அறியாது செய்யும் பாவம்

அறிஞர் லுக்மானுல் ஹகீம் (ரஹ்) அவர்களின் மகனுக்குக் கூறிய அறிவுரை. (1) பாவமன்னிப்பு கோருவதை தள்ளிப்போடாதே.
அறியாது செய்யும் பாவம்

அறிஞர் லுக்மானுல் ஹகீம் (ரஹ்) அவர்களின் மகனுக்குக் கூறிய அறிவுரை. 
(1) பாவமன்னிப்பு கோருவதை தள்ளிப்போடாதே. காலம் கடத்துவதால் இரு ஆபத்துகள் ஏற்படும். (2) திருந்தாது, திருந்த முயற்சிக்காது தொடரும் பாவ செயல்கள் உள்ளத்தை இருளாக்கும். அந்த இருள் நீங்காத, நீக்கமுடியாத கறையாக மாறிவிடும். (3) நோயுற்று இறப்பு நெருங்குகையில் உள்ளத்தைத் தேய்த்து கழுவி கறை அகற்ற அவகாசம் கிடைக்காது.

சிறு வயதில் யூசுபு நபியை ஓநாய் தின்று விட்டதகாக பொய் கூறி தந்தையை ஏமாற்றி வந்த யூசுபின் சகோதரர்கள் யூசுப் நபி மிஸ்ர் நாட்டின் அரசராய் இருப்பதை அறிந்து வந்து தந்தை யாகூப் நபியிடம் தெரிவித்தனர். அப்பொழுது யூசுப் நபியின் சகோதரர்கள் யாகூப் நபியிடம் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி விட்டதாகவும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவும் வேண்டினர். யாகூப் நபி மிகவும் மன்னிக்கும் அன்புடைய அல்லாஹ்விடம் பிழை செய்த பிள்ளைகளை மன்னிக்குமாறு வேண்டுகிறேன் என்றுரைத்த வரலாற்றை வான்மறை குர்ஆனின் 12-94 முதல் 98 வரை உள்ள வசனங்கள் உரைக்கின்றன.

மன்னிப்பு கேட்கும் உரிமையை உலகில் வாழும் மனிதனுக்கு வழங்கிய அல்லாஹ் மன்னிப்பை மறுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்தும் இறைமறை குர்ஆனின் கூற்றுகள், ""அல்லாஹ் அடியார்களின் மன்னிப்பு மன்றாட்டத்தை அங்கீகரிக்கிறான். பாவங்களை மன்னித்து கிருபை செய்கிறான்'' (9-104) இக்கூற்றை 42-25 ஆவது வசனம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ""அல்லாஹ் மன்னிப்பு மன்றாட்டத்தை ஏற்று பாவங்களை மன்னிப்பவன் (40-3) ""அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், அன்புடையோன்'' (85- 14) இவ் வசனத்தில் வரும் அடியார்கள் மீது அன்புடையோன் என்று பொருள்படும் அல்வதூது என்ற அரபி சொல்படி அடியார்களுக்கு அதிக வளங்களையும் நலங்களையும் நல்கி அடியார்களை விரும்புபவன் அல்லாஹ் என்று விளக்கம் அளிக்கிறார் அறிஞர் ஸஹ்லு (ரஹ்).

"உங்களின் இறைவனிடத்தில் மன்னிப்பு கேளுங்கள். நிச்சயமாக அவன் பிழை பொறுப்பவனாக இருக்கிறான்'' (71-10) திர்மிதீ நூலில் உள்ள இப்னு உமர் (ரலி) அறிவித்த நபி மொழியின்படி உயிர் பிரியும் பொழுது ஏற்படும் இழுப்புவரை அடியாரின் பாவமன்னிப்பை நிச்சயமாக ஒப்புக் கொள்பவன் அல்லாஹ். ஆனால் ""அல்லாஹ் அவனுக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான்'' என்று மாமறை குர்ஆனின் 4-116 ஆவது வசனம் கூற, 4-48 ஆவது வசனம் ""நிச்சயமாக அல்லாஹ் இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.

எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கின்றனரோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தைப் புரிகிறார்கள்'' என்று உறுதி படுத்துகிறது.

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு உரியவன் என்றுணர்ந்து அவனை மட்டுமே தொழுது வணங்கி, பாவங்களை விட்டு விலகி பரிசுத்தமாய் வாழ்வோம். அறியாது செய்யும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான்.
- மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com