பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நெருப்பு ஜ்வாலை முடிவில் புகையைக் கக்குகிறது; எல்லாப் போகங்களும் துன்பங்களையே இறுதியில் தருகின்றன.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• நெருப்பு ஜ்வாலை முடிவில் புகையைக் கக்குகிறது; எல்லாப் போகங்களும் துன்பங்களையே இறுதியில் தருகின்றன. அதுபோல் மனிதன் நினைக்கும் நிலையான பொருள்களின் தலையில் நிலையாமையும், அழகானவைகளின் முடிவில் அருவருப்பும், சுகமான பொருள்களின் தலையில் துக்கமும்தான் தாண்டவமாடுகின்றன. விஷயங்கள் (லெüகிக இன்பங்கள்) உண்மையில் விஷம் உடையனவாக இருக்கின்றன. அழகிய பெண்கள் காம மயக்கத்தை உண்டாக்குகிறார்கள். நல்ல பொருள் என்று நாம் நினைப்பது முடிவில் கெட்ட பொருள் ஆகிவிடுகிறது. இவைகளில் உழல்பவன் எவன் அழியாமல் இருக்க முடியும்? செல்வங்கள் எல்லாம் ஆபத்துடையனவாக இருக்கின்றன. சுகம் துக்கத்தில் முடிவடைகிறது. வாழ்க்கையும் மரணத்தை அடைவதற்காகவே இருக்கிறது. மாயை செய்யும் ஆட்சி இது.
- வசிஷ்டர்

• வறுமை நிலையில் இருக்கும்போது அன்னதானம் செய்பவர்களையும், செல்வச் செழிப்பு இருக்கும்போது தான தர்மங்கள் செய்பவர்களையும், போர்க்களத்தில் தைரியம் உள்ளவனையும் கடனைத் திருப்பியளிப்பதில் ஒழுக்கம் கொண்டவனையும் நான் வணங்குகிறேன். எந்த மனிதன் தனக்கான கடமைகளைச் சுயநலம் இல்லாத முறையில் சிறப்பாகச் செய்கிறேனோ, அவன் அத்தகைய செயல்களால் இறைவனை வழிபடுபவனாவான்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்

• மீனாட்சி தாயே! நீரில் மூழ்குபவன் உயிர் தப்புவதற்குத் தனக்குக் கிடைத்ததைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வது இயற்கை. அது போல, சம்சாரமாகிய கடலில் மூழ்கித் தத்தளிக்கும் நான் கரையேற உன் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டேன். உன் மிருதுவான பாதத்தை நான் இப்படி நோகச் செய்யும் என் குற்தைப் பொறுத்தருளும்படி பிரார்த்தனை செய்கிறேன்.
- ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் (ஆனந்தஸாகர ஸ்தவம்)

• ஒருவன் தன்னுடைய வருமானத்தில் மிகச் சிறிய ஒரு பாகமாவது ஏழைகளுக்கென்று ஒதுக்கிவைத்து, அதை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத நலனைத் தேடிக்கொள்ள வேண்டும்.
- அருணகிரிநாதர்

• பக்தியுடன் போற்றும் பொருளான ஸ்ரீ ராமனிடம் பக்தி செலுத்தாதவர்கள், நாம் ராமபக்தி செலுத்தும்போது குறுக்கிட்டுத் தடுப்பவர்கள் யாரோ, அவர்கள் நமக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் நமக்குக் கோடி மடங்கு விரோதிகள் ஆவர்.
- துளசிதாசர்

• பத்தினிப் பெண்கள், தூய பக்தர்கள், தத்துவஞானிகள் ஆகியவர்களை நடுநடுங்கச் செய்தவர்கள் ஒரு வருஷத்திற்குள் தங்கள் செல்வத்தோடு அழிவார்கள்; இது சத்தியம்.
- திருமூலர்

• இந்த உலகம் ஆன்மாக்களுக்கு ஒரு கர்மபூமி. இந்தக் கர்மபூமியை அடைந்தும் ஒருவன், தன் துர்பாக்கியத்தில் நற்கருமங்களைச் செய்யாமல் இருப்பானானால், அவன் சந்தனக்கட்டையை எரித்து வைடூரியப் பானையில் எள்ளுப்பதரைச் சமைப்பவனாகவும், எருக்கிலைப் பஞ்செடுப்பதற்காகப் பொற்கலப்பையில் எருதுகள் கொண்டு தரையை உழுபவனாகவும், கற்பூரச் செடியைப் பறித்துக் கொத்தவரைச் செடிகளைச் சுற்றி வேலி கட்டுகிறவனாகவும் ஆகிறான்.
- பர்த்ருஹரி

• உலக மக்களே! நீங்கள் உதவாக்கரைகளாக நடமாட வேண்டாம். மனித சமுதாயத்திற்கு உதவி செய்யும் உத்தம மனிதர்களாக வாழுங்கள்; வாழ முயற்சி செய்யுங்கள்.
- பட்டினத்தார்

• பகவானுடைய சந்நிதியிலும், ஆச்சாரியரது முன்னிலையிலும், பக்தர்கள் முன்பும் கால்களை நீட்டக் கூடாது. இவர்களுடைய உறைவிடங்கள் இருக்கும் திசையிலும் கால்களை நீட்டிப் படுக்கக் கூடாது.
- ஸ்ரீ ராமானுஜர்

• நியாயமான ஆகாரத்தை உட்கொண்டு, உறுதியான நிலையில் நின்று, ஒரே நோக்கத்தோடு செய்யும் தியானமே உண்மையான வழிபாடாகும். இப்படி இல்லாவிட்டால் அது கணவன் இல்லாத மனைவிபோல் வெறுமையானது.
- துளசிதாசர்

• ஒவ்வோர் உயிரும் தான் பிறவி எடுக்க நேர்ந்த கர்மங்களையே அனுபவித்துக் கழிக்க வேண்டும். ""மேலும் மேலும் வினைகள் வந்து சேரும்படி மனம் செல்லும்போது தடுத்து ஆட்கொள்ள வேண்டும்'' என்று சிவபெருமானை வணங்கி வரம் பெற வேண்டும்.
- சேக்கிழார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com