ஸ்ரீ ராமனும் ஸ்ரீகிருஷ்ணனும்!

ஸ்ரீராமபிரான் பிறந்தது நண்பகல் பன்னிரண்டு மணிக்கு; ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ நள்ளிரவு பன்னிரண்டு
ஸ்ரீ ராமனும் ஸ்ரீகிருஷ்ணனும்!

ஸ்ரீராமபிரான் பிறந்தது நண்பகல் பன்னிரண்டு மணிக்கு; ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு! இருவரில் ஒருவர் நண்பகல், மற்றவர் நடுநிசி. அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் அரண்மனையில் ராமன் பிறக்க, கொடியவனான கம்சனின் காராக்கிருகத்தில் கிருஷ்ணன் பிறக்கிறான். ராமபிரானை எளிதில் அறிந்து கொள்ள முடியும். கிருஷ்ண பரமாத்மாவை அறிந்து கொள்வது மிகமிகக் கடினம்.

ரகு குல திலகம் ராமபிரானின் கதையையும் சந்திர குல திலகம் கிருஷ்ணனின் சரிதத்தையும் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காகச் சான்றோர்களும் பெரியோர்களும் காலங்காலமாய்ச் சொல்லி வருகின்றனர். 

ராமபிரான் உத்தம புருஷனாக விளங்கி, "மர்யாதா புருஷோத்தமன்' எனப் புகழப்படுகிறார். ஸ்ரீ ராமரின் வழியைக் கடைப்பிடித்து நடந்தால் நமது மனதிலுள்ள ராவணன் என்ற காமன் மரித்துப் போய்விடுவான். அதன்பிறகே நம் உள்ளத்தில் கிருஷ்ண பரமாத்மா வந்து குடிகொள்வார். ராவணன் என்ற காமனை அடித்து விரட்டுபவர்தாம் "கிருஷ்ண லீலை'யை தரிசித்து இன்புற முடியும்.

மனதுக்கு அதிபதி சந்திரன். புத்திக்கு அதிபதி சூரியன். இவ்விருவரையும் வழிபடுவதனால் புத்தியில் கொஞ்சம் போல் தங்கியிருக்கும் ஆசையும் வாசனையும் அழிகிறது. வாசனை அறவே அழிந்தாலன்றி மோகம் அகலாது. மோகம் அகன்றாலன்றி முக்தி கிடைக்காது. மனம் ஒடுங்கினால் முக்தி கிடைக்கும். மனதிலும் புத்தியிலும் இருக்கும் வாசனைகள் பகவானை அடைவதற்குத் தடையாக இருக்கின்றன. உத்தம புருஷனான ராமன் வழியில் சென்று கிருஷ்ணனைப் பெறுவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். 

மனதில் ராமன் விஜயம் செய்தாலன்றி கிருஷ்ணன் வருவதில்லை! ராமாவதாரத்திற்குப் பின்னரே கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது. எவர் உள்ளத்தில் ராமன் வருவதில்லையோ, அவருடைய ராவணனாகிய காமம் மரிப்பதில்லை. ராவணன் மரிக்கும் வரை கிருஷ்ணன் வருவதில்லை. ராமபிரானின் வழியை மரியாதையைப் பின்பற்றி ஒழுகினாலன்றி காமம் மரிக்காது. நாம் எந்தவொரு சம்பிரதாயத்தைத் தழுவி நடந்தாலும்  ராமபிரானுடைய வழியைக் கடைப்பிடித்து நடக்காத வரையில் பேரானந்தம் கிடைக்காது. 

ராமனை வழிபடுவது என்றால் அவரது நடத்தையைப் பின்பற்றி ஒழுக வேண்டும். ராமபிரானின் சரித்திரம் அனைவரும் பின்பற்றத் தக்கது. அது மிகவும் சுலபம். ஆனால் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ண லீலையைப் பின்பற்ற முடியாது. மிகவும் கடினம்! அதை நாம் கேட்கத்தான் முடியும்.

ராமபிரான் பரிபூரண புருஷோத்தமனாக லட்சிய புருஷனாக நமக்கு லட்சியத்தைக் காட்டுகிறார். ராமனின் தாயன்பு, தந்தையன்பு, சகோதரர்கள் அன்பு, குருமார்களிடத்தில் வைத்திருக்கும் அன்பும் பணிவும் உற்றார் உறவினர்களிடத்தில் வைத்திருக்கும் அன்பு, ஏகபத்தினி விரதம் முதலியவை எல்லாமே நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை. 

ஸ்ரீ கிருஷ்ணர், காளிங்கன் என்னும் கொடிய நாகத்தின் மீது நர்த்தனம் செய்து அதனை அடக்கினார்; விரல்களாலேயே கோவர்த்தன மலையை தாங்கினார்; கொடிய அசுரர்களை கொன்றொழித்தார்; கிருஷ்ணனின் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமானால் பூதனை என்னும் கொடிய அரக்கி கொடுத்த விஷத்தை அப்படியே பருகினார். அதுபோன்று நம்மால் செய்ய முடியுமா?
ஸ்ரீ ராமர், தன் அவதார ரகசியத்தை ஈசுவர அம்சத்தை மறைத்து வைத்திருந்தார்; மனிதர்களுடன் கலந்து வாழ்ந்தார்; மானிட உயிர்களுக்கு மானிட தர்மத்தையும் நீதி நெறிமுறைகளையும் காண்பிக்கவே அவரது அவதாரம் நிகழ்ந்தது; அவர் தம் வாழ்நாள் முழுவதும் எந்தவொரு நியமத்தையும் மரியாதையையும் மீறியதில்லை. நேர்மையான நடத்தைகளைக் கொண்டிருந்தார். 

மனிதனாக வாழ்ந்த ராமபிரான் கல்நெஞ்சனாகி சீதையை தள்ளி வைத்தது உலகத்திற்கு லட்சிய வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கிருஷ்ணன் வெண்ணெய் திருடினான்; இளகிய மனங்களை கொள்ளை கொண்டான்! ராமரின் பால பருவ லீலைகள் மிகமிக எளிமையானவை. சுலபமானவை. ஆனால் கிருஷ்ணனின் பால லீலைகள் ஆழ்ந்த ரகசியமானவை. 

மகாவிஷ்ணு "ராமாவதாரம்' செய்தது ராவணனை வதம் செய்வதற்காக மட்டுமல்ல; மனிதனாக வாழ்ந்து மானிட தர்மத்தை நிலைநாட்டவே அவதரித்தார்! தசரத மன்னனுக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். அந்த நால்வரும் தர்மத்தை உலகில் நிலைநாட்டவே அவதரித்தார்கள். 

தர்மத்தை நான்கு வகைகளாகச் சொல்வார்கள். அதில் முதலாவது, "சாமானிய தர்மம்!' அடுத்தது, "சேஷ தர்மம்!' பின்னர், "விசேஷ தர்மம்!'
கடைசியாக, "விசேஷதர தர்மம்!' ஆகும். சாமானிய தர்மங்களைப் பின்பற்றி வாழ்ந்து காட்டியவர் ராமர். ராமாவதாரத்தில் இந்தத் தர்மங்கள் உலகுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
- டி.எம். இரத்தினவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com