தீமையைத் தடுக்கும் திருமணம்

காம உந்துதலால் தீமையை விழைந்து தீய வழியில் சென்று மாய வலையில் மயங்கி விபச்சாரத்தில் வீழ்ந்து நோய்க்கு ஆளாகி நொந்து வெந்து மடிந்து மாயும் வேதனை ஏற்படாது காத்து தீமையை தடுப்பதே திருமணம்.
தீமையைத் தடுக்கும் திருமணம்

காம உந்துதலால் தீமையை விழைந்து தீய வழியில் சென்று மாய வலையில் மயங்கி விபச்சாரத்தில் வீழ்ந்து நோய்க்கு ஆளாகி நொந்து வெந்து மடிந்து மாயும் வேதனை ஏற்படாது காத்து தீமையை தடுப்பதே திருமணம். ஆன்றோர்களால் ஆய்ந்து தோய்ந்து சான்றளித்த நல்லறமே இல்லறம். திரிதல் இன்றி புரிதலோடு பொருந்தி வாழும் அருந்தவ குடும்பமே திருமணத்தின் பெரும் பயன்.

"உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோருக்கும் அவர்கள் ஏழையாக இருப்பினும் திருமணம் செய்து வையுங்கள். அல்லாஹ் அருளைப் பொழிந்து பொருளைக் கொடுப்பான்'' என்ற குர்ஆனின் 24-32 ஆவது வசனப்படி மாமறை வழியில் மணம் புரிந்து வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருமணம் என் வழிமுறை என்னை விரும்புவார் என் நடைமுறையை பின்பற்றட்டும். வறுமைக்கு அஞ்சி திருமணத்தை வெறுப்பவன் என் சமூகத்தினன் அல்லன் என்று எடுத்துரைத்தார்கள்.

"திருமணம் புரியும் பொருள் பெறாதோர் அல்லாஹ்வின் அருளால் பொருளைப் பெறும் வரையில் உறுதியாக கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கட்டளை இடுகிறது சட்டம் வகுத்த குர்ஆனின் 24-33 ஆவது வசனம். உங்களில் வசதியுள்ளோர் திருமணம் புரிந்துகொள்ளுங்கள். திருமணம் திருட்டு பார்வையை தடுக்கிறது. உணர்வு உறுப்புகளைக் காக்கிறது. வசதியற்றோர் வளம் பெறும் வரை நோன்பு நோற்க வேண்டும். நோன்பு காமத்தின் வேகத்தை குறை செய்யும். "சக்தியற்றவன், தீச் செயல்களில் மூழ்கி கிடப்பவன் ஆகிய இருவரைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் திருமணம் தடை செய்யப்படவில்லை'' என்று செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதை உரைக்கிறார்கள் உமர் (ரலி).

திருமணத்தின் முதல் நன்மை குழந்தைப்பேறு. உலகில் மனித இனம் நிலைத்து வாழ சந்ததி பெருக்கம் வேண்டும். சந்ததிகளுக்கு முந்திய குடும்ப பாரம்பரியம் வேண்டும். பாரம்பரியம் பரவ விரவ திருமணம் உரிய முறையில் புரிய வேண்டும். "ஒரு மனிதனின் நற்செயல்கள் திருமணத்தால் நிறைவுறுகின்றன'' என்று நந்நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி).

இறைவன் மனிதனைப் பலவீனமாக படைத்தான் என்ற குர்ஆனின் 4-28 ஆவது வசனத்திற்கு அறிஞர் முஜாஹித் பெண்கள் குறித்து பலவீனமானவன் மனிதன் என்று விளக்கம் அளித்தார். "ஒரு மனிதன் காம உணர்வால் உந்தப்பட்டால் அவனின் பகுத்தறிவில் மூன்றில் இரு பகுதிகளை இழந்து விடுகிறான்'' என்று பய்யான் பின் துஜைஹ் என்ற பெரியார் கூறுகிறார். தடுமாறி தவறான வழியில் செல்லாது மனிதனைக் காக்கிறது திருமணம். 

