நீருக்குத் தீரா போரா? 

பனி, மலை, கடல், ஆறு, கணவாய், ஏரி, குளம், கிணறு, வாய்க்கால் ஆகிய இயற்கையான நீர் இறைவனால் அருளப்பட்டவை
நீருக்குத் தீரா போரா? 

பனி, மலை, கடல், ஆறு, கணவாய், ஏரி, குளம், கிணறு, வாய்க்கால் ஆகிய இயற்கையான நீர் இறைவனால் அருளப்பட்டவை; அகிலத்தில் வாழும் அனைவருக்கும் பொதுவானவை என்று புலப்படுத்துவதே உலக நீர் நாள் 22.3.2017. உலகைப் படைத்து பாதுகாக்கும் அல்லாஹ் உலகுக்குத் தேவைப்படும் நீரைத் தேவையான காலத்தில் தேவைக்கு ஏற்ப வானிலிருந்து மழையாக பொழிய செய்கிறான். பொழியும் மழையை வழிய விட்டு விரையம் செய்வதாலேயே நீரில்லா நிலை ஏற்படுகிறது. இதனையே இதமாய் கூறுகிறது குர்ஆனின் 15-22 ஆவது வசனம். "காற்றுகளைச் சூல் கொடுப்பனவாக அனுப்பினோம். இன்னும் வானத்திலிருந்து நீரை இறக்கி அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம். மேலும் நீங்கள் அதனைச் சேமித்து வைப்பவர்களாக இல்லை.''

நீரை வீணாக்காது தேக்கும் முறையில் தேக்கி தேவையான காலத்தில் தேவையுடையோரின் தேவை நிறைவேற ஆவன செய்ய வேண்டும். நீர் எல்லாருக்கும் உரியது. ஒரு பகுதியில் தேக்கி வைத்த நீரை மறுபகுதியில் உள்ளோருக்கு மறுப்பது கூடாது என்ற நபிகளின் நன்மொழி, "தன் தேவைக்கு மேல் மீதமான தண்ணீரைத் தடுத்தவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்; பேசமாட்டான்'' அறிவிப்பவர் - அபூஹுரைரா ரலி) நூல்- புகாரி.

நீர் வழங்குவதிலிருந்து ஊருக்கு உலகுக்கு உரிய நன்மைகள் செய்வோர் மறுமையிலும் "நிச்சயமாக இறை அச்சம் உடையவர்கள் சொர்க்கத்திலும் நீரருவிகளுக்கு அருகில் இருப்பார்கள்'' என்று எழில் மறை குர்ஆனின் 51-15 ஆவது வசனம் கூற 76-6, 77-41 ஆவது வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

"உங்களின் நீர் பூமியில் உறிஞ்சப்பட்டு விட்டால் பிறகு ஒலித்தோடும் நீரின் ஊற்றை உங்களுக்கு கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?'' என்ற குர்ஆனின் 67-30 ஆவது வசனம் நீர் பூமியில் ஒரு பக்கம் உறிஞ்சப்பட்டால் இன்னொரு பக்கம் அந்நீர் பூமியில் ஊற்றாக வெளிப்பட்டு மக்களுக்குப் பயன்படும் என்பதை நயமாய் நவிலும் இந்த வசனத்தின் இறுதியில் கவனித்தீர்களா? என்று கேட்பது நீர் நிலைகளை தூர்த்து ஊற்றுகளை அடைத்து உயர்ந்த கட்டடங்களை அயர்ந்திடாது கட்டினால் எப்படி நீர் மீண்டும் பூமியில் ஊறும் என்பதை உணர்த்துவதற்காகவே!

மூசா நபி அவர்களைப் பின்பற்றியோருடன் தீஹ் என்னும் பகுதிக்குச் சென்றபொழுது நீரின்றி தாகத்தால் தவித்தனர். இறைவன் கட்டளைப்படி மூசா நபி பாறையில் கைத்தடியால் அடிக்க பன்னிரண்டு நீர் ஊற்றுகள் உதித்தோடின. நீரைப் பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள் என்று அம்மக்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதை அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 2-60 ஆவது வசனம். இவ்வசனத்தில் நீருக்குத் தீரா போரிடக்கூடாது என்று அன்றே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எகிப்தில் ஓடும் நைல் நதி 360 கால்வாய்களாகவும் சிற்றாறுகளாகவும் பெரிய ஆறுகளாகவும் பிரிந்து எகிப்தை வளப்படுத்துகிறது. இந்நதி நீரால் எகிப்து அன்றும் இன்றும் விவசாய நாடாக விளங்குகிறது. இதன் கிளை நதிகள் (1) நஃருல் மலிக் (2) நஃருல் துலூன் (3) நஃருல் திம்யாத் (4) நஃருல் துணைஸ்.

