மார்கழி மாதம் திருவாதிரை விழாவிலும் அதிக அளவில் அபிஷேகம் நடைபெறுகிறது.

சித்திரைத் திருவோணத்தில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் அபிஷேகம் காணும் செப்பறை பற்றி மேலும் தகவல்கள்:
சுவாமி சந்நிதியின் முன்பு உள்ள நான்கு தூண்களில் விநாயகர், முருகன், மகாவிஷ்ணு, பிரமன், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் முதலியோர் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட நடராஜர் சிலையும், விநாயகர் சிலையும் கலைநயம் கொண்டவையாக உள்ளன. ஸ்ரீநெல்லையப்பரும், அன்னை காந்திமதியும் அருள் பாலிக்கின்றனர். தலமரம்: வில்வம்.

மார்கழித் திருவாதிரையன்று பொன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஜடை அலங்காரம், முன்பக்க தரிசனத்திற்கு தீபாராதனை முடிந்தவுடன், பின்னால் ஜடை உள்ள பக்கத்திற்கும் அதே தீபாராதனை உண்டு! ஒரு பக்தையிடமிருந்து ஜடை வாங்கியதன் ஞாபகமாக இந்த அலங்காரம் நடைபெறுவதாகக் கூறுகின்றனர். மார்கழித் திருவிழாவில் தினந்தோறும் நடைபெறும் நடன தீபாராதனை ஆகியவைகளும் இத்தலத்திற்கே உள்ள சிறப்பு.

அருகிலுள்ள ராஜவல்லிபுரத்தில் சுவாமி: ஸ்ரீஅக்னீஸ்வரர், (அக்னி தேவன் வழிபட்டுப் பேறு பெற்றதால் சுவாமிக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று.) அம்பிகை: ஸ்ரீஅகிலாண்டநாயகி. அம்பிகையைப்பற்றி மாதவச் சிவஞானயோகிகள்"செப்பறைப்பதி அகிலாண்டேசுவரி பதிகம்' பாடியுள்ளார்கள்.

பஞ்சலோக நடராஜரும், சிலா ரூப நடராஜரும் ஒரே தலத்தில் இருப்பது சில இடங்களில் மட்டுமே. உதாரணமாக திரு ஆப்பனூர், திருச்சுழி, திருநெல்வேலி, செண்பகராம நல்லூர், செப்பறை மற்றும் பலவாகும். உத்தரகோசமங்கையில் சந்தனக்காப்புடன் உள்ள மரகத நடராஜர், பெரம்பலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில் பஞ்சநதன நடராஜர், திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசத்தில் சந்தனக்காப்புடன் ஓம்கார வடிவில் உள்ள நடராஜர் முதலிய வை சிறப்புடைய நடராஜ மூர்த்தங்களாகும்.

செப்பறையில் அழகியகூத்தருக்கு ஆனித் திருமஞ்சன விழா, 21-6-2017 கொடியேற்துடன் தொடங்கி 30-6-2017 ஆனித் திருமஞ்சனத்துடன் நிறைவுபெறுகிறது. 24 - ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தன்று அபிஷேகம், ஏழாம் நாள் சுவாமி மண்டபத்திற்கு எழுந்தருளல், 29 - ஆம் தேதி காலை அபிஷேகம், ஆராதனை முடிந்து திருத்தேருக்கு எழுந்தருளல், திருத்தேர் வடம் பிடித்தல், மறுநாள் 30 - ஆம் ஆனி உத்திரத்தன்று காலை மகா அபிஷேகம், நடன தீபாராதனை, திருவீதி உலா கண்டு இரவு தாமிரசபைக்குத் திரும்புவார். அழகியகூத்தரின் ஆனித் திருமஞ்சன விழாவில் கலந்துகொண்டு ஆடல்வல்லானின் அருள்பெறுவோம்.
தொடர்புக்கு: 0462-2334943
-மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com