"உங்கள் மனைவியருடன் நன்முறையில் வாழுங்கள். ஏதேனும் ஒரு குறையை கண்டு வெறுத்து முற்றிலுமாக ஒதுக்காதீர்கள். நீங்கள் வெறுக்கின்ற குணத்திலும் செயலிலும் அல்லாஹ் பல நன்மைகளை நாடியிருப்பான்'' என்றுரைக்கிறது குர்ஆனின் 4-19 ஆவது வசனம். இவ்வசனம் அருளப்பட்டபின் கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவை? என்று ஹகீம் இப்னு மு ஆவியா (ரலி) கேட்டபொழுது கேண்மை நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் உண்ணும் பொழுது உங்களின் மனைவியையும் உண்ணச் செய்யுங்கள். நீங்கள் புத்தாடை வாங்கும் பொழுது மனைவிக்கும் புதிய உடைகளை வாங்கி உடுத்த செய்யுங்கள். மனைவியின் தவறை உங்கள் வீட்டிற்குள் எடுத்துரைத்து திருத்துங்கள். மற்றவர்களுக்கு மத்தியில் மனம் புண்பட பேசி மதிப்பைக் குறைக்காதீர்கள்'' என்று கூறியது மிஷ்காத் என்னும் நூலில் உள்ளது. மனைவி பிள்ளைகளோடு ஒன்றாய் அமர்ந்து உண்ணும்பொழுது அக்குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருளை அள்ளி பொழிகிறான் என்று மொழிகிறார் அறிஞர் சுப்யான்.

ஒழுக்கமுள்ள மனைவி தற்காத்து தற்கொண்டானைப் பேணி பொற்புடைய நற்செயல்களில் ஈடுபட செய்கிறாள் என்று அறிஞர் அபூசுலைமான் கூறினார். குடும்ப வாழ்வில் பொருளீட்டுவது மனைவி மக்களைக் காப்பாற்றுவது சந்ததியைப் பெருக்குவது மனைவியின் கோப தாபங்களைப் பொறுத்துக் கொள்வது இறை வழியே. இறைவனின் நிறை அருளைப் பெறும் மறை நெறியே. 

என் பெண்ணை மணம் புரிய பலர் பெண் கேட்கிறார்கள். நல்ல மணமகனை எப்படி தேர்வு செய்வது? என்று ஒருவர் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் பெயரன் ஹசன் (ரலி) அவர்களிடம் கேட்டார். "இறைவனை அஞ்சி நல்ல வழியில் வாழ்பவனுக்கு கேட்டவரின் மகளை மணமுடித்திட நல்லுரை பகர்ந்தார்கள் ஹசன் (ரலி). 

திருமணத்தை வெளிப்படையாக செய்ய செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதை அறிவிக்கிறார் ஆயிஷா (ரலி) நூல்- திர்மிதீ. திருமணம்  இரு குடும்பத்தினர் உறவு ஊரறிய நிகழ வேண்டும். ரகசிய திருமணங்கள் நிறைவுறாமல் நிலைகுலைவதை நிறையவே காண்கிறோம். அதனால்தான் மணமக்கள் நிறை வாழ்வு வாழ இறையருளை இறைஞ்சி வாழ்த்தினார்கள் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். "அல்லாஹ் உங்களுக்கு வளத்தை வழங்குவானாக! உங்கள் இருவரையும் நன்மையில் சேர்த்து வைப்பானாக!'' என்று வாழ்த்தியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ.

கன்னிப் பெண்ணையோ விதவையையோ அவளின் ஒப்புதலின்றி மணமுடிப்பது கூடாது என்று கூறினார்கள் கோமான் நபி (ஸல்) அவர்கள். அறிவிப்பவர் -அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து தெரிந்து ஒப்புதலுடன் புரியும் திருமணமே பொருந்தி வாழும் பொற்புடையதாக அமையும். 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு உரோமத்தால் நெய்யப்பட்ட ஒரு போர்வையையும் ஒரு தண்ணீர் துருத்தியையும் இத்கர் என்ற தோல் துண்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு தலையணையையும் திருமணப் பரிசாக அளித்ததை அறிவிக்கிறார் அதாஃ இப்னு யஸôர் (ரலி) நூல் - நயஈ. இறைவனை இறைஞ்சி மாநபி (ஸல்) அவர்கள் வழியில் மணமக்களை வாழ்த்துவதோடு சிறு பரிசுகளும் வழங்கலாம். வரதட்சணை அறவே கூடாது. மணமகன் மணமகளுக்கு மஹர் கொடுப்பது மாற்ற முடியாதது. ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பேணி முறையோடு திருமணம் செய்து நிறை வாழ்வு வாழ இறைவன் அருள்புரிவானாக!
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com