இறைமறை குர்ஆனின் 25-48 ஆவது வசனத்தில் மழைக்கு முன் காற்றை நற்செய்தியாக அனுப்புவதாக அல்லாஹ் அறிவித்து சுத்தமான நீரை இறக்குவதாக இயம்புகிறான். இந்த வசனத்தில் இறைவன் காற்று மாசாகாது காத்து, சுத்தமான மழை நீரைப் பெற நம்மை எச்சரிக்கிறான். முற்காலத்தில் நம் முன்னோர்கள் காற்றின் போக்கறிந்து இக்காற்று மழைக்காற்று என்று சொல்வது இங்கு ஒப்பிடற்குரியது. வறண்ட பூமியை உயிர்ப்பிக்கவும் மனிதர்களும் மிருகங்களும் பருகவும் மழையை இறக்குவதாக இறைவன் 25-49 ஆவது வசனத்திலும் மேகத்திலிருந்து மழையை இறக்குவதாக 6-99, 78-14 ஆவது வசனங்களிலும் கூறுகின்றான். மேகத்திலிருந்து மழையை பொழிய செய்து பூமியை பசுமையாக்குவதாக 22- 63 ஆவது வசனத்திலும் மழை நீரால் மக்களுக்குத் தாவரங்களிலிருந்து தானியங்களை உண்டாக்கி மக்களுக்கு உணவையும் விலங்குகளுக்கு இலை தழைகளையும் தருவதாக 78-15 ஆவது வசனத்திலும் கூறுகிறான். மழை நீரால் உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் பயனுறுவதை "அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தான். உங்களுக்கு அருந்தும் நீரும் அதில் உள்ளது. அந்நீரால் மரங்கள் வளர்கின்றன. மேய்ச்சலுக்கும் அது உதவுகிறது'' என்று 16-10 ஆவது வசனம் பகர்கிறது. 

மேகத்திலிருந்து மழையை பொழிவித்து ஊற்றுகளாக ஓட செய்வதாக ஓரிறைவன் அல்லாஹ்வின் அறிவிப்பு 39-21 ஆவது வசனத்தில் உள்ளது. முற்காலத்தில் நாடோடிகள் மழை நீரால் நிரம்பியுள்ள பகுதிகளில் கூடாரம் அடித்து தங்கினர். அந்நீர் வற்றியதும் நீருள்ள வேறிடம் தேடி சென்றனர். வற்றாத நீரோடும் நதி பகுதிகளில் விவசாயம் செய்து நிரந்தரமாக தங்க துவங்கியதும் நதி கரைகளில் நகரங்கள் தோன்றின. நதி நீர் நாகரிகம் உருவாகியது. 

எந்நீரும் நந்நீரே என்று நந்நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் பல நேரங்களில் நவின்றார்கள். நீரின் தூய்மை கெடுவது மக்களின் கவன, பாதுகாப்பு குறைவினாலேயே என்பது நாம் நன்கறிந்த உண்மை. ஓடாது தேங்கி நிற்கும் நீங்கள் குளிக்கும் நீரில் சிறுநீர் பெய்வதைப் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தகவலைத் தருகிறார் அபூஹுரைரா (ரலி) நூல் -புகாரி, அபூதாவூத், முஸ்லிம், திர்மீதி, நஸஈ. கடல் பயணத்தின் பொழுது குடிக்க குறைவான நீர் இருக்கும் பொழுது அந்நீரைக் குடிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டு தொழுவதற்காக உளு என்னும் கை கால் முகம், காது, மூக்கு முதலிய உறுப்புகளைக் கடல் நீரில் சுத்தம் செய்ய அனுமதித்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் தூயது என்றும் ஆய்ந்து சொன்னதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ, மு அத்தா, நஸஈ.

கி.பி. 791 ஹிஜ்ரி 174 ஆவது ஆண்டில் மக்காவிற்கு வந்த பாக்தாத் அரசர் ஹாரூன் பஷீதின் மனைவி ஜுபைதா மக்கத்து மக்கள் தேவைக்குரிய நீர் கிடைக்காமல் தவிப்பதைப் பார்த்தார். உடனே மக்கமா நகரின் ஹரம் பகுதியிலிருந்து 36 கி.மீ. தொலைவில் ஹுனைன் அருகே இருந்த வாதி நுஃமான் பகுதியிலிருந்து வாய்க்கால் வெட்டி மினா, வாதிஉர்னா அரபா (ஆரஃபா) வழியாக மக்காவை அடைந்து மக்கத்து மக்களின் நீர் தேவை நிறைவேற செய்தார்.

ஹிஜ்ரி 1421 ஆம் ஆண்டு வரை இந்த வாய்க்காலில் நீர் நிரம்பி ஓடியது. 1247 ஆண்டுகள் மக்கத்து மக்கள் இவ்வாய்க்கால் நீரைப் பயன்படுத்தினர். அதன்பின் சவூதி அரேபிய மன்னர் அல்மலிக் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். வாய்க்கால்கள் வறண்டன.

மக்காவிற்கு புனிதப் பயணம் செய்வோர் அந்த வறண்ட வாய்க்கால்களை இன்றும் காணலாம். 2002 ஹஜ் புனித பயணத்தின் பொழுதும் 2015 உம்ரா புனித பயணத்தின் பொழுதும் அந்த வறண்ட வாய்க்கால்களை நான் பார்த்தேன். இந்த வாய்க்காலின் வரலாற்றை ஹிஃபாவுல் கராம் என்ற நூலில் காணலாம். 

இயற்கையில் இறைவன் நிறைக்கும் நீரைத் தக்க முறையில் தேக்கி வைத்து வீணாக்காது மிக்க கவனமாய் பயன்படுத்தி மீதி நீரைப் போதிய அளவில் அண்டை அயலாரும் அருகிலுள்ள பகுதியினரும் பக்கத்து நாடுகளும் பாங்காய் பயன்படுத்தி வளமாய் நலமாய் வாழ வழிவகுப்போம். நீருக்குத் தீரா போர் வேண்டாம்!
- மு.அ. அபுல் அமீன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com