பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

"அகிம்சை, சத்தியம், கோபமின்மை, தவம் இயற்றுதல், தானம் செய்தல், மனதையும் ஐம்புலன்களையும் அடக்குதல், தெளிந்த தூய அறிவு, எவரிடமும் குற்றம் பார்க்காமல் இருத்தல்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* "அகிம்சை, சத்தியம், கோபமின்மை, தவம் இயற்றுதல், தானம் செய்தல், மனதையும் ஐம்புலன்களையும் அடக்குதல், தெளிந்த தூய அறிவு, எவரிடமும் குற்றம் பார்க்காமல் இருத்தல், எவரிடமும் பொறாமையின்மை, மிகவும் சிறந்த ஒழுக்கம் ஆகியவை தர்மம்' என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறியிருக்கிறார். 
- மகாபாரதம், சாந்தி பர்வம், 109, 12

* காற்றில் உணர்ச்சி போலவும், கரும்பில் வெல்லக்கட்டி போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் ரசம் போலவும், பூவில் வாசனை போலவும் எங்களுடைய இறைவன் எங்கும் கலந்து நிற்கிறான். 
- திருமந்திரம்

* நல்லவர்கள் தங்கள் நலத்தைப் பிறர் நலத்திற்காகவும் தியாகம் செய்வார்கள். நடுத்தரமானவர்கள் தங்கள் வயிற்றையும் பிறர் நலத்தையும் கருதிச் செயலாற்றுவார்கள். கடையர்களோ, வயிற்றிற்காகப் பிறர் நலத்தைக் கெடுப்பார்கள். அவர்கள் மனித உருவத்தில் வந்த அரக்கர்கள் எனலாம். ஆனால் சிலர் தங்களுக்கும் ஒரு லாபமில்லாமல் பிறர் நலத்தைக் கெடுக்கிறார்களே, இவர்களை என்னவென்று அழைப்பது என்று எனக்குப் புரியவில்லை.
- பர்த்ருஹரியின் நீதிசதகம்

* பிரம்மன், அதிகம் பணக்காரனாக இருக்க வேண்டும் என்றும் குறைந்த செல்வம் உடையவனாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவன் தலையிலும் எழுதுகிறான். அதைப் பின்பற்றியே மனிதன் பாலைவனத்தில் இருந்தாலும், மேருமலையின் சிகரத்தில் இருந்தாலும் அதிகமான செல்வத்தையோ, குறைந்த செல்வத்தையோ பெறுகிறான். ஆகையால், மனிதனே அன்று அவன் எழுதியபடித்தான் கிடைக்கும் என்று தைரியம் கொண்டு நீ வாழ வேண்டும். பொருளை வேண்டிப் பணக்காரன் முன்னிலையில் நின்று பல்லை இளித்து உன் தாழ்ந்த நிலையைக் காட்டிக்கொள்ளாதே. சிறுகுடம் கிணற்றில் விட்டாலும், கடலில் இட்டாலும் ஒரே அளவான நீரைத்தானே தன்னிடம் கொள்கிறது அதுபோல் மனிதன் தன் விதிப்படியே எங்கே சென்றாலும் ஒரே மாதிரியான பலனையே பெறுவான்.  
- பர்த்ருஹரியின் நீதிசதகம்

* சத்தியம், ஆயிரம் குதிரைகளைப் பலியிட்டு யாகம் செய்வதற்குச் சமமானது. சத்தியம்தான் தலையாய பிரம்மம்.  
- ஸ்மிருதி

* மரத்தை அசைத்தால் அதன் நிழல் எல்லாம் அசையும். அதுபோல், இறைவன் ஆட்டிவைத்தால் இந்த உலகமெல்லாம் அவன் வழி ஆடும்.
- ஞானரத்னாவளி

* விரோதி தனக்கு அனுகூலமாயிருந்தாலும் அவனுடன் நட்புகொள்ளக் கூடாது. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும். ஆகையால் எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும், பூமியின் மேல் கப்பலும் செல்லுமா? இதனால் விரோதிகளிடம் நம்பிக்கை வைக்கக் கூடாது.
- பஞ்சதந்திரம்

* தன்னுடைய நல்ல நடத்தையால் தகப்பனைத் திருப்தி செய்பவனே மகன். தன் கணவனுடைய நன்மையையே விரும்புபவள் மனைவி. துன்பத்திலும் இன்பத்திலும் சமமாக நடப்பவனே நண்பன். இந்த மூன்றும் இந்த உலகில் புண்ணியவான்களுக்குத்தான் அமைகின்றன. 
- பர்த்ருஹரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com